பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உரை தமிழை மதத்திலிருந்து பிரிக்கச் சொன்னார், பெரியார்
கழகத்தின் சார்பில், களப்பணி யாளர் களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு திருச்சியில் ஜூலை 23-25 வரை நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் “பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு” என்ற தலைப்பில் தமிழை மதத்திலிருந்து பிரித்தால் தான் மொழி தமிழரின் தன்மானத்துக்கு அடையாளமாக முடியும் என்று பெரியார் கூறியதை விளக்கி கழகப் பரப்புரை செய லாளர் பால் பிரபாகரன் ஆற்றிய உரை.
பெரியார் என்று கூறினாலே, ‘தமிழுக்கு எதிரானவர்’ என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்பட்டே வருகிறது. முதலில் பெரியார் தமிழரே இல்லை. அவர் ஒரு கன்னடர். கன்னடர் எப்படி தமிழுக்கு தொண்டாற்ற முடியும் என்றும் விமர்சனங்களை வைக்கிறார்கள். பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறி விட்டார் என்று மணியரசன் போன்ற அறிவுஜீவிகளெல்லாம் கூறி வருகின்றனர். பெரியார் ஏன் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தார் ? தமிழர் கழகம் என்று வைத்திருந்தால் தமிழர் விடுதலை சாத்தியமாகியிருக்குமே என்றெல்லாம் இந்த அறிவுஜீவிகள் பேசுகிறார்கள். மேலும், எல்லைப் போராட்டத்தில் பெரியார் கலந்து கொள்ளவில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பெரியார் ‘தமிழுக்கு எதிரி’ என்று வைக்கப்படுகிறது. பெரியார் தமிழைப் பற்றி என்ன கூறியிருக்கிறார் என்பதை விட மொழி குறித்து பெரியார் என்ன பார்வை வைத்திருந்தார் என்பதை நாம் பார்க்க வேண்டும் .
பெரியார், “பொதுத் தொண்டாற்றுபவனுக்கு நாட்டுப் பற்று இருக்கக் கூடாது, மொழிப் பற்று இருக்கக் கூடாது, கடவுள் பற்று இருக்கக் கூடாது, மதப் பற்று இருக்கக் கூடாது, சாஸ்திரப் பற்று இருக்கக் கூடாது, ஜாதிப் பற்று இருக்கக் கூடாது; மொத்தத்தில் மனிதப் பற்றைத் தவிர வேறு எந்த பற்றும் இருக்கக் கூடாது” என்றார். எனக்குத் தேவையெல்லாம் தமிழரின் நலமும், சுயமரியாதையும் தானே தவிர மொழியைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை என்கிறார் பெரியார்.
தமிழ் மொழியில் வடமொழி சொற்கள் கலப்பதால் இழிவு ஏற்படுகிறது, எனவே தமிழ் மொழியுடன் வேறு மொழி கலப்பு ஏற்படலாகாது ஆரியக் கலப்பு ஏற்பட்டால் இழிவாக இருக்கும் என்கிறார் பெரியார். விடுதலையில் 30.06.1938இல், “தமிழ் பழக்க வழக்கம், சுதந்திரம், மானம் ஆகியவற்றை உணர்த்தும் தமிழ் சொற்கள் எங்கே இருக்கிறது?” தமிழ்நாட்டில் உள்ள பேச்சு வழக்கில் தமிழனுடைய பழக்க வழக்கத்தை கூறுகிறபடி, தமிழனுடைய சுதந்திரம், மானம் ஆகியவற்றை உணர்த்துகிற தமிழ் சொற்கள் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார். வடமொழிச் சொற்களான, விவாஹம் போன்ற சொற்களை நாம் ஏற்றுக் கொண்டால், சடங்குகள் போன்றவற்றை நாம் ஏற்றுக் கொண்டதாக அர்த்தம். கலியாணம் என்ற வார்த்தையில் அது இல்லை. ஆனால் வடமொழி சொற்களான விவாஹம் என்ற சொல்லை நாம் ஏற்றுக் கொண்டால் புரோகித முறையை நாம் ஏற்றுக் கொண்டவராகிறோம். புரோகித முறையை ஏற்றுக் கொண்டால். ஆண், பெண் பேதம் அங்கே நிலவுகிறது, எனவே தமிழன் அடிமை என்கிற நிலைமை ஏற்படுகிறது ஆகவே மொழியில் கலப்பு இருக்கக் கூடாது என்பது பெரியாரின் கருத்து.
தமிழ்நாட்டில் இந்தி மொழி புகுத்துவதால், தமிழ் மொழி கெட்டுவிடாது. ஆனால், தமிழ் மொழிதான் கெட்டுவிடாதே தவிர தமிழர்கள் கெட்டு விடுவார்கள் என்கிறார் பெரியார். எனவே பெரியார் மொழியை புனிதமாக பார்க்க வில்லை. அந்த மொழி பேசக்கூடிய மக்களின் சுயமரியாதையை, வளர்ச்சியைத் தான் பார்க்கிறார்.
தமிழ் மொழி வளர்ச்சியடைய வேண்டு மானால், தமிழ் மொழியில் இருந்து மதத்தைப் பிரிக்க வேண்டும் என்கிறார். “தமிழ் மொழி ஒரு காலத்தில் உயர்ந்த மொழி யாகத்தான் இருந்தது. வடமொழி கலப்பு ஏற்பட்டு தமிழ் மொழியின் நிலை கெட்டு விட்டது. குறிப்பாக தமிழ் மொழி மதச்சார்புடையவர்களிடம் சிக்கி விட்டது. சைவர்களிடத்தில் தமிழ் சிக்கிவிட்டது. சைவர்கள் தங்களது தேவைகளுக்காக வடமொழி சொற்களில் இருந்து பல சொற்களை எடுத்து புகுத்தி விட்டனர்” இங்கே இருக்கும் பல மன்னர்கள் ஆரிய கருத்தை ஏற்றுக் கொண்டனர். அந்த ஆரியக் கருத்துக்களை விளக்க தமிழில் சொற்கள் கிடையாது. அதற்காக வடமொழிகளை தமிழில் புகுத்தி விட்டார்கள். இந்த சைவத்தையும், ஆரியத்தையும் தமிழில் இருந்து பிரித்து விட்டால் பழந்தமிழ் கிடைத்து விடும் என்கிறார் பெரியார்.
பல தமிழறிஞர்களைப் பார்த்திருக்கிறோம், தமிழ் மொழியின் பெருமைகளை மட்டுமே பேசுவர் எழுதுவர். ஆனால் பெரியார் ஏன் இந்த மொழி வளர்ச்சியடையவில்லை என்று சிந்தித்தார். மதத்தில் தமிழ் சிக்கிவிட்டதால் வளர்ச்சியடைய வில்லை எனவே மதத்தை விடு என்றார். தமிழில், திருக்குறள், ஆத்திச்சூடிப் போன்ற நீதி நூல்களை புறந்தள்ளி விட்டு, புராணங்களையும், இதிகாசங் களையும் பாடங்களாக வைத்துவிட்டார்கள். தமிழ் மொழி உலக மொழிகளுடன் போட்டி போட வேண்டுமானால் தமிழைப் புனரமைக்க வேண்டும். தமிழைப் புனரமைக்க வேண்டுமானால் மதத்தை மொழியில் இருந்து பிரித்து வைக்க வேண்டும் என்று இவ்வாறு 26.01.1926இல் ‘குடிஅரசில்’ பெரியார் எழுதி யிருக்கிறார்.
“தமிழனின் அறிவிற்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் இந்த தமிழ்ப் பண்டிதர்களும், சைவமும் தான். இந்த தமிழ் பண்டிதர்கள் பார்ப்பானைப் போல் உச்சிக் குடுமி வைத்துக் கொண்டு பட்டை விபூதி பூசிக்கொண்டு கதைக்கு உதவாத போலிக் கதைகளை நம் குழந்தைகளுக்கு போதித்து விட்டார்கள். திருக்குறளை பரப்பு வதற்குப் பதில், திருவிளையாடல் புராணங் களையும், தேவார திருவாசங்களையும், புராண, இதிகாச கதைகளையும் மக்கள் மீது சுமத்தி விட்டார்கள்” என்று குறிப்பிடுகிறார்.
அந்த இலக்கியங்களில் என்ன இருக்கிறது? பெண்ணடிமைத்தனம் இருக்கிறது. சிலப்பதி காரத்தில் என்ன இருக்கிறது; பெண்ணடிமைத்தனம் மட்டும் தான் இருக்கிறது.
நீதி நூல்களான நாலடியார் போன்றவைகளை இந்து மதம் என்கிற மகா சமுத்திரம் முழுங்கி விட்டது என்றும் மற்றொரு இடத்தில் பெரியார் குறிப்பிட்டுள்ளார். எனவே பெரியார் தொடர்ந்து மொழியில் இருந்து மதத்தைப் பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே வருகிறார். ஏனென்றால் மொழியில் புராணக் கருத்துகள் உள்ளன. அவை துளியும் அறிவுக்கு பொருந்தாத செய்திகள். அதுமட்டுமில்லாமல், மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வையும் புகுத்துகிறது. அறிவியல் பூர்வமாக மொழியை மாற்ற வேண்டுமானால் மதத்தை பிரிக்க வேண்டும், எனவே இப்படி அறிவியல் பூர்வமான மொழியாக தமிழ் வரவேண்டும் என்று எந்த தமிழ்ப் பண்டிதராவது உதவ செய்திருக்கிறார்களா என்றால் ஒருவரும் அப்படி செய்யவில்லை என்கிறார். பல பண்டிதர்கள் மதப் பிரசங்கள் செய்வதற்காகவே தமிழை கற்றுள்ளனர். மதத்தை, பார்ப்பனக் கருத்துக்களை பரப்புவதற்குத்தான் தமிழைப் பயன்படுத்தினார்களே தவிர தமிழ் மொழி வளருவதற்காக எந்த பண்டிதரும் எதுவும் செய்யவில்லை. இன்னும் கடுமையாக, “தமிழ்ப் பண்டிதர்கள் தங்களது புத்தியை மதத்திற்கு பறிகொடுத்துவிட்டார்கள்” என்று கடிந்தும் பெரியார் கூறுகிறார். மதத்தை மட்டும் பிரித்தால் போதாது பிற மொழி சொற்களையும் பிரிக்க வேண்டும். வட மொழி சொற்களை ஏன் பிரிக்க வேண்டும் என்பதற்கு ஒன்றை கூறுகிறார், ஜாதி என்ற ஒரு சொல் இருக்கிறது. இது தமிழ் சொல்லா என்றால் கிடையாது. ஜாதி என்ற சொல்லுக்கும் தமிழுக்கும் சம்மந்தமில்லை. அப்படியானால் ஜாதிக்கும், தமிழனுக்கும் சம்மந்தமில்லை என்கிறார். எனவே வடமொழியை தமிழ் மொழியில் ஏற்றுக் கொண்டதனால் இழிவும் சேர்ந்து கொண்டது. தெவசம், திதி, கல்யாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம் இதில் எதாவது தமிழ் வார்த்தைகளா ? அல்லது இந்த வடமொழி வார்த்தைகளுக்கு இணையான எதவது தமிழ் வார்த்தைகள் உண்டா என்றால் இதுவரை இல்லை. இந்த சொற்களெல்லாம் நம்தை அடிமைப் படுத்துகிற சொற்களாக இருக்கிறது, என்கிறார்.
கன்னிகாதானம் என்பது தமிழ் வார்த்தை அல்ல. தமிழில், “வாழ்க்கைத் துணை நலம்” என்ற வார்த்தையைத் தான் பயன்படுத்துகிறார்கள். மோட்சம் என்பது தமிழ் வார்த்தையும் கிடையாது, மோட்சம் தமிழனுக்கு சொந்தமும் கிடையாது. ஆனால் இந்த மோட்சத்திற்காக, தமிழர்கள் பொருளை செலவழிக்கின்றனர். எனவே இந்த மூட நம்பிக்கையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் வடமொழியை நீக்க வேண்டும் என்கிறார். பதிவிரதா இருந்தால் சதிவிரதா இருக்க வேண்டும். அப்படியும் இல்லை. இப்படி பல உதாரணங்களை பெரியார் அடுக்கிக் கொண்டே போகிறார். இந்த வடமொழியால் தான் நம்மை சூத்திரன் என்றும் கூறுகிறான். இந்த சூத்திரன் என்ற வார்த்தைக்கு தமிழ் நீதி நூல்களில் ஏதேனும் ஒரு ஆதாரம் காட்ட முடியுமா ? ஆனால் வடமொழிகளில் ஆயிரம் ஆயிரம் ஆதாரங்களை காட்ட முடியும். இந்த சூத்திரன் என்ற வார்த்தைகள்கு கடவுள்களே சாட்சியாக இருக்கிறார்கள். ஆனால் தமிழ் மொழியில் இல்லை என்று பெரியார் எடுத்துக் காட்டுகிறார்.
பெரியார் முழக்கம் 18082022 இதழ்