கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையில் பீமாராவ்-சந்தியாராணி இணையேற்பு விழா
24-04-2022 ஞாயிறு மாலை 4.00 மணியளவில் பெங்களூர் ஹோட்டல் கேபிடல் அரங்கில் தாமரை வேணி – ஜார்ஜ் இணையரின் மகன் பீமாராவ் க்கும் மங்கம்மா-புஷ்பராஜ் இணை யரின் மகள் சந்தியாராணிக்கும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் இணையேற்பு விழா நடைபெற்றது.
மணவிழா மேடையில் பெரியார், அம்பேத்கர் படங்கள் சுயமரியாதைத் திருமணம் என்ற எழுத்துகளோடு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்வின் தொடக்கத்தில் நிமிர்வு கலையகத் தோழர்களின் பறையிசை எழுச்சி யோடு முழங்கியது.
சிறப்பு அழைப்பாளர்களாக பெங்களூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் சமதா தேஷ்மானே, ஒடுக்கப்பட்டோர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஜிகானி சங்கர், மனநல மருத்துவரும் சமூக செயல்பாட்டாளருமான டாக்டர் பத்மாக்ஷி லோகேஷ், முனியஜினப்பா, லோகேஷ் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
முனைவர் சமதா தேஷ்மானே பேசும்போது, தான் தாலியில்லாத சடங்கில்லாத திருமணத்தை 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திக் கொண்டு நலமாக வளமாக வாழ்ந்து வருவதை எடுத்துக்கூறி, வேத, புராண, சாத்திர புரட்டுகளை விரிவாக எடுத்துரைத்தார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று உரையாற்றிய பின்னர் உறுதி மொழி கூறச்செய்து சுயமரியாதை இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார். மணமகனும் மணமகனின் தந்தையும் கருப்பு உடையில் இருந்தனர்; இது தாலி இல்லா திருமணமும் கூட.
கற்பி ஒன்றுசேர் அமைப்பு நாக ரத்னா நிகழ்வை தொகுத்து வழங்கிய தோடு, நன்றியுரையும் ஆற்றினார்.
தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கழக தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் – தமிழ்ச்செல்வி, திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு, மாநகரத் தலைவர் தனபால், தோழர்கள் திலகவதி மோகன் மற்றும் தோழர்கள் பழனி, சித்தார்த்தன், தயாளன், சரவணன் உள்ளிட்ட பெங்களூர் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் திரளாகப் பங்கேற் றிருந்தனர்.
நிகழ்வின் சிறப்பாக மணமகனின் தந்தையாரும், கற்பி, ஒன்று சேர் அமைப்பின் தலைவருமான ஜார்ஜ் நடத்திவரும் ஆதரவற்றோர் இல்லத் தில் இருந்து முதிய பெண்கள் இருவர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக் கப்பட்டு இணையர்களுக்கான மாலைகளை அவர்களின் கைகளால் எடுத்துக் கொடுத்து இணையேற்பு விழாவை துவக்கி வைத்தனர்.
பெரியார் முழக்கம் 28042022 இதழ்