பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாதன் 95ஆவது அகவை நாள் விழா

திவிக ஈரோடு தெற்கு மாவட்ட ஆலோசகரும், பெரியாரின் பெருந் தொண்டரும், பெரியார் விருதாளருமான இனியன் பத்மநாதன் 95 ஆவது அகவை நாள் விழா, திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக 06.03.2022 ஞாயிறன்று மகிழ்வும், நெகிழ்வும் சூழ கொண்டாடப்பட்டது.

விழாவின் வரவேற்புரை யை மாவட்ட அமைப்பாளர் பெ.கிருஷ்ணமூர்த்தி வழங்க கழகத்தின் மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் இதுபோன்ற நிகழ்வின் அவசியத்தையும், மூத்த கழகச் செயல்பாட்டாளர்களை அடையாளங்கண்டு அவர்களை போற்ற வேண்டியது பற்றியும் உரையின் வழியே பகிர்ந்து கொண்டார்கள்.

மாவட்டச் செயலாளர் யாழ் எழிலன், ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் நாத்திகஜோதி, வேணுகோபால், வேல்முருகன், ராசிபுரம் பிடல் சேகுவேரா, சுமதி, விருதுநகர் செந்தில், கடலூர் போதி சத்வா, திருப்பூர் தனபால், திமுக தொழிற் சங்கத்தைச் சார்ந்த இராவணன் உள்ளிட்ட பிற மாவட்டக் கழகத் தோழர்களும் வருகை தந்து இனியன் பத்மநாதன் அய்யா அவர்களை வாழ்த்தினர்.

பின் தெற்கு மாவட்டத் தோழர்கள் ஆளுயர மலர் மாலை அணிவிக்க,  சத்தியமூர்த்தி, மணிமேகலை, ரங்கம்பாளையம் கிருஷ்ணன், பிரபு, கணேசன், சென்னிமலை கதிர், இனியவன், சாரதி, கரூர் சண்முகம், வடிவேல் ஆகியோர் பயனாடை அணிவித்து தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பிறகு இவ்விழாவிற்கு தலைமையேற்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த தோழர்கள் பலரை நினைவுபடுத்தியும், அவர்கள் பெரியாரியல் கொள்கை வளர ஆற்றிய அருந்தொண்டுகளையும், பல்வேறு வரலாற்று செய்திகளுமென ஒரு நிறைவான சிறப்புரையைத் தந்து வாழ்த்தி அமர்ந்தார். விழா குறித்தும், தம் தந்தையரின் செயல்பாடு பற்றியும் ஓர் உணர்வுப்பூர்வமான உரையினை விழா நாயகரின் மகளான தோழர் வசந்தி வழங்கினார்.

இறுதியாக நிறைந்த மனதோடும் தளுதளுத்தக் குரலோடும் தாம் பெரியாரின் மீதும், அவர்தம் கொள்கை மீதும் கொண்ட பற்றையும் பெரியார் அவர்களோடு தனது பயணத்தையும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீதான தாம் வைத்திருக்கும் அளவற்ற அன்பையும், மரியாதையையும் தோழர்கள் அறிந்திடும் வண்ணம் உணர்வுமிகு ஏற்புரையை வழங்கி அனைவருக்கும் தன் நன்றியினை தெரிவித்தார் பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாதன்.

ஆசிரியர் சிவக்குமார் நன்றியுரையோடும், பிரியாணி விருந்தோடும் விழா இனிதே நிறைவுற்றது.!

பெரியார் முழக்கம் 17032022 இதழ்

You may also like...