ஈரோட்டில் கழகப் பெண்கள் சந்திப்பு
திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றம் இணைந்து நடத்திய “பெண்கள் சந்திப்பு” நிகழ்வு 5.2.2023 ஞாயிறு அன்று ஈரோடு பிரியாணிபாளையம் உணவக அரங்கில் நடைபெற்றது. ஈரோடு மணிமேகலை நிகழ்விற்கு தலைமையேற்று சுவையான கவிதை நடையில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திருப்பூர் கார்த்திகா வரவேற்புரையாற்றினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடக்கவுரையாற்றினார். பெரியார் தனது இயக்கத்தில் பெண்களுக்கு அளித்த முக்கியத்துவம் பற்றியும் பெரியார் நடத்திய மாநாடுகளில் தொடக்க உரையாகவோ கொடியேற்றி தொடங்கி வைப்பவராகவோ கட்டாயம் ஒரு பெண் தோழர் இருக்கும் படி பார்த்துக் கொண்டார் என்பதையும் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும் இயக்கங்கள் தங்களது பணியை சிறப்பாக செய்ய முடியும் என்பதை வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து ‘அம்பேத்கரும் பெரியாரும்’ என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, ‘மூடநம்பிக்கைகளை முறியடிப்போம்’ என்ற தலைப்பில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, ‘பெண் கல்வியும் தமிழ்நாடும்’ என்ற தலைப்பில் கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் சுதா, ‘சாவித்திரிபாய் புலே வாழ்வும் பணியும்’ என்ற தலைப்பில் மடத்துக்குளம் சங்கீதா, ‘கடந்த காலச்சூழலில் பெண்களின் நிலையும் இன்றைய சூழலில் பெண்களின் நிலையும்’ என்ற தலைப்பில் கோவை அமிலா சுந்தர், ‘பெண்களும் மனுதர்மமும்’ என்ற தலைப்பில் ஆனைமலை அனுசுயா, ‘மதங்களும் பெண்களும்’ என்ற தலைப்பில் இளம்பிள்ளை திவ்யா, ‘பெரியாரின் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் கடத்தூர் மாணவி இளமதி ஆகியோர் உரையாற்றினார்கள்.
அதைத் தொடர்ந்து பெண்கள் பொது வாழ்விற்கு வரத் தடையாக இருக்கின்ற கருத்துக்கள் குறித்த ஒரு பொது விவாத நிகழ்வும் நடந்தது. இவ்விவாத நிகழ்வை பல்லடம் தேன்மொழி தொகுத்து வழங்கினார். கலந்து கொண்ட தோழர்களைப் பாராட்டி கழகத் தலைவர் கொளத்தூர் மணி புத்தகங்களைப் பரிசாக வழங்கினார். நிகழ்வைத் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி ஒருங்கிணைத்தார். சென்னிமலை ஜோதி நன்றி கூற பெண்கள் சந்திப்பு நிகழ்வு நிறைவுப்பெற்றது.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஈரோடு தோழர்கள் செய்திருந்தார். நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ஈரோடு மாவட்டத் தலைவர் செல்வராஜ், மாநகரத் தலைவர் குமார், மாநகர அமைப்பாளர் சத்தியமூர்த்தி, பிரியாணிபாளையம் உணவகத்தின் நிர்வாகி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியாரின் பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கருத்துகளும் பெரியார் கருத்துகளை ஏற்றுக் கொண்டு வாழ்வது என்பது சுயமரியாதையையும் துணிச்சலையும் முன்னேற்றத்தையும் தருகிறது என்பதையும் தங்களது சொந்த வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து பெரியார் கொள்கையை பரப்ப வேண்டியதன் தேவையும் வலியுறுத்தினர். இவ்வாறாக ஒரு நாள் முழுவதும் பெரியாரின் சிந்தனைகளின் வீச்சு குறித்த விவாதமாகவும் கருத்து பகிர்தலாகவும் பெண்கள் சந்திப்பு நடைபெற்றது.
பெரியார் முழக்கம் 09022023 இதழ்