காந்தியாருக்கு நினைவுச் சின்னம்

காந்தியாருக்கு ஞாபகச் சின்னம் ஏற்படுத்துவது அவசியம், அது நிரந்தரமான தாகவும், அதிசயமான பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். அதற்கு என் தாழ்மையான யோசனை :

*           இந்தியாவுக்கு, ‘ஹிந்துஸ்தான்’ என்கிற, பெயருக்குப் பதிலாக – ‘காந்தி தேசம்’ அல்லது ‘காந்திஸ்தான்’ என்று பெயரிடப்படலாம்.

*           இந்து மதம் என்பதற்குப் பதிலாக – ‘காந்தி மதம்’ அல்லது ‘காந்தினிசம்’ என்பதாக மாற்றப் படலாம்.

*           இந்துக்கள் என்பதற்குப் பதிலாக – ‘மெய்ஞ்ஞானிகள்’ அல்லது ‘சத்ஞானஜன்’ என்று பெயர் மாற்றப்படலாம்.

*           காந்தி மதக் கொள்கையாக இந்தியாவில் ஒரே பிரிவு மக்கள்தான் உண்டு ; வருணாசிரம தர்மமுறை அனுசரிக்கப்பட மாட்டாது. ஞானமும் (அறிவும்) பக்ஷமும் (அன்பும்) அடிப்படையாகக் கொண்டது; சத்து அதாவது சத்தியமே நித்தியானது என்பதான சன்மார்க்கங்களைக் கொண்டதாகும் என்பதாக ஏற்படுத்தி, கிறிஸ்து ஆண்டு என்பதற்குப் பதிலாக ‘காந்தி ஆண்டு’ என்று துவங்கலாம்.

இப்படிப்பட்ட காரியங்கள் செய்வதனால்தான், புத்தர், கிறிஸ்து, முகம்மது முதலிய பெரியார்களுக்குக் காந்தியார் ஒப்பானவராகவும், இன்றைய நிலைமைக்குத் தோன்றிய ஓர் சீர்திருத்த மகானாகவும் உலகமே கருதும்படியான நிலை ஏற்படும் ; உலக மக்களால் நாம் நன்கு மதிக்கப்படுவோம்.

குடி அரசு – 14.02.1948

 

பெரியார் முழக்கம் 03022022 இதழ்

You may also like...