கழகப் பொறுப்பாளர்கள் மூன்றாம் கட்ட பயணம்: கழக ஏட்டுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் ஆர்வம்

மூன்றாம் கட்ட பயணமாக 1, 2, 3.12.2021 ஆகிய தேதிகளில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி பரப்புரைச் செயலாளர் பிரபாகரன் தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார் ஆகியோர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களிடத்தில் கலந்துரையாடினர்.

தர்மபுரியில் 1.12.2021 அன்று காலை 11 மணி அளவில் பி அக்கரகாரம் நஞ்சப்பன் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் வேணுகோபால், சந்தோஷ்,பரமசிவம் உள்பட பல பகுதிகளில் இருந்து தோழர்கள் பங்கேற்றனர் கழக செயல்பாடுகள் மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள புரட்சிப்பெரியார் முழக்கம் பெரும் உதவியாக இருந்தது என்றும், இந்த ஆண்டு கூடுதல் சந்தா சேர்ப்போம் என்றும் தோழர்கள் கூறினர்.

இதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சிகர்ந்தப்பள்ளி மாவட்டச் செயலாளர் குமார் இல்லத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர்கள் ப.வாஞ்சிநாதன், குமார், கிருஷ்ணன் உள்பட 35 தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர் மாவட்ட கழக சார்பில் 500 சந்தா சேர்த்து தருவதாகவும் ஒவ்வொரு மாதமும் கிராம பிரச்சாரங்களை மேற்கொள்வதாக தலைமைக் கழகம் ஒப்புதல் கொடுத்தால் மண்டல மாநாடு ஓசூரில் நடத்துவதாகவும் உறுதியளித்தனர். இரவு உணவு மற்றும் பயணக் குழுவினர் தங்குவதற்கு மாவட்ட தலைவர் ப. வாஞ்சிநாதன் ஏற்பாடு செய்தார்.

2.12.2021 அன்று காலை 11 மணி அளவில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் சந்திப்பு பள்ளிகொண்டாவில் சாதி ஒழிப்பு போராளி கிருஷ்ணசாமி நினைவு கட்டிடத்தில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர்கள் இராமலை வழக்கறிஞர் அ.ப.சிவா ஆகியோர் உட்பட தோழர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கடந்த கால இயக்க செயல்பாடுகள் குறித்தும் அடுத்த கட்ட இயக்க செயல்பாடுகள் மற்றும் கழக ஏட்டிற்கு சந்தா சேர்த்தல் குறித்தும் பேசப்பட்டது. தோழர்களுக்கு மதிய உணவு வழக்கறிஞர் சிவா ஏற்பாடு செய்தார்

தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசுகி திருமண மண்டபத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் ராமன் மதியழகன் சாமிதுரை நாகராஜ் முருகன் உள்பட பல பகுதிகளிலிருந்தும் தோழர்கள் திரளாக பங்கேற்றனர். கூட்டத்தில் பல அரசியல் நிகழ்வுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. பெரியாரின் ஜாதி ஒழிப்புக் போராட்டங்களையும் சமூகநீதி போராட்டங்களையும் தொடர்ந்து மக்களிடத்தில் பரப்புரை செய்வோம் என்றும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் சந்தா சேர்ப்பதாகவும் முதலில் தோழர்கள் சந்தாதாரராக ஆக்குவோம் என்றும் உறுதியளித்தனர். கூட்டத்தில் புதிய ஒன்றிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கராபுரம் ஒன்றிய அமைப்பாளராக அன்பு, ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவராக மா.குமார், ஒன்றிய செயலாளராக துரைராஜா, ஒன்றிய அமைப்பாளராக கார்மேகம் தொடர்ந்து நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. தோழர்களுக்கு இரவு உணவு மாவட்ட கழக பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்தனர். பயணக் குழுவினர் இரவு தங்குவதற்கு தோழர் சல்லை சி.ஆசைத்தம்பி ஏற்பாடு செய்தார்.

3.12.2001 அன்று காலை 11 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் அரியலூரில் கே.வி.இராசன் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் இளையரசன் பெரியார் சாக்ரடீஸ், விஜயன், விஜி, ஜெயரட்சகன் உள்ளிட்ட தோழர்கள் பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் புதிய தோழர்கள் மூன்று பேர் கழகத்தில் இணைந்தனர். கழக ஏட்டுக்கு கூடுதல் சந்தா சேர்த்தல் மற்றும் கிராம பிரசாரங்களை முன்னெடுப்பது குறித்தும் பேசப்பட்டது. தோழர்களுக்கு மதிய உணவு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்தனர் மூன்றாம் கட்ட பயணம் நிறைவுற்றது.

செய்தி: அய்யனார்

 

பெரியார் முழக்கம் 09122021 இதழ்

You may also like...