ஒத்தக்காசுச் செட்டியார் பிராமணத் தந்திரத்தின் தோல்வி
பனகால் ராஜா மந்திரியாயிருந்து மாதம் ரூ. 4333 – 5 – 4 சம்பளம் வாங்குவதில் பொறாமை கொண்ட சில பிராமணர் பனகால் ராஜா கட்சியிலி ருந்தே ஆசாபங்கமடைந்த ஸ்ரீமான். ஓ. கந்தசாமி செட்டியார் என்கிற ஒருவரைப் பிடித்து பனகால் ராஜாவின் மீது ஏவிவிட்டு, திரை மறைவிலி ருந்து சூஸ்திரக் கயிராட்டி வந்தார்கள். அளவுக்கு மிஞ்சி கயிற்றை ஆட்டின தன் பலனாய்க் கயிறு அறுந்துபோய் ஸ்ரீமான் செட்டியாரின் தலை உடைந்து நிரந்தரமான வடு இருக்கும் படியாய் ஒரு பெரிய தளும்பு ஏற்பட்டுவிட்டது.
விஷயமென்ன?
பனகால் ராஜாவை ஸ்ரீமான் செட்டியார் ஒரு கூட்டத்தில் இகழ்ச்சி யாய்ப் பேசினார்; மற்றொரு கூட்டத்தில் ஸ்ரீமான் செட்டியாரை பனகால் ராஜா இகழ்ச்சியாய்ப் பேசினார் . இது அரசியல் உலகில் சாதாரணமாய் நடக்கிற விஷயங்கள்தான். அநாவசியமாய் இந்த சம்பவத்தில் பிராமணர்கள் புகுந்து செட்டியாருக்கு ஏதோ பெரிய மானநஷ்டம் வந்துவிட்டதாகவும், அதற்காக சில பிராமணர்கள் பரிதாபப்பட்டு ஸ்ரீமான் செட்டியாருக்கு ஏதோ பெரிய பரிகாரம் தேடிக் கொடுத்து விடுவதாகவும் பாசாங்கு செய்து, நீதி ஸ்தலத்திற்கு இழுத்துவிட்டு செட்டியாருக்கு என்றென்றைக்கும் நிரந்தரமாய் மானநஷ்டம் வராமல் செய்துவிட்டார்கள். (அதாவது கொஞ்சமாவது மானமிருக்கும் படியாகச் செய்திருந்தால்தானே இனி மானநஷ்டம் வரும்.)
தீர்ப்பின் தத்துவம்
பனகால் ராஜா செட்டியாரை (கூலிக்கு மாரடிப்பது) என்று சொன்னது நிஜம். செட்டியார் பேசினதற்கு பனகால் ராஜா பதில்பேச வேண்டியதுதான். ஜஸ்டிஸ் கட்சியாரிடமிருந்து செட்டியார் ரூ. 5,000 வாங்கினதும் நிஜம். செட்டி யார் அதை வாங்கவில்லை என்று சொல்லுவது பொய்யும் யோக்கியப் பொறுப்பற்றதுமாகும். செட்டியாருக்கும் அவரது புதல்விக்கும் ஜஸ்டிஸ் கக்ஷியார் உத்தியோகம் கொடுக்காததினால் கோபம் வந்துவிட்டதாய்த் தெரிகிறது. ஸ்ரீமான் செட்டியாருடைய மானநஷ்டம் தேசத்திலே நடமாட்டமுள்ள சின்ன நாணயமான ஒரு பைசாவுக்குத்தான் சமானமான தாகும். இந்த மாதிரி பனகால் ராஜா பேசுவதற்கு ஸ்ரீமான் செட்டியாரே இடங்கொடுத்தவரானதினாலே செலவு தொகைக் கொடுக்கப்பட மாட்டாது, என்கிற தத்துவங் கொண்ட தீர்ப்பை அளித்து விட்டார். இதனால் என்ன விளைந்தது? பனகால் ராஜாவுக்குக் கொஞ்சம் பணம் செலவாயிற்று. ஸ்ரீமான் செட்டியாருக்கு என்றென்றைக்கும் மான நஷ்டம் ஏற்படாமலாயிற்று. பிராமணர்களுக்கு வேடிக்கை பார்த்தது மிச்சம்.
ஒருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு மற்றொருவரை திட்டினா லென்ன, ஒருவர் பணங்கொடுக்காததற்காக அவரைத் திட்டினாலென்ன? ஆகவே எப்படியும் பணத்திற்காக திட்டினதாய் நீதிபதியின் தீர்ப்பிலிருந்து தொனிக்கிறது. இந்த வழக்கை விசாரித்த ஜட்ஜ் வெள்ளைக்காரராயில்லாமல் கருப்புக்காரராயிருந்தால் என்னவாகியிருக்குமென்பதை வாசகர்களையே அறிந்து கொள்ள விட்டு விடுகிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 09.05.1926