கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல்
நமது ஜில்லா சட்டசபைத் தேர்தல் விஷயமாக சென்ற இதழில் ஒரு வியாசம் எழுதப்பட்டிருந்ததை நேயர்கள் வாசித்திருக்கக் கூடும். அவ்வியாசத்தின் வேண்டுகோட்படியே குடியான வகுப்பைச் சேர்ந்த அபேக்ஷகர்களான இரண்டு கவுண்டர் கனவான்களில் ஒரு கனவானான ஸ்ரீமான் வி.சி.வெள்ளியங்கிரிக் கவுண்டர் பின்வாங்கிக் கொண்டதாக கேள்விப்படுகிறோம். தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து தங்கள் சமூகத் தாரில் யாராவது ஒரு கனவான் சட்டசபைக்கு வரவேண்டும் என்கிற ஒரே எண்ணத்தின் பேரில் மற்றொரு கவுண்டர் கனவானுக்காக விட்டுக் கொடுத்த ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களின் பெருந் தன்மை யையும் குலாபிமானத்தையும் நாம் மனமாரப் போற்றுகிறோம். நாம் முந்திய வார இதழில் எழுதியது போலவே ஒருவர் பின்வாங்கிக் கொண்டதினாலே மற்ற கனவானுக்கு யாதொரு பிரயத்தனமுமில்லாமல் சட்டசபை ஸ்தானம் கிடைத்து விடும் என்று நம்பி அஸ்வாரஸ்யமாய் இருந்துவிடக் கூடாது என்றும் தக்க முயற்சி எடுத்துக்கொண்டு கிராமம் கிராமமாய் வேளாள சமூக பிரசாரகர்களைக் கொண்டு பிரசாரம் செய்து கிராமத்து குடியான மக்களு டைய மனதைத் திருப்ப முயற்சி செய்ய வேண்டும் என்றும் அப்படிக்கில் லாமல், அஸ்வாரஸ்யமாயிருந்தால் கண்டிப்பாய் ஏமாற்றமடைய நேரிடும் என்றும் தெரிவித்துக் கொள்வதோடு ஸ்ரீமான் சங்கரண்டாம் பாளையப் பட்டக்காரக் கவுண்டர் அவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டியது அவசிய மென்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – அறிக்கை – 03.10.1926