சேலம் தீர்மானம் எதிரொலி: களப்பணியைத் தொடங்கினர் நாமக்கல், ஈரோடு கழக மாணவர்கள்

ஈரோட்டில் டிசம்பர் 16 ஆம் தேதி கூடிய தலைமைக் குழு தீர்மானங்களை செயல்படுத்த உடனடியாக களமிறங்கினர். நாமக்கல் ஈரோடு மாவட்டக் கழகத் தோழர்கள், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் சார்பில்  மாணவர்கள் சந்திப்பு, திருச்செங்கோடு பெரியார் மன்றத்தில் 31.12.2017 அன்று காலை 11:30 மணிக்கு தொடங் கியது. நிகழ்வில், ராசிபுரம், மல்லசமுத்திரம், பவானி, திருச்செங்கோடு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மனோஜ் தலைமை வகிக்க, தோழர்கள் வே.ஜீவிதா மற்றும் நித்யா முன்னிலை வகிக்க மாணவர்கள் கலந்துரையாடல் தொடங்கியது. மாணவர்களிடையே, நீட், தமிழ்நாடு தேர்வாணையத்தின் தமிழர் விரோத போக்கு, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை குறைப்பு போன்றவைகளைப் பற்றி விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்து கொண்ட புதிய மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.

கலந்துரையாடலுக்குப் பின்,  சமூக வலைதளங்களில் மாணவர்கள் பிரச்சனைகளை பரப்புதல், கல்லூரி நுழைவாயிலில் காலை நேரங்களில் (வாய்ப்பைப் பொறுத்து) துண்டறிக்கைகளை கொடுத்தல், துறை சார்ந்த மாணவர்களின் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு துண்டறிக்கைகளை தயாரித்தல், களத்தில் செயல்படுகின்ற மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்கங்கள் நடத்துதல், கல்லூரி வாயில்களில் தெரு முனைக்கூட்டங்கள், வீதி நாடகங்கள் நடத்துதல், மண்டல மாநாடுகளை நோக்கி மாணவர்களை அணி திரட்டல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக தோழர் கவுதம் நன்றியுரையாற்றினார்.

நிகழ்வு தொடங்கும் முன்,  மல்லை ஒன்றிய பொறுப்பாளர் கண்ணன் மறைவுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

 

பெரியார் முழக்கம் 04012018 இதழ்

You may also like...