பெரியார் பெரும் தொண்டர் வி.ஆர். வேங்கன் தனி முயற்சியில் நிறுவிய பெரியார் சிலை திறப்பு

தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிபட்டியை அடுத்த வெங்கட சமுத்திரத்தில் பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை, 2.6.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியால் திறந்து வைக்கப்பட்டது.

பெரியார் பெருந்தொண்டரும், தமிழ்நாடு அரசால் பெரியார் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவருமான வி.ஆர்.வேங்கன் தனிமுயற்சியில் அவரால் நிலம் வழங்கப்பட்டு இயங்கிவரும் வெங்கடசமுத்திரம் அரசினர் மேனிலைப் பள்ளியின் எதிர்ப்புறத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் நிறுவப்பட்டுள்ளது.

தனியார் நிலத்தில் நிறுவப்படும் சிலைகளுக்கு எவ்வித அரசு அனுமதியும் தேவையில்லை என ஏற்கனவே உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தும் மாவட்ட ஆட்சித் தலைவராலும், காவல்துறையாலும் கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடிகள் காரணமாக இருமுறை உயர்நீதி மன்றத்தில் ஆணை பெற்று வந்த நிலையிலும் மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் சிலையை நிறுவ தடைசெய்து வந்தனர். ஆனால் புதிய மாவட்ட ஆட்சியராய் மலர்விழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் சிலையை நிறுவ உரிய ஒத்துழைப் புகள் வழங்குமாறு வருவாய், காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில் 2.6.2018 அன்று காலை பெரியார் சிலை திறப்பு சிறப்புற நடந்தேறியது. சிலை திறப்பு குறித்து தருமபுரி மாவட்டக் கழக அமைப் பாளர் சந்தோசுகுமார், தோழர்கள் காவேரிப்பட்டிணம் பிரபு, தருமபுரி பரமசிவம், நங்கவள்ளி கிருட்டிணன் ஆகியோர் வெங்கட சமுத்திரம், பாப்பிரெட்டிபட்டி, அரூர், தருமபுரி ஆகிய பகுதிகளில் சுவரெழுத்துகள் எழுதியும், சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்டங்களில் அழைப்பிதழ்கள் விநியோகித்தும் சிறப்பாக விளம்பரம் செய்தனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில், கழகத் தலைவர் கொளத்தூர் மணியால் சிலை திறந்து வைக்கப்பட்டது.

சிலை திறப்பைத் தொடர்ந்து, அருகில் அமர்ந்திருந்த திருமண மண்டபத்தில், கோவை இராம கிருட்டிணன் தலைமையில், பெரியார் பெருந்தொண்டர் வி.ஆர்.வேங்கன் வரவேற்புரையாற்ற நிகழ்வுகள் தொடங்கின.

அந்நிகழ்வில் உள்ளூர் ஆண்களும் பெண்களும் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பெரியாரிய சிந்தனையாளர்கள் பெருமளவில் வந்திருந்ததால், அந்த பெரிய மண்டபம் நிறைந்ததோடு இட மில்லாமல் ஏராளமானோர் வெளியே நிற்கவேண்டியிருந்தது.

நிகழ்வில் தலைமையுரைத் தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ந.குப்புசாமி, கே.சிங்காரம், பெரியார் மருத்து வமனை டாக்டர். தி. பழனிசாமி, தி.மு.கவின் தீர்மானக் குழு உறுப்பினர் கீரை.விசுவநாதன் ஆகியோரின் உரைகளுக்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன், ம.தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் அ.வந்தியத்தேவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இப்பகுதி பெரியார் இயக்கம் வலுவாக இருந்த பகுதி என்பதால், சுற்றிலும் பாப்பி ரெட்டிபட்டி, அதிகாரப்பட்டி, கவுண்டம்பட்டி, இராமியம்பட்டி, மெணசி என ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிலேயே ஐந்து சிலைகள் நிறுவப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார். கடவுள் நம்பிக்கை கொண்டோரும் கூட அண்மையில் ஒரு பார்ப்பன இந்து வெறியன் பெரியார் சிலைக்கு எதிராகப் பதிவிட்டபோது ஆற்றிய எதிர்வினை பெரியாரின் சமூகப் பணிகளை மக்கள் எவ்வளவு தூரம் உள்வாங்கியுள்ளனர் என்பதையே காட்டியது என்று பெருமைப் பொங்கக் குறிப்பிட்டார். அவரது நிறைவுரை யோடு அரங்க நிகழ்வு முடிவடைந்தது. நிகழ்வினை பாவலர். பெரு.முல்லை யரசு ஒருங்கிணைத்தார்.

வி.ஆர்.வேங்கனாரின் மகன்கள் வே.தமிழ்ச்செல்வன், டாக்டர்.வே. புத்தன் ஆகியோர் வந்திருந்த அனைவருக்கும் அசைவ விருந்தளித்து மகிழ்ந்தனர்.

பெரியார் முழக்கம் 28062018 இதழ்

You may also like...