அக் 7 சென்னையில் பெண் போராளிகள் ஒரே மேடையில் போர் முழக்கம்!

தோழர்களே தலைநகர் நோக்கி திரளுவீர்!

ஜாதி ஒழிப்புக்களம் – தமிழ்நாட்டில் சூடேறி வருகிறது. இளம் பெண் தோழர்கள் பெண்ணுரிமையோடு ஜாதி ஒழிப்பையும் இணைத்து களமிறங்கியிருப்பது மகத்தான திருப்பம்.

தமிழ்நாட்டின் ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை மதவெறி எதிர்ப்பு, சமூகநீதிப் போராட்டக் களம், இளைஞர்களிடம் வந்து சேர்ந்து விட்டது.அவர்களால்தான் அதை சாதித்துக் காட்டவும் முடியும்.

தமிழ் நாட்டில் ஜாதி ஒழிப்புக்கு எதிர்நீச்சல் போட்டு களம் இறங்கியிருக்கும் பெண் போராளிகளை ஒரே மேடையில் பங்கேற்கவிருக்கும் நிகழ்வினை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது – இது காலத்தின் தேவை!

அக். 7ஆம் தேதி மாலை சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே நிகழவிருக்கும் இந்த சங்கமம், ஜாதி ஒழிப்பு பெண்ணுரிமைக்கான போராட்டக் களத்துக்கு அறைகூவல் விடுக்கும் ஒரு திருப்பு முனையான நிகழ்வு.

‘ஜாதியற்றவளின் குரல்’ நூலாசிரியர் ‘மஞ்சள்’ நாடகத்துக்கு கூர்மையான உரையாடல்களைத் தீட்டியவருமான –

– போராளி ஜெயராணி

‘கக்கூஸ்’ ஆவணப் படத்தை உருவாக்கி, மலம் எடுக்கும் தொழிலாளர்கள் சுமக்கும் இழிவை பொது வெளிக்கு உணர்த்தி, ஆதிக்க சக்திகளின் மிரட்டலுக்கு அஞ்சாத –

– போராளி திவ்ய பாரதி

– ஜாதி வெறியர்களின் கொலைவெறிக்கு அன்புக் காதலனை கண்ணெதிரிலேயே பறிகொடுத்துவிட்டு, ஜாதி ஒழிப்புக் களத்தை உறுதியுடன் பற்றி நிற்கும் –

– போராளி உடுமலை கவுசல்யா

போராடும் கதிராமங்கலம் மக்களுக்காக துண்டறிக்கை வழங்கிய “குற்றத்துக்காக” குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சட்டத்தைத் தகர்த்து வெளி வந்தும் உறுதியுடன் களத்தில் நிற்கும் –

– போராளி வளர்மதி

ஜாதி ஒழிப்பு – மனித உரிமை – மக்கள் பிரச்சினைகளுக்காக அஞ்சாது – களமாடும் மக்கள்மன்றத் தோழர் –

– போராளி மகேசு

பெண்களுக்கான சந்திப்பு -குழந்தைகள் பழகு முகாம் வழியாக பெண்ணுரிமை – ஜாதி ஒழிப்புக் கருத்துகளை பரப்பிட தொடர்ந்து களப்பணியாற்றி வரும் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் –

– போராளி வீ. சிவசாமி

அனைவரும் ஒரே மேடையில் ஜாதி ஒழிப்புக் களத்துக்கு இளைஞர்களை அழைக்கிறார்கள்.

நிகழ்வுக்கு  மற்றோர் மகுடம் – இராணுவ ஒடுக்குமுறை சட்டத்தைஎதிர்த்து தனி ‘மனுசி’யாக பல ஆண்டுகாலம் பட்டினிப் போர் நடத்தி தமிழ்நாட்டை தனது வாழ்விடத்துக்கு தேர்வு செய்து பிரிட்டிஷ் காதலரை மணம் முடித்துள்ள

– போராளி இரோம் சர்மிளா – தோய்மந்த் தொட்டின்

இணையருக்கு பாராட்டு விழாவும் அதே மேடையில்…

காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர நிகழ்ச்சிகளுடன் நிகழ்வுகள் தொடங்குகின்றன.

கழகத் தலைவர் பொதுச் செயலாளர் பங்கேற்றுப் பேசுகிறார்கள்.

புரட்சிகரப் பெண் போராளிகள் ஒரே மேடையில் போர் முரசு கொட்டும் இந்த நிகழ்வு, ஜாதி ஒழிப்புக் களத்தை மேலும் கூர்மைப்படுத்தும். பல்லாயிரக்கணக்கான இளம் தோழர்களை அணி திரட்டும். அதற்கான முயற்சியை திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கி வைக்கிறது.

பெரியார் 1924ஆம் ஆண்டு விடுத்த அறைகூவல் இது:

“வாலிபர்கள் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டும். தற்சமயம்சிலருக்கு ஒவ்வொரு மயிர்க்காலிலும் சமயப் பித்து இருக்கிறது. சாதி மத வேற்றுமைகளை ஒழிக்க வேண்டுவது அத்தியாவசியம். எல்லாவற்றிற்கும் நம்பிக்கையோடு உழைக்க வேண்டும். ஒழுக்கம், அறிவு, ஆசை எல்லோருக்கும் உண்டென்பது உண்மை. இவைகளினால் இந்தியாவிலுள்ள 33 கோடி ஜனங்களுள் 16.5 கோடி பெண்களும் அடிமையாய் இருந்து, சந்தைக்குப் போய் மாடு வாங்குவதுபோல் நடத்தப்படுவது ஒழிய வேண்டும். அவர்கள் முதலில் தங்கள் வாழ்க்கையை ஊன்றிப் பார்த்துப் பிறகு உலகத்தைப் பார்க்க வேண்டும். சுயமரியாதை இயக்கம் வாலிபர்கள் கையிலிருக்கிறது. பெண்களும் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு சுயமரியாதை உணர்ச்சியை உணர்த்த வேண்டும் என்றும்  கேட்டுக்கொள்கிறேன்” (‘திராவிடன்’ 21.2.1929)

இளைஞர்களையும், பெண்களையும் பெரியார் அன்று அழைத்தார். இதோ, அதே பொது மேடை; பெரியார் விரும்பிய மேடையை அமைத்திருக்கிறோம்.

பெரியார் மண் சூடேறி நிற்கிறது; சூளுரைப்போம், திரண்டு வாரீர்!

பெரியார் முழக்கம் 21092017 இதழ்

3 2 1

You may also like...