திருவார்ப்பு சத்தியாக்கிரகம்
திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் திருவார்ப்பு என்கிற இடத்தில் தாழ்ந்த ஜாதியார் என்பவர்கள் தெருவில் நடக்க சத்தியாக்கிரகம் ஆரம்பித்ததாக கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தோம், அம்மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்ளுமுன் அச்சத்தியாக்கிரகத்தை மகாத்மா நிறுத்துமாறு உத்திரவிட்டிருப் பதாய் தெரிகிறது. நீல் சத்தியாக்கிரகத்தை விட திருவார்ப்பு சத்தியாக்கிரகம் அவ்வளவு மோசமானதா என்பது நமக்கு விளங்கவில்லை. மகாராணியும், போலீஸ் கமிஷனரும் நன்மை செய்வார்கள் என்று தாம் அறிந்ததாக மகாத்மா தெரிவித்திருக்கிறார். இதை நாம் ஒப்புக் கொள்ள முடியாத நிலைமையில் இருக்கின்றோம். சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தில் சர்க்கார் நாணயம் இன்னது என்று தெரிந்து போய் விட்டது. வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போதும் மகாத்மா ராணியிடமும், திவானிடமும், போலீஸ் கமிஷனரிடமும் பேசி விட்டுத்தான் போனார். கடைசியாக அது வைக்கத்திற்கு மாத்திரம் முடிவதே பெரிய கஷ்டமாய் போய்விட்டது. மற்ற இடங்கள் எல்லாம் அப்படியேதான் இருக்கிறது. இதனால் லாபம் என்ன. ஜனங்களுடைய முயற்சியையும் உணர்ச்சியையும் கட்டுப்பாடாய் எழுந்த ஆசையையும் இம்மாதிரி தடங் கல்கள் அழித்து விடுகின்றன. மறுபடியும் ஆரம்பிப்பதென்றால் இலேசான காரியமல்ல. ஆகவே ஏதாவது ஒரு இடத்தில் யோக்கியமான உரிமைக்கு சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருக்க வேண்டுமே ஒழிய ஆரம்பித்த காரியங்களை நிறுத்துவது நன்மை பயக்காது என்பதே நமதபிப்பிராயம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 16.10.1927