மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-

1. பொங்கல் உண்டி வசூலில் இருந்து ரூபாய் நூறு தியாகராயர் ஞாபக நிதிக்களித்து மிகுதியை இச்சங்க உபயோகத்திற்கு வைத்துக் கொள்ளும்படி அனுமதி கொடுக்க வேணுமாய்த் தீர்மானிக்கப்படுகிறது.


2. இச்சங்கம் மதுரைப் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் நிறைவேறிய எல்லாத் தீர்மானங்களையும் மனமுவந்து ஒப்புக் கொள்வதுடன் அவற்றை அனுபவத்தில் நடைபெறச் செய்வதற்குக் கீழ்க்கண்ட கனவான்கள் அடங்கிய நிர்வாக சபையை நியமிக்கிறது:-

போஷகர்கள்:-

ராவ்பகதூர் வீரப்ப செட்டியார், திருஞான சம்பந்த முதலியார்.

உப பிரஸிடெண்டுகள் :-

முத்துக் குமாரசாமி முதலியார், ராஜரத்தின முதலியார்.

காரியதரிசி:- சாமி செட்டியார்.

கூட்டுக்காரியதரிசி:– முத்துச்சாமி நாயனார்.

நிர்மாண கர்த்தாக்கள்:- எம்.பி. ரங்கசாமி ரெட்டியார்,ஆதி மூல உடையார்.

பொக்கிஷதார் :- ஆறுமுக முதலியார் மற்றும் பலர் நிர்வாக சபை மெம்பர்கள்

3. தேவஸ்தான மசோதாவை சட்டமாக அங்கீகரித்ததற்காக மேன்மை தங்கிய ராஜப் பிரதிநிதி அவர்களையும் சென்னை கவர்னர் அவர்களையும் இக்கூட்டம் சந்தோஷத்துடன் பாராட்டுகின்றது. இந்தத் தீர்மானத்தை மேற்படியார்களுக்கு தந்தி மூலம் அனுப்பிவைக்கும்படி அக்கிராசனரைக் கேட்டுக்கொள்கின்றது.


4. நமது மாகாணத்தில் நமது சங்கத்தினர் பெயரால் கதர் போர்டு ஒன்றை ஏற்படுத்தியும் மற்றும் கூடுமான இடங்களிலும் இக்கதர் உற்பத்தி சாலையும் வியாபார சங்கத்தையும் ஏற்படுத்தி அத்தாக்ஷிப் பத்திரம் கொடுக் கவும், இதற்காக நிதி திரட்டவும் மகாத்மா காந்தி அவர்களின் வருகையை நாமும் கதரின் அபிவிருத்திக்காக வரவேற்கவும் தீர்மானிக்கிறது. இக்கதர் போர்டு தலைவராக இருக்கும்படி திரு.ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறது.


5. பிராமணரல்லாதாரின் நன்மையைக் கோரி உழைத்து வரும் பத்திரிகைகளுள் முக்கியமான குடி அரசு, திராவிடன், ஜஸ்டிஸ் ஆகிய பத்திரிகைகளை அவசியம் ஒவ்வொருவரும் ஆதரித்து வரவேண்டு மென்றும், அப்படி மேற்படி பத்திரிகைகளை ஆதரிக்க சௌகரியமில்லாத வர்கள் பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதையை அழிக்கவென்றே கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் பார்ப்பன பத்திரிகைகளை நிராகரிக்கவாவது செய்ய வேணுமாயும் கேட்டுக் கொள்ளுகிறது.


6. தென் பெண்ணையாற்றில் அணைகட்டும் விஷயமாய் செங்கம் மகாநாட்டில் தீர்மானித்த இடத்திலும் இன்னும் சில இடங்களிலும் அதனை கட்டி கால்வாய் பிடித்து ஜலாதாரம் செய்து கொடுக்க வேணுமாயும் எல்லா காடுகளிலும் (விவசாயிகளுக்கு) இலவசமாய் தழை அறுத்துக்கொள்ள அனுமதி கொடுக்க வேணுமாயும், துண்டு கேதுகளுக்கு வஜா செய்து கொடுக்க வேண்டுமாயும் செங்கம் டிவிஷனைச் சேர்ந்த குடிகள் சுமார் முப்பது மைலுக்கு மேலாக வந்து திருவண்ணாமலை கஜானாவில் பணம் செலுத்த வேண்டி இருப்பதால் இந்தக் குறையை நீக்க செங்கம் டிப்டி தாசில் தார் ஆபிசிலேயே பணத்தைக் கட்ட ஏற்பாடு செய்யும்படி கவர்ன்மெண் டாரைக் கேட்டுக் கொள்ளுகிறது.


7. இவ்வூரில் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் ஒன்றைத் திறந்து வைக்கும்படி ஸ்ரீமான் சுரேந்திரநாத் ஆரியா அவர்களை கேட்டுக் கொள்ளப் படுகிறது.
மதுரை கோயில் சுவாமிக்கு சுயமரியாதையுடன் ஆராதனை செய்த ஸ்ரீமான் ஜே.என். ராமநாதன் அவர்களையும், சேலம் ஜில்லா ஆத்தூர் தாலுகா ஏத்தாபூரில் பிராமணர்களின் அக்கிரமங்களைப் பகிஷ்கார மூலமாய் நிவர்த்தி செய்துகொண்ட அவ்வூர்வாசிகளையும் இம்மகாநாடு பாராட்டுகின்றது

You may also like...

Leave a Reply