தமிழ் நாட்டில் சத்தியாக்கிரகம்
தமிழ்நாட்டில் சுயமரியாதை சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப் போவதாய் ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை முதலியோர்கள் தெரிவித்துக் கொண்டதற்கு இணங்கவும், நாமும் விண்ணப்பித்துக் கொண்டதற்கு இணங்கவும் இதுவரை அநேக ஆதரவுகள் கிடைத்து வந்திருக்கின்றன. அதாவது பல இடங்களில் ‘சூத்திராள்’ என்று போடப்பட்டிருந்த விளம்பரங்கள் எடுபட்டு விட்ட தாகவும், பல மகாநாடுகளில் சுயமரியாதை சத்தியாக்கிரகத்தை ஆதரித்தும் அதற்கு உதவி செய்வதாகவும் தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. பல தனிப்பட்ட வாலிபர்களும் பெரியோர்களும் தங்களை சத்தியாக்கிரகி களாய்ப் பதிந்து கொள்ளும்படி வேண்டிக்கொண்டும் தெரிவித்துமிருக் கிறார்கள். சில பிரபுக்கள் தங்களால் கூடிய உதவி செய்யத் தயாராக இருப்ப தாகவும் தெரிவித்து இருக்கின்றார்கள். எனவே தக்கபடி பொறுப்புள்ள மக்கள் கூடி யோசித்து அதை எப்பொழுது எங்கு ஆரம்பிப்பது என்பதே இப்பொ ழுது கேள்வி யாயிருக்கின்றது. சமீபத்தில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களும் சென்னையில் இதைப்பற்றி சில கனவான்களிடத்தில் கலந்து பேசப் போவதாகவும் சமீபத்தில் அதாவது 22, 23 தேதிகளில் சென்னையில் நடக்கும் பார்ப்பனரல்லாத வாலிப மகாநாட்டில் யோசிப்பதாகவும் ஒரு கனவானால் கேள்விப்பட்டு மிகுதியும் சந்தோஷப்படுகின்றோம். ஆதலால் அப்படி ஏதாவது ஆலோசித்து முடிவு செய்ய ஒரு ஆலோசனைக் கூட்டம் கூட்டப்படுமானால் மற்ற வெளியூர்களில் உள்ள பிரமுகர்களும் தொண்டர் களும் அவசியம் வந்து இதற்கு வேண்டிய ஆலோசனை சொல்லி உதவி செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம். ஒரு படகோட்டி தன்னை தாழ்ந்த ஜாதி யென்று நினைக்கின்ற ஒருவனுக்கு தனது படகை ஓட்டமாட்டே னென்று சொல்லி பட்டினியிருக்கத் தயாராய் இருக்கும் போது மற்றபடி பெரியோர்கள், பிரபுக்கள், சுயமரியாதை நமது பிறப்புரிமை என்று சொல்லிக் கொள்ளுபவர்களுக்கு பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லாம லிருக்கும் போதே இதற்குத் தக்க முயற்சி செய்யத் தகுந்த உணர்ச்சி இல்லையா? என்று கேட்கின்றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 16.10.1927