இனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது? தொழிலாளர்களும் மக்கள் கடமையும்
நமது நாட்டுத் தொழிலாள சகோதரர்கள் விஷயத்தில் நாம் ஏதாவது அபிப்பிராயம் தெரிவிக்க நேர்ந்த சமயமெல்லாம் ஒரே ஒரு விஷயத்தை விடாமல் வற்புறுத்தி வந்திருக்கிறோம். அதாவது தொழிலாளிகள் என்போர்கள் அரசியல் கட்சிகளில் சேரக்கூடாது என்றும், அரசியலில் உழைக்கிறவர்கள் என்பவர்களை தொழிலாளர் சங்கத்தில் தலைவர் களாக்கிக் கொள்ளக்கூடாது என்பதைப் பற்றியும் தொழிலாளர்களுக்கு தனியாக தொழிற்கட்சி என்பதாக ஒரு கட்சி அரசியல் தத்துவத்தோடு இருக்க வேண்டும் என்றும் எவ்வளவோ தடவை வெகு அழுத்தமாக வற்புறுத்தி வந்திருக்கிறோம். இவ் வலியுறுத்தலுக்கு நாகைத் தொழிலாளர் சங்கத்தாரே கொஞ்சம் காது கொடுத்து வந்தனர். மற்றபடி மற்றத் தொழிலாளர் களும் தொழிலாளர்களுக்குத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பல அரசியல் வாழ்வுக்காரர்களும் நம்மீது பாய்ந்து வந்தனர். ஆனால் இப்போது தொழிலாளர்கள் விஷயத்தில் மிகுதியும் அறிவுள்ளவர் என்று சொல்லும் ஸ்ரீமான் ஜோஷி முதல் கொண்டு அதையே சொல்ல ஆரம்பித்து விட்டனர். அதாவது சென்னையில் கூடின தொழிலாளர் மகாநாட்டுத் தலைவரான ஸ்ரீ ஜோஷி “ஒரு அரசியல் கக்ஷியிலும் தொழிலாளர் சேரக்கூடாது” என்றார். தொழிலாள சகோதரர்களுக்கும் ஏறக்குறைய இந்த உணர்ச்சித் தோன்றி வருகிறதையும் பார்க்கிறோம். தவிர, அரசியல் வாழ்வுக் காரரை நம்பக்கூடாது என்று நாம் அதே வேலையாகச் சொல்லி வருவதற்கு தக்க சான்று இவ் வருஷத்திய சென்னை கார்ப்பரேஷன் தேர்தலில் தொழிலாளர்கள் விஷயத் திலும், அரசியல் புரட்டர்கள் காட்டி விட்டார்கள். தொழிலாளர்கள் காங்கிரசில் சேர வேண்டும். தொழிலாளர்களுக்காக காங்கிரசு தான் உழைத்து வருகிறது என்று சொல்லி இதுவரை தொழிலாளர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி பதவி பெற்று வந்த ஆசாமிகள் இன்றையதினம் தொழிலாளர்களுக்கு ஒரு தொழிலா ளரே பிரதிநிதியாக இருக்கிறோம் என்பதாக எண்ணி கார்ப்பரேசன் கவுன் சிலர் ஸ்தானத்திற்கு ஒரு தொழிலாளி நின்றவுடன் அவரை ஒழிக்க காங்கிரஸ் காரர்கள் என்போர்கள் என்ன என்னவோ புரட்டுகள் எல்லாம் செய்து தொழிலாளர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்ய பார்க்கி றார்கள். ஏன்? தொழிலாளர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு இனிப் பிழைக்க முடியாமல் போய்விடுமே முதலாளிகளை ஏமாற்றி வயிறு வளர்க்க முடியாமல் போய்விடுமே என்கிற பயம்தான். எவ்வளவுதான் அரசியல் வாழ்வுக் காரர்களின் அயோக்கியத்தனங்களை தொழிலாளர்கள் பார்த்து அறிந்து வந்தாலும் அப்பொழுதும் சில தொழிலாளர்களுக்கு புத்தி ஏமாந்து போவதையும் நாம் பார்த்து வந்திருக்கிறோம். இதுவரை எப்படி நடந்து வந்திருந்தாலும், இந்தத் தடவையாவது கண்டிப்பாய் அரசியல் அயோக்கியர் கள் வலையில் மாய்கையில் சிக்கி ஏமாந்துபோகாமல், தொழிலாளிகளிடம் அனுதாபமுள்ள மக்கள் ஒவ்வொருவரும் தொழிலாளர்களால் நிறுத்தப்பட்ட தொழிலாள அபேக்ஷசகருக்கே ஓட்டுக் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகிறோம். இனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது?
குடி அரசு – கட்டுரை – 31.07.1927