தொழிலாளர்கள் தற்கால காங்கிரஸ் தலைவர்களை நம்பக்கூடாது; அதில் சேரவும்கூடாது
தொழிலாளர்கள் காங்கிரசில் சம்பந்தம் வைத்துக் கொண்டிருக் கிறவரை அவர்கள் உலகத்தாராலும், அதிகாரிகளாலும், முதலாளிகளாலும் மனிதர்களாகப் பாவிக்கப்பட மாட்டார்கள் என்பதுதான் நமது முடிவும். இதைப் பல இடங்களில் சொல்லியும், எழுதியும் வந்திருக்கிறோம். சமீபத்தில் சென்னை சட்டசபைக்கு ஒரு தொழிலாளியை நியமிக்க சர்க்கார் பிரயத் தினப்பட்டதில் அப்பதவிக்கு மூன்று பேர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன. ஒருவர் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர் சொல்படி நடப்பாரோ, தொழிலாளிக்கு ஒரு நன்மையும் செய்ய மாட்டாரோ என்பதாக சந்தேகித்து சில தொழிலாளர்கள் ஆnக்ஷபித்ததினால் அவர் பெயர் அடிக்கப்பட்டது. மற்றவர் ஸ்ரீ பெசண்டம்மை கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று சிலர் ஆnக்ஷபித்ததால் அவர் பெயர் அடிக்கப்பட்டது. மற்றவர் பார்ப்பன அதிகாரிகளுக்கு திருப்தி இல்லாததால் அவர் பெயர் அடிக்கப் பட்டது. ஆதலால் இனியாவது தொழிலாளர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டுமானால் தொழிலாளருக்கு ஓட்டுக் கொடுத்து அவர்களால் தெரிந் தெடுக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமே அல்லாமல் பார்ப்பனர் தயவில் சட்டசபைக்குப் போகலாம் என்பது முடியாத காரியம். போனாலும் பார்ப்பனர் கள் சொல்படி ஆடத்தான் முடியும். ஆனால், பார்ப்பன காங்கிரசோ தொழிலாளிகளுக்கு தனிப்பிரதிநிதித்துவம் கொடுக்க சம்மதிக்காது. ஏனெனில் தங்களுடைய நன்மைக்கு தொழிலாளர்களை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறவர்கள்; எனவே இவர்கள் உண்மையில் தொழிலாளர் பிழைக்க இடம் கொடுப்பார்களா ?
14. 12 .1926 “ சுதேசமித்திரன்” 14 அம் பக்கத்தில் தொழிலாளர் பிரதிநிதித்துவம் என்ற தலையங்கத்தின் கீழ் திரு.ஆர்.சபாபதி முதலியார் எழுதிய மடலுக்கு போத்த னூர் ஜனாப் சேக் ஷர்வர் அவர்கள் எழுதிய மறுப்பு மடலை ஒட்டிய குறிப்புரை
குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 20.03.1927