காலித்தனத்தை அடக்க சர்க்கார் உத்திரவு

சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியார்கள் தேர்தல் பிரசாரத்திற்கென்று ஏற்பாடு செய்யும் கூட்டங்களிளெல்லாம் மயிலைப் பார்ப்பனர்கள் கூலி கொடுத்து காலிகளை விட்டு குழப்பமும் கலகமும் செய்து வந்ததையும், போலீசாரர்கள் இதைப் பற்றி சரியான நடவடிக்கை எடுத்துக் கொள்ளாமல் கவலை ஈனமாயிருந்ததையும் அறிந்த ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் கவர்னர் பிரபுவைக் கண்டு இக்காலித்தனத்தை “நீங்கள் அடக்க வழி செய்கிறீர்களா? அல்லது நாங்களே அடக்க ஏற்பாடு செய்வதா?” என்று இறுதி பிரேரே பணை செய்தார்கள். அதற்கு கவர்னர் பிரபு தானே தக்கது செய்வதாய் ஒப்புக் கொண்டு தேர்தல் கூட்டங்களைப் பற்றிய அரசாங்க உத்திரவு என்பதாக ஒரு உத்திரவு பிறப்பித்திருக்கிறார். அவ்வுத்திரவின் சாரமாவது:

காலிகள் கூட்டத்தில் வந்து கூட்டத்தை கலைப்பார்கள் என்று யாருக் காவது தோன்றி அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டால், அவர்களுக்காக அக்கூட்டத்தை ஒழுங்காய் நடத்திக் கொடுக்க வேண்டிய ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டியது என்றும், கூட்டத்தின் அமைதிக்கு கெடுதி இல்லாமல் யாராவது கேள்வி கேட்டால் அனுமதிக்க வேண்டுமென்றும் பிறப்பித்திருக்கிறார்கள்.

இவ்வுத்திரவினால், இவ்வுத்திரவிற்கு முன்னாலேயே கலகம் செய்து கூட்டத்தை கலைக்கக் கொடுத்த கூலிகள் எல்லாம்வீணாய்ப் போய்விட்டது. தவிர கலகம் செய்வதற்காக கூலி வாங்கிப் பிழைக்கலாம் என்று நினைத்து வேறு வேலைகளையும் விட்டு இதை நம்பி இருந்தவர்கள் வாயிலும் மண் விழுந்து விட்டது. யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆள் பலத்தில் நின்றுகொண்டு சண்டப் பிரசண்டமாய் பொய்யும் புளுகும் வண்டி வண்டி யாய் அளக்கலாம் என்று நினைத்திருந்த “வீரர்கள்” இனி கூட்டத்தில் பேசுவதில்லையென்று உறுதி செய்து கொள்ள வேண்டியதாய்விட்டது. “ஐயோ பாவம்! வேறு கூட்டத்தில் கலகமும் செய்யக் கூடாது; தாங்களும் மேடையில் நின்று பொய்யும் புளுகும் அளக்கக் கூடாது” என்றால் “இது என்ன அக்கிரமமான உத்திரவு”, எப்படி ஜனங்களை ஏமாற்றுவது? இதற்கு ஏதாவது சட்ட சம்மந்தமான ஆnக்ஷபனை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அல்லது இவ்வுத்திரவுப் போடக் கூடிய இடத்திலாவது ஒரு பார்ப்பனரையே அதிகாரியாய் வைக்கச் செய்து, அதை கேன்சல் செய்ய வேண்டும். இவ்விரண்டிலொன்று செய்யா விட்டால் எப்படி தேர்தலில் ஜெயிக்க முடியும்” என்று சுயராஜ்யக் கட்சியார் நினைக்கும்படியாய் விட்டது. சர்க்கார் “அக்கிரமத்திற்கு” யார் என்ன செய்ய முடியும்? சட்டத்தை யாவது மீறலாமென்றாலோ 100, 200 கொடுத்தாவதும் ஜெயிலுக்குப் போக ஆள் கிடைப்பதில்லை. சட்ட மெம்பரிடத்திலும் அட்வகேட் ஜெனர லிடத்திலும் போய் முறையிட்டுப் பார்ப்பதைத் தவிர வேறு வழி இல்லாமல் போய் விட்டது. ஐயோ பாவம்!

குடி அரசு – கட்டுரை – 31.10.1926

You may also like...

Leave a Reply