ஏமாற்றுப் பிரசாரம்
ஸ்ரீமான்கள் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் காந்தியின் பிரதிநிதி யென்கிற பேரைச்சொல்லிக் கொண்டும், திரு.வி. கலியாணசுந்தர முதலியார் பிராமணரல்லாதார் பிரதிநிதி என்கிற பெயரைச் சொல்லிக்கொண்டும், ஸ்ரீமான்கள் ஏ.ரெங்கசாமி ஐயங்கார், எஸ். சீனிவாசய்யங்கார், எஸ். சத்திய மூர்த்தி ஆகியவர்கள் சுயராஜ்யக் கட்சியின் பேரைச் சொல்லிக்கொண்டும் காங்கிரஸ் சார்பாக தேசத்திற்கு நன்மை செய்கிறவர்கள் போல் நடித்து, நமது நாட்டில் ஏமாற்றுப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். அப்படிச் செய்வதிலும், இவர்கள் சொல்லிவரும் விஷயங்கள் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத தாய், கொஞ்சம் புத்தியுள்ளவனும் இவர்களுடைய புரட்டுகளை அறிந்து கொள்ளக்கூடிய மாதிரியில் பேசி வருவது நமக்கே ஆச்சரியமாய் இருக் கின்றது. அதாவது:-
பிராமணர்களின் கக்ஷியாகிய தமிழ்நாட்டு சுயராஜ்யக் கக்ஷிக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்கும் விஷயத்தில் “பிராமணரல்லாதார் பிரதிநிதியான” முதலியார் சுயராஜ்யக் கட்சியார் சட்டசபையில் ஒத்துழையாமை செய்வார் கள்; ஆதலால் அவர்களுக்கு வோட்டுக் கொடுங்களென்கிறார். ஸ்ரீமான் ஆச்சாரியாரோ சுயராஜ்யக் கட்சியார் சட்டசபையில் மதுவிலக்கு செய்வார் கள்; ஆதலால் அவர்களுக்கு வோட் செய்யுங்கள் என்கிறார். சுயராஜ்யக் கக்ஷியாரோ உத்தியோகமும் ஒப்புக்கொள்ளமாட்டோம், வெளியிலும் வந்து விடுவோம் என்கிறார்கள். காங்கிரஸோ சர்க்காரிடம் இந்தியாவின் சார்பாய் ஓர் சீர்திருத்தத் திட்டம் கொடுத்தது. அதை ஒப்புக்கொள்ளச் செய்யப் பார்ப்பது; சர்க்கார் ஒப்புக் கொள்ளாவிட்டால், உடனே சட்டசபையை விட்டு வெளியே வந்துவிட வேண்டியது என்று கட்டளை யிட்டிருக்கிறது. சர்க்காரோ இந்தியா சட்டசபையில் சீர்திருத்த சம்பந்தமாய் நிறைவேறின ஓர் தீர்மானத்தை நிராகரித்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டதோடல்லாமல், சென்ற வாரம் இராஜாங்க சபையிலும் “உங்கள் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாது; உங்களுக்கு நல்லபுத்தி வரும்வரை உங்களைப் பற்றிக் கவனிக்கப் படவும் மாட்டாது” என்று சொல்லியாகிவிட்டது. இந்த நிலைமையில் சட்டசபையில் வோட்டுக் கேட்பதின் கருத்தென்ன வென்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.
ஸ்ரீமான் முதலியார் சொல்லுகிறபடி சட்டசபையில் ஒத்துழையாமை செய்வதாயிருந்தால், ஒரு தடவை சுயராஜ்யக் கட்சியாரின் திட்டத்தை நிராகரித்தும் சென்ற வாரத்தில் இராஜாங்க சபையில் இந்தியர்கள், எவ்வித சீர்திருத்தத்துக்கும் லாயக்கில்லை யென்றும், உங்களுக்குப் புத்தி வரும் வரை ஒன்றும் கொடுக்கப்படமாட்டாதென்றும் சர்க்காரார் சொன்ன பிறகு கூட, சுயராஜ்யக் கக்ஷியார் சட்டசபைக்குப் போக வோட்டு வாங்கிக் கொடுப்பதற்கு ஏன் ஊர், ஊராய்த் திரிகிறாரோ நமக்கு விளங்கவில்லை. நமது முதலியா ருடைய அகராதியில் உதைத்த காலுக்கு முத்தமிட்டுப் பல்லைக் கெஞ்சுவது தான் ஒத்துழையாமைக்கு அர்த்தம் போலிருக்கிறது.
ஸ்ரீமான் ஆச்சாரியார் சொல்லுவது அதைவிட வேடிக்கையாயிருக் கிறது. “திடீரென்று சட்டசபையை விட்டு வெளியே வந்து விடுவதையும், ஒத்துழையாமை உணர்ச்சி உள்ளவர்களையும், உத்தியோகம் ஒப்புக்கொள் ளாதவர்களையும்” வைத்துக் கொண்டு அவர்களுக்கு வோட் வாங்கிக் கொடுத்து, சட்டசபையில் எப்படி கள்ளை நிறுத்த முடியுமோ நமக்குப் புரிய வில்லை. கள்ளை நிறுத்த வேண்டுமென தீர்மானம் கொண்டு வருவ தாயிருந்தால் அதன் வரும்படியில் நடைபெறும் சர்க்காருக்கு அதனாலேற் படும் நஷ்டத்துக்குத் தகுந்தபடி வரவு – செலவுத் திட்டம் போட்டுக் கொடுக்க வேண்டும். கள்ளை நிறுத்தும் தீர்மானத்தையும், வரவு-செலவு திட்டத்தையும் சர்க்காரார் ஒப்புக்கொள்ளவேண்டும்; அவ்விலாக்காக்களை நடத்த உத்தி யோகங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வளவிற்கும் இவர்கள் சம்மதித் தாலும் சர்க்காரார் பூரண மதுவிலக்கை ஒப்புக் கொள்ள வேண்டும். அதற்காக இவர்கள் திட்டத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இவர்களுக்கு உத்தியோகம் கொடுக்கவும் சம்மதிக்க வேண்டும். இவ்வளவும் நடப்பதாயிருந்தாலும் சீர்திருத்த திட்டத்தைச் சர்க்காரார் ஒப்புக்கொள்ளா விட்டால் இவர்கள் வெளி யிலும் வந்து விட வேண்டும். இப்படியிருக்க சுயராஜ்யக் கக்ஷியார் மது விலக்கைச் செய்து விடுவார்கள் என்று சொல்லுவது எப்படி ஜனங்கள் நம்புவார்களென்று இவர் நினைக்கின்றாரோ தெரியவில்லை. ஸ்ரீமான் ஆச்சாரியார் அகராதியில், அண்டப் புரட்டோ, ஆகாசப் புளுகோ சொல்லி பிராமணரல்லாத வோட்டர்களை ஏமாற்றி, வோட்டு வாங்கிக்கொடுத்து மதுவருந்தும் – மது விற்கும் – மது உற்பத்திசெய்யும்- சட்டசபை மூலம் மது ஒழிக்க முடியாது என்று சொல்லும் பிராமணர்களையும், பிராமணர்கள் தாளத்துக்குத் தகுந்தபடி ஆடும் சில பிராமணரல்லாதாரையும், சட்டசபையில் நிரப்பி, பிராமணரல்லாதாரை ஒடுக்கி ஒழித்துப் பிராமண ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பார்ப்பதுதான் மது விலக்குப் பிரசாரம் என்பதற்கு அர்த்தம் போலும். “ஜஸ்டிஸ் கட்சியாரும் மிதவாதக் கட்சியாரும் சுயேட்சைக் கட்சி யாரும் ஒத்துழைப்புக்காரர்கள்; நாங்கள் பரஸ்பர ஒத்துழைப்புக் கூடச் செய்ய மாட்டோம்; கவர்ன்மெண்ட்டுக்கு தோல்வி மேல் தோல்வி ஏற்படுத்தி விடு வோம்; எங்கள் சொற்படி சர்க்கார் கேட்காவிட்டால் சட்டசபையை விட்டு விலகி வந்துவிடுவோம்; உத்தியோகம் ஏற்கமாட்டோம்; இரட்டை ஆட்சி உள்ள சட்டசபையில் அதிகாரமுமில்லை, பொறுப்பும் இல்லை; வீண் சண் டைக்கும், கட்சிக்கும், அதிகச் செலவிற்கும்தான் அதிக இடமிருக்கின்றது. ஆதலால் அதை உடைத்தெறிய வேண்டும் என்று சொல்லும் சுயராஜ்யக் கக்ஷியாருக்கு சட்டசபையில் எந்தக் காரியம் செய்ய பொறுப்பேற்றுக் கொள்ள முடியும்? தவிர பட்டதாரிகளும், சர்க்கார் நியமன உத்தியோகம் பெற்றவர்களும் சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற் றாமல் 1000, 5000 சம்பளம் வரும் பெரிய உத்தியோகங்களையும், பதவி களையும் பெற்றுக்கொண்டு, அவைகளின் மூலம் சர்க்காருக்கு உதவி செய்து வரும் கக்ஷியாராகிய இவர்கள் எப்படி வாக்குத்தத்தப்படி நடக்க முடியும்? எப்படி இவர்கள் ஏதாவது ஓர் நிலையில் நிற்க முடியும்? கள்ளை ஒழிக்க சர்க்கார் சம்மதம் வேண்டும். மூன்று வருடக் காலமாவது விடாமல் சட்டசபை யிலிருக்க வேண்டும்; சட்டசபையின் மூலம் கள்ளை ஒழிக்கலாமென்ற நம்பிக்கை வேண்டும். ஆகிய இக்கொள்கைகளை ஒப்புக்கொள்ளாதவர்கள் போல் நடிப்பவர்கள் எப்படி சட்டசபைக்கு போகப் பிரியப்படுகின்றார்கள் என்பது வாசகர்களே யோசித்துப் பார்த்தால் இதன் இரகசியம் நன்றாய் விளங்கும். இவர்கள் அகராதியில் சுயராஜ்யக் கட்சி என்பதற்கு என்ன வேண்டுமானாலும் சொல்லி, ஜனங்களை ஏமாற்றித் தாங்கள் சட்டசபையில் போய் உட்கார்ந்துக் கொண்டு பிராமணரல்லாதாரால் செய்திருக்கும் தேவஸ் தான சட்டம், கல்விச் சட்டம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஆகிய சிறிதள வாவது பிராமணரல்லாதாருக்கு அநுகூலமாயிருக்கும் விஷயங்களை ஒழித்து, அதிகாரத்திலும் பதவியிலுமிருக்கும் பிராமணரல்லாதாரையெல்லாம் வெளியில் இழுத்து விட்டுத் தாங்கள் போய் அந்த ஸ்தானங்களில் உட்கார்ந்துக் கொண்டு சர்க்காருக்கு ஒற்றர்களாயிருந்து, தங்கள் இனத்தாருக் கெல்லாம் உத்தியோகம் வாங்கிக் கொடுத்து, பிராமணரல்லாதாரை அடியோடு நசுக்குவதுதான் சுயராஜ்யக் கட்சிக்கு அர்த்தம் போலும். இதைப்பற்றி பம்பாய் மாகாணத்தில், திலகர் பத்திரிகை யென்று சொல்லப்படும் “மராட்டா” என்கிற ஓர் பிராமணப் பத்திரிகை எழுதியிருப்பதைப் பார்த்தாலே “தமிழ்நாட்டு ராஜீய பிராமணர்களின் யோக்கிய”தை நன்றாய் விளங்கும். அதாவது:-
“தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டியார் வெளியிட்டிருக்கும் தேர்தல் விளம்பரமானது கான்பூர் காங்கிரஸ் தீர்மானத்துக்கு விரோதமாயிருக்கிறது. சட்டசபைகளைவிட்டு விலகுதலும் தடை வேலை செய்வதும் தங்களுடைய திட்டமென்று சொல்லிக் கொண்டு, அதே சமயத்தில் கள்ளை ஒழிக்கப் பிரயாசைப்படுகின்றோமெனச் சொல்லுவது ஒன்றுக்கொன்று பொருத்தமா யில்லை. காங்கிரஸ்காரர்கள் அடுத்த தேர்தலில் நாணயமாய் நடந்து கொள்வ தானால், முட்டுக் கட்டை போடுவதன் மூலம் சட்டசபையில் வேலை செய்வோமென்று தான் சொல்லிப் போய்ப் போராட வேண்டுமேயொழிய, குடியை ஒழிக்கப்போகிறோம் என்று சொல்லிப் போகப் பார்ப்பது பாமர ஜனங்களின் கண்களில் மண்ணைத் தூவுவதான துரோகம் செய்ததாகும்”.
இதற்குக் காந்தியடிகளைப் பின்பற்றுவோர் என்று சொல்லிக் கொள் ளும் ஸ்ரீமான் முதலியாரும், காந்தியடிகளின் சிஷ்யர் என்று பொது ஜனங்கள் கருதும்படி நடக்கும் ஸ்ரீமான் ஆச்சாரியாரும் ஏதாவது பதில் சொல்லு வார்களா? அல்லது “திட்டு வந்து பெட்டி நிறைகிறதா, துட்டு வந்து பெட்டி நிறைகிறதா” என்ற பழமொழிப் படிக்கு யாரோ, எவரோ நம்மை எப்படியும் சொல்லிக் கொள்ளட்டும்; நமக்கு கொஞ்சம் நஞ்சம் உள்ள நற் பெயரைக் கொண்டு பிராமணாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளலாம் என்று தங்கள் ஏமாற்றுப் பிரசாரத்தை நடத்திக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.
குடி அரசு – தலையங்கம் – 28.02.1926