தென்னிந்திய ரெயில்வே ஆலோசனை கமிட்டி
இம்மாதம் 27-ந் தேதியன்று சென்னையில் நடைபெறப்போகும், தென்னிந்திய ரெயில்வே ஆலோசனைக் கமிட்டிக்கூட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானங்களை கொண்டுவரப் போவதாக, ³ கமிட்டி மெம்பர், கோய முத்தூர் ஸ்ரீ மான் . சி.எஸ். இரத்தினசபாபதி முதலியாரவர்கள் தெரிவிக்கிறார்.
(1) ரெயில்வே பிளாட்பாரத்தில் பிரயாணிகளுக்கு தண்ணீர் கொடுப் பதில் எவ்வித வித்தியாசமும் பாராட்டக்கூடாது.
(2) ரெயில்வே ஸ்டேஷன்களிலுள்ள இங்கிலீஸ் உணவுச்சாலைக்கு, ஐரோப்பியர்களோ அன்றி இந்தியர்களோ சென்றால் அவர்கள் யாவரையும் ஒன்று போலவே நடத்தவேண்டும். மற்றும், ரெயில் வண்டியிலிருந்து கொண்டே உணவைத் தருவித்தாலும், அப்போதும் ஐரோப்பியர், இந்தியர் என்கிற வித்தியாசமின்றியே நடத்தவேண்டும். இங்ஙனம் செய்ய ³ உணவுச்சாலைகளை நிர்வகிக்கும் மெஸர்ஸ் ஸ்பென்ஸர் கம்பெனியாரை இச்சபை கேட்டுக்கொள்ளுகிறது.
(3) ரெயில்வே ஸ்டேஷன்களிலுள்ள இந்திய உணவுச்சாலைகளில் எவ்வித ஜாதிவித்தியாசமும் பாராட்டலாகாது. ஜாதி வேற்றுமையைக் காட்டக் கூடிய – இப்போதுள்ள சாதனங்களை- உடனே நீக்கி விடவேண் டும். மேலும், ஒவ்வொரு போஜன சாலையிலும், சகல ஜாதியார்களிலும், மரக்கறி பதார்த்தங்கள் உட்கொள்ளுபவர்களுக்கென்றும், மாமிச ஆகார வகைகள் உட்கொள்ளுபவர்களுக்கென்றும் இரண்டு இடங்கள் பிரிக்கப்பட வேண்டும். முன்னர் கூறிய பிரிவிற்கு, பிராமண சமையற்காரரையும், பின்னர் கூறிய பிரிவிற்கு மகமதிய சமையற்காரரையோ, அல்லது ரஜபுத்ர சமையற் காரரையோ நியமிக்கவேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கென தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்,
( 4 )இப்பொழுதுள்ள கோயமுத்தூர் ரெயில்வே ஸ்டேஷனை ஒரு ஜங்ஷனாக மாற்றவேண்டும்.
நமது குறிப்பு:-
தீர்மானங்களின் பிரேரேபனைகளை நாம் மனப்பூர்வமாய் ஆதரிப்ப தோடு மிகவும் பாராட்டுகிறோம். உண்மையிலேயே இத்தீர்மானங்கள் வெகு காலத்திற்கு முன்னதாகவே செய்திருக்க வேண்டியது. தென்னிந்திய ரெயில்வே ஆலோசனைக் கமிட்டியிலுள்ள மற்ற கனவான்களும் இதை ஆதரித்து அமுலுக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம். ஆனால், பிராமண சமையற்காரரையே நியமிக்க வேண்டு மென்பதற்குப் பொருள் விளங்கவில்லை.
( ப – ர். )
குறிப்பு :- 27-1-26- ந் தேதி நடைபெறப்போகும் தென்னிந்திய ரெயில்வே ஆலோசனைக் கமிட்டிக் கூட்டத்தில் நிறைவேற்றப் போகும் தீர்மானங்களை இ.ந.இரத்தின சபாபதி தெரிவித்தது பற்றிய செய்தி விளக்கக் குறிப்பு.
குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 24.01.1926