சுவாமிகளும் தேவடியாள்களும் – சித்திரபுத்திரன்
நமது நாட்டில் உள்ள எல்லா கெட்ட காரியங்களுக்கும் “நமது நாட்டு கடவுள்”களே வழிகாட்டிகளாகயிருக்கிறார்கள் . அதாவது சூது வாது, வஞ்சகம், பொய், புரட்டு, திருட்டு, விபசாரம், குடி, கூத்தி, கொலை, ஜீவ இம்சை முதலிய எந்த கெட்ட தொழிலை எடுத்துக் கொண்டாலும் சில கடவுள் களிடத்தில் இவையாவும் மொத்தமாகவும், சில சில கடவுள்களிடத்தில் தனித் தனியாகவும் சில்லரையாகவும் ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து வரு கிறோம். இதே குணங்கள் நமது கடவுள்களுக்கு இருப்பதாக நாமே தினப்படி யும், மாதப் படியும், வருஷப்படியும் காலnக்ஷப மூலமாகவும், நடிப்பு மூலமாக வும், பூஜை மூலமாகவும், பஜனை மூலமாகவும், திருவிழாக்கள் மூலமாகவும் நடத்திக் காட்டிக் கொண்டும் வருகிறோம். இவைகளுக்காகவே நமது பெரியவர்களும் ஏராளமான சொத்துக்களையும் விட்டு இவைகள் தவறாமல் நடந்து வரச் செய்திருக்கிறார்கள் . தற்கால தர்ம பரிபாலனம் என்பதும் பெரும்பாலும் இக்காரியங்களைப் பரிபாலனம் பண்ணுகிறவைகளாகவே இருக்கின்றன.
இந்த நிலையில் ஏற்படுத்திய கடவுளை வணங்கும் மக்களுக்கு ஒழுக்கம் எப்படி உண்டாகக் கூடும்? இம்மாதிரியான தர்மங்களை பரிபாலனம் செய்யும் மக்கள் எப்படி ஒழுக்கமாக இருக்க முடியும்? கடவுள்களும் கடவுள் களைப் பற்றிய கதைகளும் புராணங்களும் மற்றும் அது சம்மந்தமான நடவடிக்கைகளும் மக்களுக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் உண்டாக்கு வதற்கு உண்டாக்கப்பட்டனவேயன்றி இம்மாதிரி பலன்களுக்கு உண்டாக்கப் பட்டதாக யாரும் ஒப்புக் கொள்ள முடியாது.
மேற்கண்ட அனேக விதமான ஒழுக்கக் குறைவுகள் கடவுள் பெய ரால் நடப்பவைகளும் இது சமயம் சுவாமியின் பெயரால் பெண்களுக்கு விபசாரித்தனத்திற்கு அனுமதிச் சீட்டு (பொட்டுக் கட்டுதல்) என்னும் லைசென்ஸ் கொடுக்கப்படுவதைப் பற்றி மாத்திரம் இவ்வியாசத்தில் எடுத்துக் கொள்ளுவோம். கோயில்களுக்கு தாசிகள் என்னும் விலைமாதர்கள் எதற்காக வேண்டும்? மேளமடித்தல், மணியடித்தல் முதலிய காரியங்கள் எதற்காக பூஜைக்கு உபயோகப்படுகிறது என்று யாராவது கேட்டால் சுவா மிக்கு தீபாராதனை ஆகும் போது வேறு சப்தங்கள் காதில் விழாமல் இருக்கும் பொருட்டு மணிச் சப்தங்களும், மேள வாத்தியங்களும் செய்யப் படுகிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது. இது சரியோ தப்போ அதைப்பற்றி நாம் இப்போது விவரிக்க வரவில்லை. வேறு சப்தங்கள் காதில் படாமல் இருப்பதற்கு மணியும், மேளமும் வைத்திருப்பதானால் விலைமாதர்களான விபசார ஸ்தீரிகளை கோவிலில் நிறுத்தி இருப்பதன் காரணம் என்ன? என்று இந்த முறையில் யோசிப்போமானால் சுவாமி தீபாராதனையின் போது பக்தர்களுக்கு வேறு சாமான் கண்களில் படாமல் இருப்பதற்கு இந்த சாமான் களை (விபசாரிகளை) நிறுத்தி வைத்திருப்பதாகத்தான் கொள்ள வேண்டும். இதை யாராவது அறிவாளிகளின் வேலையென்று சொல்லக் கூடுமா?
நமது நாட்டில் விபசாரத்திற்காக பொட்டுக்கட்டிக் கொள்ளும் தாசிகள் எல்லோரும் ஒவ்வொரு சுவாமியின் பெயரால்தான் தங்களைப் பொது மக்கள் என்று முடிவுகட்டி விளம்பரப்படுத்திக் கொள்ளுகிறார்களேயல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லாததால் இந்த வியாபாரத்திற்கு போகிறேன் என்று யாரும் சொல்வதே இல்லை. இந்தமாதிரி அனுமதிச்சீட்டு கொடுக்கும் கடவுள் வேறு எந்த மதத்திலாவது இருக்கிறதாவென்பதை யோசித்துப் பார்த்தால் நமது அறியாமையும் நமது கடவுள்களுக்கு நாம் செய்யும் இழிவும் புலப்படாமல் போகாது.
தவிர, வேறு விவகார முறையில் பேசுவதானாலும், அதாவது கடவுளுக்கு பணி செய்ய இவர்கள் கோயிலில் நியமிக்கப்படுகிறார்கள் என்று சொல்வதானாலும் இருந்திருந்து கடவுளுக்கு பணி செய்ய இந்த வியாபாரத்தில் ஈடுபட்டவர்களைத்தானா நியமிக்க வேண்டும்? வேறு யோக்கியமான தொழிலில் உள்ள பெண் மக்கள் உங்கள் சமூகத்தில் இல்லையா என்று யாராவது கேட்டால் அதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லக்கூடும்? இம்மாதிரி ஒவ்வொரு முக்கிய கோயிலிலும் பூஜை காலத்தில் 10, 20, 30 சில கோயில்களில் 100, 150 வீதம் விபசாரப் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டு கோயிலுக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் முன்னிலையில் நடனமாடினால் அந்த பக்தர்களின் கதி என்ன ஆவது? கிராமாந்தரங்களில் எந்த கோயிலில் பார்த்தாலும் உள்ளதுக்கும் நன்றாய் கொஞ்சம் அழகாய் இருக்கிற தாசிகள் , முதலாவது தர்மகர்தாவுக்கு அல்லது அவர்கள் மக்களுக்கு. அதற்கடுத்தது தான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு என்பதாகவே வழக்கமாயிருக்கிறது.
கிராமாந்தரங்களில் உள்ள கோயில்களின் கதி இப்படி யென்றால் சில பெரிய பட்டணங்களிலும், முக்கிய ஸ்தலங்களிலும் உள்ள கோயில்களின் சங்கதி கேட்க வேண்டியதில்லை. விசேஷ ஸ்தலங்களில் உள்ள கோயில் களின் தாசிக்கு பெரும்பான்மையும் அந்தந்த கோயில் அர்ச்சகர்கள் முதலியவர்களே தரகர்களாகி விடுகிறார்கள். அவர்கள் சுவாமிக்கும் நமக்கும் இடையில் எப்படி தரகர்களாயிருக்கின்றார்களோ அது போலவே இந்த ‘அம்மன்’களுக்கும் நமக்கும் தரகர்களாயிருந்து கொண்டு யாத்திரைக்கார வாலிபர்களைப் பாழாக்கி விடுகிறார்கள். சுவாமி பக்திக்காக கோயில்களுக்குப் போகும் பக்தர்கள் நாளா வட்டமாய் பழகி தாசி பக்தர் களாகிவிடுவதை நாம் எத்தனையோ பார்த்திருக்கிறோம். இந்த அநாகரீகமும் கெடுதி யுமான காரியங்கள் மதத்தின் பெயராலும் சுவாமியின் பெயராலும் நடை பெறுவதானது நமது சமூகத்திற்கே இழிவு என்று சொல்லாமலிருக்க முடிய வில்லை. “சாஸ்திரங்களிலிருக்கிறது. அதற்கு நாம் என்ன செய்வது” என்று சிலர் சொல்லலாம். “வெகு காலமாய் வழக்கத்தில் வந்து விட்டது, அதற்கு நாம் என்ன செய்வது” என்று சிலர் சொல்லலாம். இதெல்லாம் முட்டாள்தனமான சமாதானமாகுமே தவிர அறிவுள்ள சமாதானமாகாது. நம்முடைய சாஸ்திரத்தில் இல்லாத அயோக்கியத்தனம் உலகத்தில் ஒன்று கூட இல்லை என்பதாக நம்மால் மெய்பிக்கலாம். அதையெல்லாம் இன்றைய தினம் நாம் செய்வதென்றால் நம்மைப் போல் மூடர்கள் உலகத்திலிருக்கவே முடி யாது. அந்த சாஸ்திரங்கள் என்பவைகளை எழுதினவர்கள் யார்? அவர் களுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? எதற்காக இப்படியெல்லாம் எழுதி னார்கள்? இம்மாதிரி வேறு தேசத்தில் வேறு மதத்தில் வேறு சாஸ்திரத்தில் எங்கேயாவது இருக்கிறதா? என்பவைகளை யோசித்துப் பார்த்து பிறகு இவற்றை கவனிக்க வேண்டுமேயல்லாமல், எவனோ தனக்கு தொழில் வேண்டும், வயிற்றுப் பிழைப்பு நடக்க வேண்டும் என்பதாக ஏதாவது ஒன்றை எழுதிவைத்து நமக்குக் காட்டினால் அதுவே நமக்கு கடவுள் வாக்காகி விடுமா அல்லது ஆதாரமாகி விடுமா? மனிதனுக்கு பகுத்தறிவு எதற்காக இருக்கிறது? இப்பொழுது வரவர அனேக கோயில்களில் இந்த தாசி வழக்கத்தை எடுத்தாகி விட்டது. உதார ணமாக மைசூர் கவர்ன்மெண்டார் தங்கள் ஆட்சிக்குள்பட்ட கோயில்களுக்கு எங்கும் தாசி உத்தியோகம் இருக்கக்கூடாது என்பதாக ஒரு உத்திரவு போட்டு தங்கள் சாமிகளை விபசாரத்தனத்திலிருந்து மீட்டு விட்டார்கள் . அதன் மூலம் அந்த சமஸ்தா னத்து கோயில் தாசிகள் எல்லாம் நீக்கப்பட்டாய் விட்டது. மைசூர் சமஸ் தானத்து சுவாமிகளுக்கு வெட்கம் வந்து தங்களுக்கு இனிமேல் தாசிகள் வேண்டியதில்லை என்று அந்த கவர்ன் மெண்டுக்கு சொல்லி விட்டது போல் நமது நாட்டு சுவாமிகளுக்கும் என்றைக்காவது வெட்கம் வந்தோ அல்லது கிழப் பருவம் வந்தோ இனிமேல் தங்களுக்கு தாசிகள் வேண்டியதில்லை என்று தேவஸ்தான போர்டாரிடமாவது, கமிட்டியாரிடமாவது, தர்ம கர்த்தாக் களிடமாவது சொல்லிவிட கூடாதா? என்பதாக நமது நாட்டு சாமிகளைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 04.09.1927