மந்திரிகளின் நிலை
கோவை மகாநாட்டில் இரட்டை ஆட்சி அழியும் வரை மந்திரி முதலிய உத்தியோகம் ஒப்புக்கொள்ளுகிறதில்லை என்கிற தீர்மானம் செய்யப்பட்ட வுடன் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களின் நிலை கொஞ்சம் கஷ்டமாகி விட்டது. எதனாலென்றால் மதுரை மகாநாட்டிலேயே “இந்த சட்டசபை உள்ள வரை மந்திரி பதவி ஒப்புக்கொள்ளுவதில்லை” என்று தீர்மானித்திருந்தும் காங்கிரஸ்காரர்கள் மந்திரிகளை ஆதரித்து வந்தார்கள். அதற்கு உண்மை யான காரணம் “இந்த மந்திரி சபையை ஆதரிப்பதின் மூலம் பார்ப்பனரல்லா தார்களுக்கு பார்ப்பனரல்லாதார் கட்சி மந்திரிகளால் சென்ற 6 வருட காலமாய் ஏற்பட்ட நன்மைகளையும், முற்போக்குகளையும் ஒழித்து பழையபடியே அரசாங்க பதவிகளையும், மற்றுமுள்ள ஸ்தாபனங்களையும், பார்ப்பன அக் கிரகாரத்திற்கே சுவாதீனமாக்கிக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தின் மேல் அதை ஆதரித்து வந்ததோடல்லாமல்” “ஜஸ்டிஸ் கட்சியார் இந்த கவுன்சிலில் மந்திரி உத்தியோகம் பெற்றுக்கொள்ளாவிட்டாலும், அடுத்த கவுன்சிலிலாவது உத்தியோகம் பெற்றுக் கொள்வார்களாதலால் நாங்கள் தற்கால மந்திரிகளை ஆதரிக்கிறோம்” என்று (ஓணாய் ஆட்டுக்குட்டி கதைபோல்) சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்படிச் சொல்லுவதன் மூலம் இன்னும் ஒரு கவுன்சில் தேர்தல் நடக்குமானால் அதில் தாங்கள் வெற்றிபெற முடியாதென்று உறுதி கொண்டதையும் தங்களது மோசங்களையும் அயோக்கியத்தனங்களை யும் பாமர மக்கள் உணர்ந்து கொண்டார்கள் என்பதையும், பார்ப்பனரல்லாதார் கட்சியின் உண்மைத் தத்துவத்தையும் பாமர மக்கள் அறியும்படி ஏற்பட்டு விட்ட தென்பதையும் தாங்களே ஒப்புக்கொண்டதுபோல் ஆகிற தென்பதைக் கூட கவனியாமலும், காங்கிரஸ் திட்டத்திற்கு விரோதமாய் நடந்தாலும் காங்கிரசின் மூலமே தங்களது நடவடிக்கையை காங்கிரசே சரி என்று ஒப்புக் கொள்ளச் செய்துவிடலாமென்று எண்ணி அப்படியே செய்துவிட்டதின் மூலம் காங்கிரஸ் பார்ப்பன சூழ்ச்சி ஸ்தாபனமென்று ஜனங்கள் நினைப்பது சரியென்று ஏற்பட்டாலும் தங்களுக்கு அதைப் பற்றிப் பயமில்லை என்று நினைத்திருப்பதை காட்டிக் கொள்வதாகிறது என்பதையும், கவனிக்காமலும் தங்கள் காரியத்தை சாதித்துக்கொண்டு வந்தார்கள். இப்போது அந்த சமாதானத்தைச் சொல்லி பாமர மக்களை ஏமாற்றுதற்கில்லாமலும், இனி ஒரு தேர்தல் நடக்கக்கூட இடமில்லாமல், அதாவது இரட்டையாட்சி மாறுகிறவரை உத்தியோகம் ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றிவிட்டு இனி இந்த காங்கிரஸ்காரர்கள் என்கிற பார்ப்பனர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்றறிய பார்ப்பனரல்லாத கட்சியை சேர்ந்த ஒரு சட்டசபை அங்கத்தினர் மந்திரிகளின் மீது நம்பிக்கையில்லாத தீர்மான மும் கொண்டு வந்தவுடன் பார்ப்பனர்களுக்கு நிலைமை கஷ்டமாகிவிட்டது இதன்பேரில் பழயபடி பாமர மக்களை ஏமாற்றுவதற்கென்றே தாங்களும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதுபோல் பாசாங்கு செய்ய உத்தேசித்து அவர்களும் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்போவதாக வெளியிட்டிருக்கிறார்கள் என்றாலும்,
இது மந்திரிகளைக் கலந்து யோசனை செய்தபிறகுதான், அதாவது மந்திரிகளுக்கு தைரியம் சொல்லிவிட்டு இத்தீர்மானம் கொண்டு வந்திருக் கிறார்கள். ஏனென்றால் மந்திரிகளிடம் அவர்களைக் காப்பாற்றுவதாக வாக்க ளித்து மாதம் 1 -க்கு 400, 500 வாங்கிக்கொண்டு அவர்களை காப்பாற்றி வரும் காங்கிரஸ் பார்ப்பனர்களை யாவரும் தெரிந்திருக்கக்கூடும். இப்பொழுது திடீரென்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவர்களை ஒழிப்ப தனால் மாதம் 400,500 கிடைக்குமா? தவிர ஸ்தல ஸ்தாபனங்களிலும் இந்த மந்திரிகளை மிரட்டி பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமைகளுக்கும் உத்தியோகம்செய்து வைப்பதாக ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் போன்றவர் கள் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் செய்து கொள்ள முடியுமா? இனி யாருக்காவது செய்து வைப்பதாக வியாபாரம் பேசமுடியுமா? இந்த மந்திரிகளின் அதிகாரம் ஒழிந்து பார்ப்பனரல்லாத கட்சி மந்திரிகளுக்கு போகாமல் வெள்ளைக்காரருக்கு இந்த அதிகாரம் போவதாயிருந்தாலும் கூட இப்போதைய மந்திரிகளால் தங்களுக்கு நடக்கும் சவுகரியத்தில் பத்தில் ஒரு பங்காவது செய்துகொள்ள முடியும்? என்பவைகளை யோசித்துப் பார்த்ததில் முடியாது என்பதாக அறிந்து வேஷத்திற்காக கொண்டு வந்திருக்கிறார்களே அல்லாமல் வேறல்ல.
இதன் முடிவை இப்போதே சொல்லிவிடலாம். அதாவது இந்த தீர்மானம் சட்டசபைக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. காங்கிரஸ்காரர்கள் என்போர்கள் சிலர் “நான் நோகாமல் அடிக்கிறேன், நீ ஓயாமல்அழு” என்பது போல் வெகு உக்கிரமாக மந்திரிகளை வைவதுபோல் ஜனங்கள் நினைக்கும் படி சர்க்காரைத் தாக்கி பேசவும் பேசுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. கடைசியாக ஓட்டு எடுக்கும்போது இத்தீர்மானம் தோற்றுப் போகும்படி செய்துவிட்டு மந்திரிகளிடமும் இரட்டை கூலி வாங்கி கொள்ளக்கூடும். இதுதான் அனேகமாய் முடியப்போகிறது. எப்படி எனில், இப்போது உள்ள சட்ட சபை மெம்பர்கள் மொத்தம் 128 இருக்கலாம். இதில் சுயராஜ்யகக்ஷியார் 42, ஜஸ்டிஸ் கக்ஷியார் 22, சுயேச்சை எதிர்ப்பு கட்சியார் 4 பேர் ஆக ஒட்டு மொத்தம் எதிர்ப்புக்காரர்கள் சுமார் 68 பேர்கள் இருக்கலாம். போனால் மீதி சுமார் 60 பேர் மந்திரியை ஆதரிக்கிறவர்களாக இருக்கக்கூடும். எதிர்ப்புக்கு அதிகமாயுள்ள எண்ணிக்கை 8 தான் ஏற்படுகிறது. இந்த 8 பேர்களுக்கும் அத்தீர்மானத்தன்று “காயலாவாகவும்” “வேறு ஊருக்குப் போகவும்” அவர்கள் வீட்டில் ஏதாவது ஒரு ‘பாட்டி சாகவும்’, “பாட்டனுக்கு திதி வரவும்” “வேறு அவசரமான காரியம் ஏற்படவும்” “ரயில் தப்பி போகவும்” வேண்டிய முயற்சிகள் இப்போது இருந்தே நடைபெற்று வருகிறது. இந்தவேலையில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி, எ.ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார், முதலியவர்கள் வெகு தீவிரமாய் இருக்கிறார்கள். ஸ்ரீமான். சி. ராஜகோபாலாச் சாரியாரின் உதவிகூட வேண்டப்படுகிறது. ஸ்ரீமான் சர். சி.பி. அய்யர் அவர்களின் செல்வாக்கு சந்து பொந்துகள் எல்லாம் உலாவுகிறது. முனிசீபு வேலை முதலானவைகள் கூட மாற்றுப் பண்டங்களாக விலை கூறப்படுகிறது. இவைகள் ஒரு புறமிருக்க மந்திரிமார்களின் பிரயத்தனங்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? அவை ஆகாயத்திற்கும், பூமிக்கும் தாண்டவ மாடுகிறது. மந்திரிகள் ஊர் ஊராய் பிரசாரம் செய்யப் போவதாய் சொல்லியி ருப்பதே இதுதான் என்பது யாவருக்கும் முன்னமேயே விளங்கிவிட்டது. ஸ்ரீமான் சுப்பராய மந்திரி இலாகா, ஸ்தல ஸ்தாபன நியமனங்கள் முதலியவை சட்டசபை அங்கத்தினர்கள் மீட்டிங்குக்கு வராமல் இருப்பதற்கு மாற்றுப் பண்டங்களாக ஏலம் கூறப்படுகிறது. அங்கத்தினர்களின் சுற்றத்தாருக்கு உத்தியோக சிபார்சுகள் பறக்கிறது. மற்ற மந்திரிகளின் முயற்சிகளும் பண்ட மாற்றுகளும் அதுபோலவே வர்ஜ்ஜா வர்ஜ்ஜம் பாத்திரம், அபாத்திரம் என்கிற பேச்சில்லாமல் தாண்டவமாடுகிறது. இவ்வளவுக்கும் மேலாக பார்ப்பனர் களுக்கு வேண்டிய கொள்ளைக்கார அதிகாரிகளின் மிரட்டல்களும், சிபார்சு களும் ஒரு புறம் ஊடுருவி பாய்ந்துகொண்டு இருக்கின்றன.
இவைகள் தவிர யாராவது ஒரு மந்திரி ராஜினாமா கொடுத்து வேறு ஒரு கோயம்புத்தூர் கனவானுக்கு மந்திரி வேலை செய்து வைப்பதாகவும், அக்கனவான் சட்டசபை மெம்பராவதற்காக இப்போதிருக்கும் ஒரு சட்டசபை மெம்பரை ராஜினாமா கொடுக்கும்படியும் ஏற்பாடுகள் நடப்பதாகவும், அந்த கனவான் முழு பிரயத்தனத்துடன் மந்திரிகளின்மேல் வரும் நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தை தோற்கடிக்க வேலை செய்வதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது. இத்தனை தத்துக்களையும் தப்பி நம்பிக்கை இல்லை தீர்மானம் நிறைவேறும் என்பதும் இம்மந்திரிகள் போய்விடுவார்கள் என்ப தும் சுலபமாய் முடிவுகட்டக்கூடிய காரியமல்ல என்பதே நமது அபிப்பிராயம். அப்படித்தான் அவர்கள் போய் விடுவதாலேயே பார்ப்பனர்கள் ஆதிக்கம் குறையும் என்று சொல்லிவிடவும் முடியாது. அதற்கு தகுந்தவர்களை பிடித்து அவர்களுக்கு வேண்டியதை செய்து தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே பாடுபட்டு வெற்றியடைய பார்ப்பார்கள்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 17.07.1927