ஓட்டர்களை ஏமாற்றுதல்

ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச்சாரியார் முதலிய பிராமணர்களின் தந்திரம்

சென்ற சில காலமாக பிராமணரல்லாதார் பெரும்பாலும் சட்ட சபைகளிலும், தாலூகா , ஜில்லா போர்டு, முனிசிபாலிடி முதலிய ஸ்தல ஸ்தாப னங்களிலும் மெஜாரிட்டியாராக ஏற்பட்டு, பிராமணரல்லாதாரின் முன்னேற் றத்தைக் கவனித்துக் கொண்டு வருவதில் தென்னாட்டுப் பிராமணர்கள் மனம் பொறாதவராகி பொறாமையுங் கெட்ட எண்ணமுங் கொண்டு, எப்படியாவது பிராமணரல்லாதாரைச் சட்டசபைகளிலிருந்தும், ஸ்தல ஸ்தாபனங்களிலி ருந்தும் விரட்டியடித்து, முன்போலவே தங்கள் ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரில் சகல பிரயத்தனங்களையும் செய்து வருகிறார்கள்.

பிராமணரல்லாதாரில் சில ராஜீயவாதிகளென்போர் இவற்றை நன்றாய் அறிந்திருந்தும், தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்க்கை நலனுக்கும், கீர்த்திக்கும் ஆசைப்பட்டுக் கொண்டு பிராமணர்களின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிவதோடல்லாமல், பிராமணரல்லாத சமூகத்தாருக்கே கேடு சூழும்படி வாழ்ந்து வருகிறார்கள். அல்லாமலும், பிராமணரல்லாத தேசீயப் பத்திரிகைகள் என்று சொல்லப்படும் பல பத்திரிகைகளும் தங்களுக்கென ஒரு கொள்கையில்லாமலும், மனிதத் தன்மையும், ஆண்மைத் தனமும் இல்லாமலும் பத்திரிகை நடத்துவதும், பணம் சம்பாதிப்பதும்தான் மோக்ஷ சாதனமெனக் கருதிக்கொண்டு, சமயத்திற்குத் தகுந்தபடி நடந்து கொண்டு தங்கள் சமூக முன்னேற்றத்தைப் பாழாக்கிக் கொண்டு வருகின்றன. அன்றியும், பிராமணரல்லாதாரிலேயே சில படித்தவர்களென்போரும் பிரபுக் களென்போரும், தங்கள் தேசத்தையும் சமூகத்தையும், மனச்சாக்ஷியையும் விற்று விட்டு எப்படி நடந்து கொண்டால் சட்டசபைக்குப் போகலாம்; பதவி கள் பெறலாம்; உத்தியோகம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்துக் கொண்டவர் களாகி அவர்களும் சமயம் போல் நடந்து வருகிறார்கள். ஆகிய மேற்கண்ட வர்களெல்லாம் இம்மாதிரி தங்கள் சுயநலத்தை மாத்திரம் கவனித்து நடப்ப தால் பிராமணாதிக்கத்தை நிலை நிறுத்தப் பாடுபட்டு வரும் பிராமணர்களுக்கு மிகவும் அநுகூலம் ஏற்பட்டு, அவர்கள் வஞ்சகம் சுலபத்தில் ஈடேறும்படி யாயிருந்து வருகிறது. இம்மாதிரியான காரியங்களால் பொது ஜனங்களும் இவர்கள் வஞ்சகத்தை அறிய முடியாமற்போய் விடுகிறது. இதனால் பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதாரை என்ன வேண்டுமானாலும் சூழ்ச்சி கள் செய்யலாம்; இதை வெளியாக்குவதற்கு மார்க்கமில்லாமல் பிராமண ரல்லாத தலைவர்களென் போரையும், பத்திராசிரியர்களென்போரையும் திசைக் கட்டுக்கட்டி, அடக்கி, சுவாதீனப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கி றோம் என்கிற அகம்பாவத்தின் பேரில், அண்டப் புரட்டுகளும், ஆகாசப் புரட்டுகளும் புரட்டி வருகிறார்கள். சென்ற சட்டசபைத் தேர்தல்களில் முட்டுக்கட்டை போடுவதற்காகவும், ஒத்துழையாமை செய்வதற்காகவும் சட்ட சபைக்குப் போகிறோம் என்று சொல்லிப் போய், தங்கள் பிள்ளை குட்டிகளுக் கும், இனத்தாருக்கும் உத்தியோகம் சம்பாதித்துக் கொடுப்பதிலேயும், அடுத்த தேர்தலிலும் சட்டசபைக்குத் தாங்களே போவதற்கு ஆக்கந் தேடிக் கொள்ளு வதிலேயும் கவலையாயிருந்து விட்டு, மறுபடியும் இவ்வருடம் மதுவிலக்கை அடியோடு ஒழித்து விடுகின்றோம் என்று சொல்லுவதின் பேரால் வோட்டர் களை ஏமாற்றி சட்டசபைக்குப் போகப் பார்க்கிறார்கள்.

இதற்கு அநுகூலமாக காங்கிரசையும் உபயோகப்படுத்திக் கொள்ளுவ தோடு மகாத்மாவின் பெயரையும் உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்கள். அல்லாமலும், உண்மையான ஒத்துழையாதாரென்றும், யோக்கியரென்றும், சொல்லும்படியாக ஓர் காலத்தில் பொது ஜனங்களின் அபிப்ராயம் பெற்று விட்ட ஸ்ரீமான் சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் இச்சூழ்ச்சியின் பெரும் பாகத்தைத் தானே ஏற்றுக்கொண்டு நடத்தி வருகிறார். சென்ற சில வாரங்களாக, பிராமணர்களுக்கே வோட் கொடுங்கள் என்று சொல்லுவதற்குப் பதிலாக, சுயராஜ்யக் கட்சியாருக்கே வோட் கொடுங்கள்; அவர்கள் சட்டசபை களில் கள்ளை நிறுத்துவார்கள் என்று தைரியமாய் பாமர ஜனங்களை ஏமாற்று கிறார். இதைக் கண்டு சில பாமர ஜனங்கள் ஏமாந்து போகக் கூடுமாதலால், ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியாரின் யோக்கியதையைப் பொது ஜனங்கள் அறியச் செய்ய வேண்டியது நமது கடமையாகிவிட்டது. சட்டசபையைப் பற்றி சென்ற ஆண்டுக்கு முன்னாண்டில், பொது ஜனங்களிடம் நல்ல பெயர் பெற பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் ஸ்ரீமான் இராஜகோபா லாச்சாரியார் சட்டசபை என்கிற தலைப்பின் கீழ் வெளியிட்டிருக்கும் நோட்டீசில் கண்ட அபிப்ராயங்களை வெளியிடுகிறோம். அதாவது:-

“இனி நடக்கப் போகும் சட்டசபைத் தேர்தல்களில் சேராமலும், எந்த அபேக்ஷகருக்கும் வாக்குக் கொடுக்காமலும், தேசபக்தர்கள் யாவரும் அபே க்ஷகர்களாக நிற்காமலும் இருக்க வேண்டியது நம்முடைய கடமை.

இதற்கு முக்கிய காரணங்களாவன : –

1. சட்டசபைக்குப் போவதில் ஜனங்களுக்கு ஒரு பிரயோஜனமும்
உண்டாகாததோடு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தி பெரிய
விஷயங்களை மறக்கும்படி செய்துவிடும்.

2. இராணுவ பலத்தாலும், தங்கள் மிருக பலத்தாலும் ஆண்டுவரும்
அரசாங்கத்தார், நம்முடைய சம்மதத்தின் பேரிலும் சமாதானத்தின்
பேரிலும் ஆண்டு வருவதாகச் சொல்லித் திரிய இடங் கொடுத்
தவர்களாவோம்.

3. சட்டசபையைப் பகிஷ்காரம் செய்ய 1920-ம் வருடத்தில் இருந்த
காரணங்கள் இப்போதும் இருந்து கொண்டு வருகின்றன.

4. அரசாங்கத்தார் சட்டசபை விஷயமாகச் செய்திருக்கும் விதிகளின்
படி, அதிகார வர்க்கத்தாருடைய செயல்களை சட்டசபை அங்கத்
தினர்களால் தடுக்க முடியவே முடியாது. சர்வ அதிகாரமும், அதிகார
வர்க்கத்தார் வைத்துக்கொண்டிருப்பதோடு நம்முடைய பிரதிநிதிகள்
அதிகாரவர்க்கத்தின் ஏமாற்றுதலுக்கும் உட்பட்டுப் போவார்கள்.

5. நாம் செய்ய வேண்டிய வேலைகள், கதர்ப் பிரசாரம், தீண்டாமை
யொழித்தல், ஜாதி ஒற்றுமையை வளர்த்தல் முதலிய பல
வேலைகளிருக்க, இவைகளை விட்டு வோட்டுகள் சம்பாதிக்கவும்,
சட்டசபைக்குள் சென்று காலத்தையும் பணத்தையும் வீணாக்
குவதும் தவறாகும்.

6. சட்டசபைக்குள் சென்று இராஜபக்தி சத்தியம் செய்வதும், சட்டசபை
வேலையைச் சரிவரச் செய்வேனென்று பிரமாணம் கொடுப்பதும்
நமது சுயமரியாதைக்கும் மனச்சாக்ஷிக்கும் விரோதமாகும்.

7. தற்போது அமைக்கப்பட்டுள்ள சட்டசபைகள், உபயோகமில்லை
யென்று உலகமே கோஷித்துக் கொண்டிருக்க நாம் அவைகளுக்
குள் பிரவேசிப்பது நகைப்பிற்கிடமாகும்.

8. சட்டசபைக்குள் நமது உண்மைத் தலைவர்களெல்லாம் சென்று
விட்டால், காங்கிரஸ் மகாசபைக்கிருக்கும் கௌரவமெல்லாம்
குறைந்து, சட்டசபைகளுக்கு மதிப்பு வளர்ந்து சர்க்கார் ஆட்சி
நிலைபெற்று விடும்.

9. அல்லாமலும், நமக்குள் இருந்துவரும் ஜாதிச் சண்டைகளும்
பொறாமைகளும் அதிகமாகும்.

10. காங்கிரஸ்காரர்கள் சட்டசபைகளைக் கவனியாமலிருந்தால் பொறா
மைக்கிடமில்லாமல் ஒற்றுமை வளரும்.”

இவ்விதமாக சுமார் 10 அபிப்ராயங்களைச் சென்ற தேர்தலுக்குச் சொன்னவரும், இனியும் தான் ஒத்துழையாதாரராகவே இருக்கிறேன் என்று சொல்லுபவருமான ஸ்ரீமான் ஆச்சாரியார் இவ்வாண்டு பிராமணர்களை சட்ட சபைக்கு அனுப்புவதற்கு முயற்சி செய்து கொண்டு சுயராஜ்யக் கக்ஷியின் சார்பாய் பல விளம்பரங்கள் செய்துக் கொண்டு வருகிறார். அதாவது: –

1. காங்கிரஸ் கக்ஷியார் கள்ளை ஒழிக்க உறுதிமொழி கொடுத்து
விட்டார்கள். ஆதலால், அவர்களுக்கு வோட் கொடுங்கள் என்றும்,

2 கள்ளையும் சாராயத்தையும் ஒழிக்க காங்கிரஸ் கக்ஷியார்கள் சட்ட
சபைக்குள் கடும் போர் புரிவார்கள், அறிந்தீர்களா? ஆதலால்,
அவர்களுக்கு கொடுங்களென்றும்,

3. மகாஜனங்களே ! காங்கிரஸ் கட்சியார் பூரண மதுவிலக்குக்காக
பிடிவாதப் போர் நடத்துவார்கள். ஆதலால், அவர்களுக்கு வோட்
கொடுங்கள் என்றும்,

4. கள்ளை நிறுத்தக் காங்கிரஸின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு
அவர்களுக்கு வோட் கொடுங்களென்றும், இன்னும் பல இம்மாதிரி
வெளிப்படையாகவும் பொருள்படும்படியாகவும் எழுதிக்
கொண்டே வருகிறார். தான் போகுமிடங்களிலும் இம்மாதிரியே சுய
ராஜ்யக் கக்ஷிக்காரருக்கு வோட் செய்யும் படியும், பிராமணரல்
லாதார்களை ஜஸ்டிஸ் கக்ஷியின் பேரால் தந்திரமாய்த் தாக்கிக்
கொண்டு அவர்களுக்கு வோட் செய்யக்கூடாதென்கிற விதமாகவும்
பேசி வருகிறார்.

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி

ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியாருடைய யோக்கியதையே இப்படியி ருக்குமானால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியின் யோக்கியதையைப் பற்றி எடுத்துச் சொல்லவும் வேண்டுமா? ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார் கொஞ்ச நாளைக்கு முன்பு கள்ளை ஒழிப்பதாகச் சொல்லி சட்டசபைக்குப் போகலாம் என்று சுயராஜ்யக் கக்ஷியாருக்கு ஒரு யுக்தி சொல்லிக் கொடுத்த காலத்தில், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஸ்ரீமான் ஆச்சாரியார் மீது சந்தேகப்பட்டு,

1. சட்டசபையின் மூலம் கள்ளை ஒழிக்க முடியாதென்றும்,
2. சுயராஜ்யம் வந்தாலொழிய கள்ளை ஒழிக்க முடியாதென்றும்,
3. 25 வருடத்தில் கள்ளை ஒழிக்க ஒரு திட்டம்போடவேண்டுமென்றும்,
4. சட்டசபையின் மூலம் ஒரு காரியமும் செய்ய முடியாதென்று அர
சியல் கமிட்டி முன் சாட்சியங் கொடுத்தும்,
5. ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியாரே கலால் இலாகா மந்திரியாய்
வந்தாலும்கூட கள்ளை நிறுத்திவிட முடியாதென்றும்,
6. ஆதலால், ஸ்ரீமான் ஆச்சாரியார் சொல்லுவது நடவாத காரிய
மென்றும், இதில் என்னமோ தந்திரமிருக்கிறது,

என்று இம்மாதிரி சொல்லிக் கொண்டிருந்த ஸ்ரீமான் சத்தியமூர்த்தி, தன்னை மந்திரியாய் நியமித்தால் உடனே கள்ளை நிறுத்திவிடுகின்றேனெனச் சொல்லு வதும், கள்ளை நிறுத்தப் பாடுபடுவதாய் ஸ்ரீமான் ஆச்சாரியாருக்கு உறுதி கூறியிருப்பதாகச் சொல்லுவதும், ஸ்ரீமான் ஆச்சாரியாரும், இம்மாதிரி யான ஆள்களுக்கு வோட் வாங்கிக் கொடுக்கப் பொது ஜனங்களை வஞ்சிப் பதும் எவ்வளவு யோக்கியமான காரியமென்பதை வாசகர்கள்தான் கவனிக்க வேண்டும். இதைக் கவனிக்கின்ற போது சந்தைக் கடைகளில் மாட்டுத் தரகர்கள் செய்யும் பித்தலாட்டங்கள் நமது ஞாபகத்திற்கு வருகின்றது.

மாட்டுக்கடைப் பித்தலாட்டம்

சந்தைக்கடைகளில் சிலர் தங்களுடைய உபயோகமற்ற மாடுகளை வயிறு நிறையத் தண்ணீரை நிரப்பிக் கொண்டுவந்து விற்பதற்காக கொண்டு வருவார்கள். அவ்விடங்களில் விற்றுக் கொடுப்பதற்காகத் தரகர்கள் இருப் பார்கள். அவர்களில் இருவர், அம்மாட்டுக்காரர்களிடம் இரகசியமாக நல்ல விலைக்கு விற்றுக் கொடுத்தால் தங்களுக்கு இவ்வளவு கொடுக்க வேண்டு மென்றும், அப்படிக்கில்லாவிட்டால், மாட்டினுடைய யோக்கியதையை வெளி யிற் சொல்லிவிடுவோமென்றும் சொல்லி அவனிடம் தக்கபடி தரகு பேசிக் கொண்டு, தங்கள் மாட்டை விற்றுக் கொடுப்பதற்குப் பிரயத்தனப் படுவார்கள். அப்பொழுது தரகர்கள் இருவருமே, ஒருவன் மாட்டுக்காரனாகவும், மற்றொ ருவன் மாடு வாங்குகிறவனைப்போல் வேஷம் போட்டுக் கொண்டு உண்மை யாய் மாடு வாங்குகிறவர்கள் யாராவது அவ்வழியாகப் போகும்போது, மாட்டின் ஆசனத்தின் வழியாய் மாட்டுத்தினசு என்கிற பூச்சியை உள்ளே செலுத்தி அம்மாட்டைக் குதிக்கச்செய்து கொண்டு, ஒருவருக்கொருவர் விலைபேசுவது போல் பேசிக் கொண்டிருப்பார்கள். உண்மையாய் மாடு வாங்குகிறவன் இதை வாஸ்தவமென்று நினைத்து, மாடு தினசு குடைவதைப் பொறுக்கமாட்டாமல் அங்குமிங்கும் தாவிக் குதிப்பதைக் கண்டு, இது மிகவும் சுறுசுறுப்பான மாடு என்று நினைத்துக்கொண்டு சமீபத்தில் வந்தால், தரகர்கள் ஒருவருக்கொருவர் அது 20 ரூபாய் பெறாத மாடாயிருந்தபோதிலும் , இவன் 60 ரூபாய்க்கு கேட்பது போல் கேட்பதும், அவன் 100 ரூபாய்க்கு குறைந்து கொடுக்கமாட்டேனென்று சொல்லுவதும், மற்றவன் அது 6 மாசத்திற்கு முன்னேயல்லவா 100 ரூபாய் விலை இருந்தது; இப்பொழுது விலை இறங்கிவிட்டது; இந்த 60 ரூபாய்தான் பெறும்; அதற்கு மேல் முடியாது எனப் பேசிக் கொண்டிருப்பதும், உண்மையாய் வாங்குகிறவன், மாட்டைத் தொட்டுப்பார்க்க வந்தால் 60 ரூபாய்க்குக் கேட்கிறது போல் நடித்த தரகன், அது விற்கிற மாடல்ல; 60 ரூபாய்க்கு நான் முன்னமே வாங்கியாகிவிட்டது போமய்யா போம் என்று சொல்லுவதும், மாட்டுக்காரன் போல் நடித்தவன் இல்லய்யா அது 100 ரூபாய் மாடு நான் 60 ரூபாய்க்கு கொடுக்கமாட்டேன்; அவர் கிடக்கிறார்; நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் என்று சொல்லுவதும், மாடு வாங்க வந்தவன் இவர்கள் நடிப்பதைப் பார்த்து உண்மை தானென நம்பி ஏமாந்து, மாடு தினசு குடைச்சல் பொறுக்க மாட்டாமல் குதிப்பதைப் பார்த்து, சுறுசுறுப்பான மாடென்றும் இவர்கள் விலை கேட்பதைப் பார்த்து உண்மை யாயிருக்குமென்று நம்பியும், பின்னும் விற்பதாய் நடிக்கும் தரகன், வாங்கு கின்றவனைப் பார்த்து, இந்த மாடு சரியாய் வேலை செய்யாவிட்டால் கொண்டு வந்து விட்டுவிடுங்கள்; தீனிச் செலவு, வட்டியெல்லாம் சேர்த்துக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லும் வஞ்சக வாக்குறுதிகளையும் நம்பி வாங்கி விடுவான். அவன் வாங்கிவிட்டதும், பணத்தை மூவருமாகச் சேர்ந்து பங்கு போட்டுக் கொண்டு சப்பை மாட்டை அவன் தலையில் கட்டி விட்டு ஓடிப் போவார்கள்.

பிறகு மாடு வாங்கினவன் வீடு கொண்டு போய்ச் சேர்ப்பதே பெரிய கஷ்டமாய்ப் போய் விடும் . தினசு செத்துக் குடைச்சல் நின்று போனதற்கப் புறம் மாடு மூத்திரம் பெய்யவும், சாணி போடவும் கூட எழுந்து நிற்பதற்குச் சக்தியில்லாமல் படுக்கையிலேயே இவைகள் கழிக்க வேண்டியதாக இருக்கும்.

அதுபோல, நமது சப்பை மாட்டுக்காரனாகிய சர்க்காருக்கு விற்றுக் கொடுப்பவர்களாகிய ஸ்ரீமான்கள் இராஜகோபாலாச்சாரியார், சீனிவாசய்யங் கார், சத்தியமூர்த்தி போன்ற தரகர்கள், மாடு வாங்கும் குடியானவர்களாகிய பிராமணரல்லாத பாமர வோட்டர் ஜனங்கள் தலையில் சப்பை மாட்டைக் கட்டுவது போல் அவர்கள் வோட்டை வாங்கி தாங்கள் சட்ட சபைக்குப் போய் விலையைப் பங்கு போட்டுக் கொள்ளுவது போல், தாங்களும் தங்கள் பிள்ளை குட்டிகளும் இனத்தார்களும் உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டு மாடு வாங்கினவன் அதிக விலைபோட்டு வாங்கி சப்பை மாட்டைக் கட்டி அழுவது போல், பிராமணரல்லாதார்கள் தாழ்ந்த நிலையில் தீண்டாதவர் களைப்போல் அவஸ்தைப்படுவது இம்மாதிரி சம்பவங்களுக்குப் பொருத்த மானதென்று எடுத்துக்காட்டத் தேவையில்லை.

குடி அரசு – கட்டுரை – 14.02.1926

You may also like...

Leave a Reply