“சுதேசமித்திர”னின் தேசபக்தி
பெருந்தேசபக்தர்களெனப் படாடோபம் செய்து வருகின்றவர்க ளான பிராமணர்கள் இந்தியாவின் சுயராஜ்யத்திற்காகப் பாடுபடுபவர்களல்ல வென்றும், அவர்கள் செய்துவரும் ஆரவாரமனைத்தும் தங்கள் இனத்தவர் களான பிராமணர்கள் மல்கிய பிராமண ராஜ்யம் நிலைநாட்டவேயல்லாமல் வேறில்லை யென்று நாம் பன்முறை கூறிவந்திருக்கிறோம். நாளடைவில் இவ்வுண்மை புலனாகிவருகிறதென்பதை அடியிற்காணும் உரைகளால் அறிந்து கொள்ளலாம்.
திரு. விபினசந்திரபாலகர் சமீபத்தில் நடந்த கல்கத்தா இந்து முஸ்லீம் சச்சரவைப் பற்றி எழுதுங் காலையில், இத்தகைய அமளி நாட்டில் பரவாதிருக்க வேண்டுமானால் விரைவில் சுய ஆட்சி கொடுக்க வேண்டு மென வரைந்து விட்டு, தற்சமயம் “சட்டம் ஒழுங்கு சம்மந்தப்பட்ட பொறுப்பும் மந்திரிகள் வசம் ஒப்புவிக்கப்பட்டால் அவர்கள் ஜாதி வேற்று மை பாராமல் சரியாக வேலை நடத்துவார்கள்” என்றும் எழுதியுள்ளார். ஒருவகையில் திரு. பாலரின் கருத்து போற்றத்தக்க தொன்றாகும். ஏனெனில் மந்திரிகள் ஜனங்களின் பிரதிநிதிகளாதலாலும் அவர்கள் பாமர மக்களிடம் நெருங்கிப் பழகியவர்களாதலாலும் நாட்டில் அமைதி நிலவ எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை அறிந்து அதற்கேற்றாப்போல் ‘சட்டம் போலீஸ்’ வகைகளை சீர்பெற நிர்வகிப்பார்கள்.
திரு. பாலரின் கருத்தைப்பற்றி “சுதேசமித்திரன்” தன் 19 -4 -26 உ பத்திரிகையின் உபதலையங்கமொன்றில் பொருத்தமற்ற சில போலிக் காரணங்களை எழுதிவிட்டு “ மந்திரிகள் வசம் போலீஸ் டிபார்ட்டு மெண்டி ருந்தால் நலமென்று சொல்வதன் பொருள் நன்கு விளங்கவில்லை” என்று வரைந்து அதைக் கண்டித்துள்ளான். இது “ சுதேசமித்திர” னின் இயற்கைக் குணமாகும்.
இப்போது போலீஸ் நிர்வாகமும் சட்டமும் சட்ட மெம்பர் என அழைக்கப்பெறும் கெவர்னரால் நியமிக்கப்பட்ட ஒரு நிர்வாக மெம்பரி டமிருக்கிறது. அதிலும் சென்னையைப் பொறுத்த அளவில் “சுதேச மித்தர”னின் இனத்தைச் சேர்ந்த பிராமணரொருவரிடமிருப்பதால் அதைப் பிடிங்கி மந்திரிகள் வசம் ஒப்புவிக்க “சுதேசமித்திர”னுக்கு எவ்வாறு மனந் துணியும் ? மந்திரிகள் பிராமணரல்லாதவரன்றோ?
சமீபத்தில் நடந்த சட்டசபைக் கூட்டமொன்றில் மந்திரிக் கட்சி யைச் சேர்ந்த ஒருவர், போலீஸ் நிர்வாகமும் சட்டமும் ஒரு குறிப்பிட்ட வகுப்பார் (பிராமணர்) கையிலிருப்பதால் அதனால் எவ்வித நியாயமும் நன்மையும் பெருதற்கில்லாமல் போய்விடுகிறதென்று பல முகாந்தரங் களுடன் எடுத்துக் கூறியதை பொது ஜனங்கள் ஞாபகப்படுத்தி, ஜனப் பிரதிநிதித்துவம், கொண்ட சுயாட்சிக்குப் போராடுவதாக வாய்ப் பறை யறைந்து வரும் “சுதேசமித்திரன்” எழுப்பியுள்ள இவ்வாதத்தையும் ஒப் பிட்டுப் பார்த்து அதன் கபட மனத்தை அறிந்துகொள்ள வேண்டுகிறோம். கெவர்னரால் நியமிக்கப்படுபவரிடமி ருந்தாலும் பரவாயில்லை, ஜனப்பிரதி நிதிகளான மந்திரிகளிடம் (பிராமண ரல்லாத மந்திரிகளிடம் ) சட்டமும் போலீஸ் நிர்வாகமும் போகலாதென்பது “மகன் இறந்தாலும் பாவா யில்லை, மருமகள் தாலி அறுபட்டால் போதும் என்பது போல் “மித்திரன்” வாதம் செய்கிறான்.
வர வர பிராமணர்களின் நோக்கம் வெளியாகி வருவதை நாட்டார் அறிய வேண்டுகிறோம். பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பு மிகுந்த பிரதிநிதிகளிடம் ஒப்புவித்தலைக் காட்டிலும் அதிகார வர்க்கத்தின் அடிப் பீடமான கெவர்னரால் நியமிக்கப்படும் ஒருவரிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தலே மேல் என்று கூறும் “பிராமணமித்திரன்”, நாளடைவில், “இந்தியாவுக்கு சுய ஆட்சி கொடுப்பதைக்காட்டிலும் இப்பொழுது இருக்கும் ஆட்சியே மேல்” என்று ஏன் கூற மாட்டான். ஏனெனில் சர்க்கார் வசம் அதிகாரம் இருந்தால் எப்படியாவது சர்க்காரை ஏமாற்றி உத்தியோகம் பெற்றுக் கொள்ளலாம். ஜனங்களிடம் இருந்தால் அதிகக் கஷ்டப்பட்டு பணச்செலவு செய்து ஜனங்களை ஏமாற்ற வேண்டி வருகிறது. ஆதலால் இதனின்று, பிராமணர்கள் சுயராஜ்யத்திற்காகப் பாடுபடும் யோக்கிதையை பொது ஜனங்கள் அறிந்து கொள்ளலாம்.
குடி அரசு – கட்டுரை – 25. 04.1926