பல்லடம் ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர் மணி உரை இளவரசன் மரணம்: ‘ஜாதிய’த்தின் கொலை தடையை மீறி கழகத்தினர் கைது
தருமபுரி மாவட்டத்தில் திவ்யா-இளவரசன் என்ற வெவ்வேறு ஜாதியை சார்ந்தவர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டதால், நத்தம், அண்ணாநகர், நாய்க்கன் கொட்டாய் ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்டோர் குடி யிருப்புகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. அதன் பிறகும் பிரியாமல் வாழ்ந்து வந்த ஜாதி மறுப்பு இணையர் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர்; ஜாதி வெறியர்களின் மிரட்டல்களால் திவ்யா தனது தாயாருடன் சென்றார். இறுதியில் 4-7-2013 அன்று இளவரசனின் உடல் இரயில் தண்டவாளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இளவரசன் சாவுக்குக் காரணமான ஜாதி வெறியர்களைக் கண்டித்து, 07-07-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல்
3-00 மணியளவில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் எதிரில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கழக செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையிலும், கோவை மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விசயன் முன்னிலை யிலும் நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றினார்.
“ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காரணத் திற்காக பல்வேறு சிக்கல்களை சந்தித்த இளவரசனை நாம் பறி கொடுத்திருக்கின்றோம்; இப்போது அவரைத் துரத்தியடித்து அவரின் கொலைக்கு காரணமான ஜாதி வெறியர்கள் சொல்லு கின்றார்கள், இது திவ்யாவிற்கும் இளவரசனுக்கும் மட்டுமே சம்பந்தப்பட்ட விசயம், யாரும் தலையிட வேண்டியதில்லை என்று. ஆனால் இந்த கொடியவர்கள்தான் இந்த ஜாதி மறுப்புத் திருமணத்தை பிரித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்களைப் பயமுறுத்தி பல்வேறு சிக்கல்களை உண்டாக்கியதன் விளைவாகத்தான் இளவரசன் இறந்திருக்கிறார். அது கொலையானாலும் தற்கொலையானா லும் நம்முடைய பார்வையில் அது ஜாதியம் செய்த கொலை தான். இப்படிப்பட்ட ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தபோதும் அதை உச்ச, உயர்நீதி மன்றங்கள் வலியுறுத்தியிருந்தும், பாதுகாப்பு கொடுக்கப் படவில்லை. ஏற்கனவே தற்கொலை செய்துகொண்ட நாகராசன் வழக்கில் எந்த காரணமும் இல்லாமல் இளவரசன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். எனவே தான் அவர் காவல் துறை பயிற்சி முடித்திருந்தும் காவல் துறை பணிக்கு செல்ல முடியவில்லை. இளவரசன் வழக்கில் யார் யாரை வழக்கில் பதியப் போகிறார்கள் என்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதில் காவல்துறையும் அரசும் நியாய மாக நடந்துக்கொள்ளும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
இந்த வேளையில் நாம் மீண்டும் மீண்டும் வைக்கும் கோரிக்கை இந்த வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் இவருடைய சாவுக்கு காரணமான ஜாதி வெறியர்களைக் கைது செய்யவேண்டும். இந்த வழக்கில் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியவேண்டும். எஞ்சியிருக்கிற திவ்யாவையாவது சாகாமல் தடுத்திடுங்கள். இப்படிப்பட்ட ஜாதி அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை சமூகம் புரிந்து கொள்ளவேண்டும்; சுயநலத்திற்காக சமூகத் தின் அமைதியை குலைக்கும் அவர்களை நாம் அரசியல் வெளியில் இருந்தே புறந்தள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று கழகத் தலைவர் தனது கண்டன உரையில் கேட்டுக்கொண்டார்.
கழகப் பொருளாளர் ஈரோடு ப.இரத்தினசாமி, உட்பட 68 தோழர்கள் கைது செய்யப்பட்டு பல்லடம் மணி மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலை 6-30 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
பெரியார் முழக்கம் 11072013 இதழ்