வினாக்கள்… விடைகள்…
வினா: நரேந்திர மோடிக்கு அமெரிக்கா ‘விசா’ வழங்க வேண்டும். – பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்
விடை: இந்துக்கள் கடல் தாண்டுவது பாவம் என்று சாஸ்திரம் கூறுவதை, மீறலாமா, ராஜ்நாத்?
வினா: வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைத் துறையில் அன்னிய முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்து வது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகிவிடும். – உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு
விடை: அலைபேசி போன்ற தொலை தொடர்புத் துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதித்துள் ளீர்களே! அது பாதுகாப்புக்கு ஆபத்து இல்லையா? பார்ப்பன பத்திரிகைத் துறையில் அன்னிய முதலீடு வந்தால் மட்டும்தான் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து வந்து விடுமா?
வினா: குடியரசுத் தலைவர் பதவியில் பிரணாப் முகர்ஜி – ஓராண்டு சாதனை. – தினமலர் செய்தி
விடை: உண்மைதான்! கருணை மனுக் களை தள்ளுபடி செய்ததில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்!
வினா: செவ்வாய் கிரகத்தை ஆராய செயற்கைக் கோளை அனுப்ப இருக்கிறோம். பெருமைக்காக அல்ல; வர்த்தக நோக்கத்திற்காகவே இந்த ஆய்வு நடக்கிறது. எதிர்காலத்தில் மனிதர்கள் அங்கே குடியேறலாம். – இஸ்ரோ தலைவர் இராதாகிருட்டிணன்
விடை: அப்படியா? முதலில் சோதிடர் களை அனுப்பி, ‘செவ்வாய் தோஷம்’ பற்றி ஆராயச் சொல்லுங்கள்! அப் போதுதான் ‘பூமி தோஷக்காரர்கள்’ நம்பிக்கை யோடு வருவார்கள்!
வினா: கடவுள்கள் காட்சிப் பொருள்கள் அல்ல. தரிசனத்துக்கு கட்டணம் வாங்குவதை ரத்து செய்ய வேண்டும். – இந்து முன்னணி ராமகோபாலன் போராட்டம்
விடை: அர்ச்சனை என்பதும் வியாபாரம் அல்ல. எனவே அர்ச்சகர்கள் ‘தட்சணை’ வாங்குவதையும் நிறுத்த வேண்டும் என்று போராடுவீர்களா, கோபால்ஜி?
வினா: உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக் கும் உணவு கிடைப்பது உறுதி செய்யப் படும். சராசரியாக 81 கோடி பேர் இத் திட்டத்தால் பயனடைவார்கள். – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பக்தசரண் தாஸ்
விடை: ஆக, நாட்டில் உணவுப் பாதுகாப்பு கிடைக்காதவர்களாக 81 கோடிப் பேர் இருக்கிறார்கள் என்பதை புள்ளி விவரங்களுடன் விளக்கி விட்டீர்கள்; நல்ல சாதனைதான்!
வினா: ரூபாய் மதிப்பு சரிவில் இருந்து மீள் வதற்கு பொது மக்கள் தங்கம் வாங்கு வதை குறைத்துக் கொள்ள வேண்டும். – நிதியமைச்சர் ப. சிதம்பரம்
விடை: ஏன், கடவுள்களிடம் குவிந்து கிடக்கும் தங்கத்தை எடுக்கக் கூடாதா? எடுத்தால் பக்திக்கு சரிவு வந்துவிடுமா?
பெரியார் முழக்கம் 25072013 இதழ்