கலை நிகழ்வுகள்-மலர் வெளியீடு-சுவையான திராவிடர் உணவுகளுடன் களை கட்டியது திராவிடர் வாழ்வியல் விழா
இந்து வேத வாழ்வியலுக்கு எதிரான பெரியாரியல் வாழ்வியலை நடைமுறைப்படுத்தும் விழா, ‘திராவிடர் வாழ்வியல் விழா’ என திருப்பூரில் சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம் சார்பில், திராவிடர் வாழ்வியல் விழா- திராவிடர் உணவு விழா-கருந்திணை 2013 நிகழ்ச்சியில் திராவிடர் பண்பாட்டு மலரினை வெளியிட்டு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார்.
சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம் சார்பில் அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் காவேரி அம்மன் திருமண அரங்கத்தில் கருந்திணை 2013 என்ற பெயரில், திராவிடர் வாழ்வியல் விழாவும் திராவிடர் உணவு விழாவும் எழுச்சியோடு நடைபெற்றது. விழாவின் துவக்கத்தில் மேட்டூர் கருப்பரசன் குழுவினரின் பறை முழக்கம் அரங்கத்தை அதிர வைத்தது. தொடர்ந்து சுயமரியாதைக் கலைப் பண்பாட்டு கழகத்தின் கோவை மாவட்ட அமைப்பாளர் அ.ப. சிவா, திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன், கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகச் செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழக சேலம் மண்டல அமைப்பாளர் கொளத்தூர் குமார் ஆகியோர் திராவிடர் வாழ்வியல் உறுதிமொழியை முன்மொழிய கழகத் தோழர்கள் உரத்தக் குரலில் வழிமொழிந்து உறுதியேற்றனர்.
திராவிடர் வாழ்வியல் குறித்து, திராவிடர் பண்பாட்டு மலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடை பெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் பண்பாட்டு மலரை வெளியிட்டார். ஜாதி மறுப்பு வாழ்வியலை ஏற்றுக் கொண்ட காதலர்களின் பிரதிநிதியாக கோவை இசைமதி மலரைப் பெற்றுக் கொண்டார். நூலின் முதல்படியினை தூத்துக்குடி பால் பிரபாகரன், ஈரோடு இரத்தினசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மலரினை வெளியிட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது உரையில், ‘சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெறும் திராவிடர் வாழ்வியல் விழா, திராவிடர் உணவு விழா, திராவிட பண்பாட்டு மலர் வெளியீட்டு விழா ஆகியவை சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள், செய்யப் போகிறவர்கள், செய்து வைக்க உள்ளவர்களுக்கான பண்பாட்டை செயலாக்கும் ஒரு புதிய முயற்சி, இந்து வேத வாழ்வியலுக்கு எதிரான பெரியாரியல் வாழ்வியலை நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சியாக திராவிடர் வாழ்வியல் விழா அமைந்திருக்கிறது” என குறிப்பிட்டு உரையாற்றினார்.
உடுமலைப்பட்டை மலரினியன், தனது மரண ஆவணத்தை வெளியிட்டார். அவர் தனது உரையில், “வாழும் காலத்தில் கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்த பெரியாரியல்வாதிகள்கூட சாகும்போது உறவுகளாலும், குடும்பத்தாலும் சாதி, மதக் குறிகளுடன் சில நேரங்களில் அடக்கம் செய்யப்படுகிறார்கள். இந்த இழிநிலை மாற எனது முயற்சியாக மரண ஆவணம் என்ற ஆவணத்தை எழுதி, எனது மரண சாசனமாக சார்பதிவாளர் அலு வலகம் சென்று பதிவு செய்துவிட்டேன்” என பலத்த கரவொலிக் கிடையே அறிவித்தார்.
‘தலித் முரசு’ ஏட்டின் ஆசிரியர் புனிதப்பாண்டி யன், ம.தி.மு.க. பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பொதுச் செய லாளர் க. இராமகிருட் டிணன், ம.தி.மு.க. மாவட்டப் பொருளாளர் மு.ஈசுவரன், திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித் தமிழர் பேரவை, தோழர் ஓவியாவின் ‘புதிய குரல்’, விடுதலைச் சிறுத்தைகள், புரட்சிகர இளைஞர் முன்னணி, திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற பல்வேறு அமைப்புகளின் தோழர்களும் விழாவில் பங்கேற்றனர் திருப்பூர், பல்லடம், கோவை, மேட்டூர், கொளத்தூர், சேலம், ஈரோடு, கோபி, கரூர், உடுமலை, திண்டுக்கல், ஏற்காடு, கணியூர், பழனி ஆகிய பகுதிகளிலிருந்து தனி வேன்களிலும் வாகனங்களிலும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பெருந் திரளாகக் கலந்து கொண்டனர்.
மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் இன்னிசை யும், திராவிடர் கலைக் குழுவின் வீதி நாடகங்களும், கழகக் குடும்பங்களின் குழந்தைகள் பங்கு பெற்ற கலை வெளிப்பாடுகளும் மாற்றி மாற்றி அரங்கேற்றப்பட்டன. பழனி திராவிடன் கராத்தே மற்றும் ஜவகர் தாய்ச்சி ஆகிய தற்காப்பு கலைகளை நிகழ்த்திக் காட்டினர்.
விழாவில், வந்திருந்த அனைவருக்கும் திராவிடர் உணவான மாட்டுக்கறி பிரியாணி, மாடு வால் சூப்பு, மாட்டுக்கறி மிளகு வறுவல், தேன் நெல்லி சோறு, கொள்ளு ரசம் உட்பட பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
குறும்படப் போட்டி
பிற்பகல் மூன்று மணியளவில் சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கோபி அர்ஜுனன் தலைமையில் சாதி, மத, கடவுள், மூடநம்பிக்கைக்கு எதிராக பெரியாரியல் கருத்தினை மக்கள் மனதில் எளிய வகையில் பதிய வைக்கும் வகையில் வீதி நாடகம் தொடங்கியது. குமரேசன், பிரபு, சந்திரசேகரன், மணிகண்டன் ஆகியோரின் எளிமையான நடிப்பு, குழுமியிருந்த மக்களிடம் விழிப்புணர்வை தூண்டியது. சாதி, மத சடங்குகள், கடவுள் மறுப்பு, உணவு, உடை, இருப்பிடம், கலை இலக்கியங்களில் தீண்டாமை எதிர்ப்பு குறித்து சுயமரியாதை கலைப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் வெற்றிப் பெற்ற படைப்புகளுக்கு பரிசளிப்புப் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. போட்டியில் சைமன் ஜார்ஜ் இயக்கிய ‘செவ்வாழை’, மகராஜன் இயக்கிய ‘போதி விருட்சா’, துளசிதாசன் இயக்கிய ‘அஞ்சனவித்தை’, மணிமாறன் இயக்கிய ‘18 தீக்குச்சிகள்’, பொன்ராசு இயக்கிய ‘ஒரு ஊருல’ ஆகிய ஐந்து படைப்புகள் சிறந்த குறும்படங்களாக தேர்வு செய்யப்பட்டன.
தோழர் கவிக்குமார் இயக்கிய ‘உறவின் கதை’, பாலாஜி இயக்கிய ‘டூல்’ ஆகிய இரு குறும்படங்கள் சிறப்புப் பரிசு பெற்றன. வெற்றி பெற்ற படைப் பாளிகளைப் பாராட்டி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தலா இரண்டாயிரம் வீதம் பரிசளித்து சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். சிறப்புப் பரிசு பெற்ற இரண்டு குறும்படங்களுக்கு தலா ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர் வெற்றி பெற்ற படைப் பாளிகளின் குறும்படங்கள் பார்வையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இறுதியாக சுயமரியாதைச் சுடரொளி மேட்டூர் கருப்பரசன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
சு.க.ப.க.வின் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் பரமேஸ் வரி, மாவட்டச் செயலாளர் அனுப்பட்டி பிரகாசு, திருப்பூர் மாவட்டத் தலைவர் பாரதிவாசன் ஆகியோர் உழைப்பில், திராவிடர்களின் உணவு, உடை, குடியிருப்பு, திருமண முறை, மரணச் சடங்குமுறை போன்ற பிறப்பு முதல் இறப்பு வரையிலான பண்பாட்டுக் கண்காட்சி பார்வையாளர்களுக்கு பல செய்திகளைக் கூறியிருந்தது. தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பில் மாநில அமைப்பாளர் திருப்பூர் சிவகாமி தலைமையில் அதன் தோழர்கள் அமைத்த அறிவியல் கண்காட்சியும் பார்வையாளர்களைச் சிந்திக்கத் தூண்டியது.
இறுதியில் திராவிடர் உணவு விழாவின் இரவு உணவுகள் கேழ்வரகு களி, கம்பு தோசை, சம்பா கோதுமை உப்புமா, பிரண்டை சட்னி, வாழைப்பூ குருமா, தென்னம்பால் ஆகியவை பார்வையாளர்களுக்கு பரிமாறப்பட்டன. ஆண், பெண், குழந்தைகள் போன்ற எந்த பேதமுமின்றி அனைவரும் தென்னம்பாளையும், மாட்டுக்கறி வகைகளையும், சிறு தானிய உணவுகளையும் உண்டு மகிழ்ந்தனர். திராவிடர் உணவு விழாவிற்கான உணவு வகைகளை அறுஞ்சுவையுடன் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த ஏற்காடு பெருமாள் தலைமையிலான தோழர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெகுவாகப் பாராட்டி சிறப்புச் செய்தார்.
கருந்திணை 2013 நிகழ்வு திட்டமிடலில் தொடங்கி, இறுதி வரை பல தோழர்கள் முக்கியப் பங்காற்றினர். குறிப்பாக செயலவைத் தலைவர் துரைசாமி, பல்லடம் விஜயன், திருப்பூர் இராவணன், மேட்டூர் சக்திவேல், சேவூர் செந்தில் குமார், திருப்பூர் முகில்ராசு, அகிலன், சண்முகம், மணிகண்டன், மூர்த்தி, ஜீவா நகர் குமார், நகுலன் பிரசாத், பாலு, கொடுமுடி பாண்டியன், கடத்தூர் காந்தி, பல்லடம் மணிகண்டன், வடிவேல், சூர்யா, இராவத்தூர் இரமேஷ், சற்குணம், பார்த்திபன், இராயப்பேட்டை செல்வக்குமார், சென்னை தாமரைக்கண்ணன் ஆகிய தோழர்கள் விழாவைத் திட்டமிட்டு நடத்துவதற்கு பெரும் துணையாக இருந்தார்கள்.
காலையிலிருந்து இரவு வரை 12 மணி நேரமும் சிறிதும் சலிப்புத் தட்டாமல் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடைபெற்றன. நண்பகல் உணவு நேரத்திற்குப் பிறகும், இரவு விழா முடிவடையும் போதும் பார்வையாளர்களில் பெரும்பாலானவர்கள் கலை நிகழ்ச்சிகளில் ஒன்றி, எழுந்து நடனமாடத் தொடங்கினர். தாய், தந்தை – மகன், மகள் – நண்பர் – தோழர் – பொறுப்பாளர் போன்ற அனைத்து நிலைகளையும் கடந்து அனைவரும் ஒன்றாக நெடுநேரம் நடனமாடி விழாவை முடித்து வைத்தனர்.
நமது தோழர்களுக்கிடையேயும் தோழர்களின் குடும்பங்களுக்கிடையேயும், தோழமை அமைப்புகளின் தோழர்களுக் கிடையேயும் உறவை நெருக்கமாக்கும் நோக்கிலும், ஜாதி மறுப்புப் பண்பாட்டைச் செயலாக்கும் நோக்கிலும் இதுபோன்ற விழாக்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்தப்பட வேண்டும் என பங்கேற்றோர் தெரிவித்தனர்.
செய்தி : மன்னை இரா. காளிதாசு
பெரியார் முழக்கம் 30102013 இதழ்