சமூக நீதி போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி! சி.பி.அய். விசாரணை வளையத்தில் அய்.அய்.டி.
சென்னை அய்.அய்.டி. என்ற உயர்கல்வி நிறுவனம் இப்போதுதான் நீண்டகால போராட்டத்துக்குப் பிறகு சி.பி.அய். விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. முழுமையான அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பார்ப்பனர்கள் பல்லாயிரம் கோடி பணம் புரளக்கூடிய இந்த நிறுவனத்தில் தங்களுக்கான தனி அரசையே நடத்தி வந்தார்கள். 1997 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, (இணைப்புகளுக்கு முந்தைய) பெரியார் திராவிடர் கழகம் தொடர் போராட்டங்களை நடத்தி, அய்.அய்.டி. சமூக அநீதிகளை அம்பலப்படுத்தி வந்தது. பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், முற்றுகைப் போராட்டங்கள், விளக்கக் கூட்டங்கள், சுவரொட்டி இயக்கங்கள் நடத்தப்பட்டன. பலமுறை ஆனூர் ஜெகதீசன், விடுதலை இராசேந்திரன் தலைமையில் தோழர்கள் பல முறை கைது செய்யப்பட்டார்கள்.
சுமார் 160 பேராசிரியர்களிடையே தாழ்த்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. அதிசயமாக இரண்டு பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். அதில் ஒருவர், கணிதத் துறையில் இணைப் பேராசிரியரான வசந்தா ஆவார். அய்.அய்.டி. பார்ப்பனர்கள் அத்தனை பேரையும்விட அறிவில் சிறந்த விஞ்ஞானி. சர்வதேச ஆய்வேடுகளில் மற்ற எல்லோரையும்விட அதிக அளவில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர், கணித நூல்களையும் எழுதியவர். பார்ப்பன ஆதிக்கக் கோட்டையில அந்தப் பெண் ஒருவர்தான் ‘அரிமா’வாக துணிச்சலோடு போராட முன் வந்தார். தான் ஒரு பார்ப்பன எதிர்ப்பாளர் என்பதை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தினார். நீதி கேட்டு நீதிமன்றங்களின் படிக்கட்டுகளை ஏறினார். பெரியார் திராவிடர் கழகம் அவரது பார்ப்பன எதிர்ப்பு சமூக நீதி போராட்டத்துக்குப் பின்னால் உறுதியுடன் நின்றது.
பெரியார் திராவிடர் கழகப் போராட்டத்துக்குப் பிறகுதான் முதன்முதலாக ஒரு தலித் பேராசிரியர் அண்ணா பல்கலையிலிருந்து பதிவாளராக நியமனமானார். ஆந்திர மாநிலத்திலேயே பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பெற்று, அய்.அய்.டி.யில் படிக்க வந்த சுஜி என்ற பழங்குடிப் பெண், ‘தயாரிப்புத் தேர்விலேயே’ (ஞசநயீயசயவடிசல ஊடிரசளந) அய்.அய்.டி. பார்ப்பனர்களால் அநியாயமாக திட்டமிட்டு தோல்வியடையச் செய்யப்பட்டார். பெரியார் திராவிடர் கழகம் அதில் தலையிட்டு நடத்திய போராட்டமே அந்தப் பெண்ணை மீண்டும் அய்.அய்.டி.யில் சேர்க்க வைத்தது. அய்.அய்.டி. வரலாற்றிலேயே அவர்களால் துரத்தப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டது அதுவே முதல்முறை. ‘அய்.அய்.டி.’க்குள் விடுதலைப் புலிகள் நுழைந்து விட்டார்கள் என்று, கழகத்தை எதிர்த்து பார்ப்பன சுப்ரமணியசாமி வழியாக அய்.அய்.டி. பார்ப்பனர்கள் அறிக்கை வெளியிட வைத்தனர்.
இப்படி எவ்வளவோ செய்திகளை சுட்டிக்காட்ட முடியும். ஆனாலும் வசந்தா அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வை வழங்குவதில் மட்டும் அந்த நிர்வாகம் பணிய மறுத்தது. இப்போது அந்தக் கோரிக்கை வெற்றி பெற்றிருக்கிற செய்தியறிந்து மகிழ்கிறோம். 1997-லிருந்து 2001 வரை 4 ஆண்டுகாலம் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்கள் வீண் போகவில்லை என்று மனநிறைவு அடைகிறோம்.
வசந்தா அவர்களை 27.7.1995 முதல் இணை பேராசிரியராகவும் 18.12.1996 முதல் பேராசிரியராகவும் பணியாற்றி வருவதாக கருதப்பட வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து கடந்த 26 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்ல, 1995 முதல் 2000 வரை அய்.அய்.டி. பணி நியமனங்கள் குறித்து சி.பி.அய். விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவ இந்த நிறுவனத்தின் இயக்குனராக ஆனந்த் என்ற பார்ப்பனரை முறையான விதிமுறைகள் ஏதும் பின்பற்றாமல் கொல்லைப்புற வழியில் நியமிக்கப்பட்டபோது, உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அந்த நியமனத்தை ரத்து செய்தார். ஆனால், மேல்முறையீட்டில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். இப்போதும் அவர்கள் மேல் முறையீடு செய்யக்கூடும். பார்ப்பன வெறி அவ்வளவு எளிதில் அடங்கிவிடாது. ஆனாலும் சி.பி.அய். விசாரணை வரம்புக்குள் இந்த பார்ப்பன நிறுவனம் வந்திருப்பதை வரவேற்று மகிழ்கிறோம். பார்ப்பனியம் எவ்வளவு அதிகார வெறியாட்டம் போட்டாலும், இறுதி வெற்றி சமூக நீதிக்குத்தான்.
தற்போது நடைபெற்று வரும் சுயமரியாதை சமத்துவப் பரப்புரைப் பயணத்தில் அய்.அய்.டி. பார்ப்பன ஆதிக்கத்தைத் தோழர்கள் கலை வடிவங்கள் வழியாக அம்பலப்படுத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அய்.அய்.டி., சி.பி.அய். விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ள செய்தி வெளி வந்திருப்பது வெற்றிச் செய்தியேயாகும்.
பெரியார் முழக்கம் 01082013 இதழ்