வினாக்கள்… விடைகள்…

ஏழுமலையான் கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் திருப்பதி தேவஸ் தானத்துக்கு சொந்தமான அனைத்துக் கோயில் களிலும் கண்காணிப்புக் கேமிரா நிறுவ முடிவு. – செய்தி

அருமையான யோசனை. அப்படியே அர்ச்சர் களுக்கும் ஒரு துப்பாக்கியை குடுத்துடுங்க. இடுப்புல செருகிக் கொண்டே அர்ச்சனை செய்வாங்கல்ல!

திருவில்லிபுத்தூர் கம்மாபட்டி கிராம மக்கள் மழை வருவதற்காக இரண்டு கழுதைகளுக்கு திருமணம் செய்து, மணமக்கள் ஊர்வலத்தை நடத்தி தடபுடலாக விருந்து வைத்தார்கள்.    – செய்தி

எப்படியோ ‘மங்கள’ காரியம் நல்லவிதமா முடிஞ்சுடுச்சு’ கழுதை குடும்பத்துக்குள்ள ஜாதிப் பிரச்சினை வந்து தகப்பன் கழுதை மண்டையப் போடாம பாத்துக்குங்க.

புனே சிறையில் காந்தி பயன்படுத்திய இராட்டை லண்டனில் அடுத்த மாதம் ஏலம்.  – செய்தி

இராட்டையை ஏலம் விட்டது சரி; ஆனா, காந்தி உடம்பில் பாய்ந்த கோட்சேயின் துப்பாக்கிக் குண்டு இருந்தா, அதையும் ஏலம் விட்டுடாதீங்க; ஆர்.எஸ் .எஸ் . சொத்தை அவர்களிடமே திருப்பித் தந்துருங்க. அதுதான் கவுரவம்.

சென்னை பீர்க்கன்கரணை ஊராட்சியில் சோலார் விளக்கு வசதியுடன் கூடிய ‘நம்ம டாய்லெட்’டை அமைச்சர் சின்னய்யா திறந்து வைத்தார். – செய்தி

பீர்க்கன்கரணை டாய்லெட்டுக்கு பிரிட்டிஷ் காரனா விமானம் ஏறி வரப்போறான்? ‘கழிவறை’ன்னு தமிழில் எழுதி வையுங்கய்யா…

மருத்துவர் ராமதாசு தேர்தலுக்கு சமூக ‘ஜனநாயக் கூட்டணி’யை அமைத்துள்ளார். ஆனால், கூட்டணியில் இடம் பெறும் அமைப்புகளை அறிவிக்கவில்லை.  – செய்தி

அப்படியெல்லாம் அறிவிப்பதற்கு இது என்ன சாதாரண ஜனநாயகமா? ‘சமூக ஜனநாயகம்’; புரிஞ்சுக்குங்க!

சபரிமலை அய்யப்பன் தரிசனத்துக்கு பக்தர்கள் ‘ஆன் லைனில்’ முன்பதிவு செய்யலாம்.   – கேரள காவல்துறை அறிவிப்பு

‘ஆண் லைன்’ தரிசனமே வந்துவிட்டது. ஆனா, ‘பெண் லைன்’ தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்க மாட்டீங்க…

கேரளாவில் அரசு வேலை பெற வேண்டுமானால் – மலையாள மொழித் திறமை அவசியம்.  – மாநில அமைச்சரவை முடிவு

கேரளாவில் மட்டும்தான் முடியுமா, என்ன? நாங்களும் எங்கள் மாநிலத்திலும் மலையாள மொழித் திறமை வேண்டும் என்று தீர்மானம் போடுவோங்க!

உ.பி.யில் சாமியார் கனவில் வந்த மன்னர் கூறியதுபோல் தங்கப் புதையல் கிடைக்கவில்லை; சாமியார் என்ன சொல்லப் போகிறார்? – செய்தி

வேறு என்ன சொல்வார்? அடுத்த முறை கனவில் மன்னர் வந்தால் என்னை ஏன் ஏமாற்றினாய் என்று கேட்பதாகக் கூறுவார்!

‘இறைவன் என் கண்முன் தோன்றி எனது பக்தன் கணபதியிடம் ரூ.50,000 வாங்கிக் கொள்ளுமாறு’ வீட்டுக்கு வந்த சாமியார் கூற்றை நம்பி, கும்மிடிபூண்டி பெரிய புலியூர் கிராமத்தைச் சார்ந்த பக்தர் கணபதி ரூ.50,000-த்தை எடுத்துக் கொடுத்தார். அதன் பிறகு வந்தது போலி சாமியார் என்று தெரிந்து பக்தர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். – ‘இந்து’ ஏட்டின் செய்தி

ஒரு தாழ்மையான யோசனை! இனிமேல், இறைவன் இப்படி தரகர்களை அனுப்பினால், பக்தர்கள் ரொக்கமாக கொடுக்காமல் காசோலை களாக செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள். காசோலைதான் இறைவனுக்கு நேராகப் போய்ச் சேருமாம்.

ரூ.10 கோடி செலவில் பெரியாருக்கு 95 அடி உயரத்தில் சிலை.  – தி.க. தலைவர் கி.வீரமணி அறிவிப்பு

‘முன்னொரு காலத்தில் ஜாதி, மதம், கடவுளை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. அதன் நினைவாக இந்த 95 அடி சிலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது’ என்று கீழே எழுதிப் போடாமல் இருந்தால் சரி!

பெரியார் முழக்கம் 30102013 இதழ்

You may also like...