தலையங்கம் அமர்த்தியாசென் கூறுகிறார்!

“இந்தியாவிலுள்ள மாநிலங்களை ஒப்பிட்டு நோக்கத்திற்காகத் தனித்தனி நாடுகளாக கருதிப் பார்ப்போமேயானால் கேரளாவும், தமிழ்நாடும், மற்றெல்லா மாநிலங்களைவிடவும் மேலாக முதல் நிலையில் இருக்கும் உத்தரபிரதேசமும், மத்திய பிரதேசமும் மிகவும் கடைசி நிலையில் இருக்கும்.”

நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகியோர் இணைந்து எழுதிய நூலில் (நிலையில்லா புகழ் – இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்) இவ்வாறு குறிப்பிட் டுள்ளனர். அதுமட்டுமல்ல, இந்த மாநிலங்களிலிருந்து கிடைக்கும் அனுபவங்களையே படிப் பினையாகக் கொண்டு வேறு மாநிலங்கள் தங்கள் முன்னேற்றத்துக்குத் திட்டமிட வேண்டும் என்றும் அந்த நூலில் குறிப்பிட் டுள்ளனர்.

இந்தியா என்ற நுகத்தடியில் சிக்கிக் கொண்டதன் காரணமாக பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கு உட்பட்டு தமிழகம் அதன் முன்னேற்றங்களை விரைவு படுத்த முடியாது தடைபட்டு நிற்கிறது.

பார்ப்பனியமும், இந்துமத வெறியும், ஜாதிக் கட்டமைப்பும் இறுகிப் போய்க் கிடக்கும் உ.பி., ம.பி. போன்ற மாநிலங்கள் அவைகள் தனி நாடுகளாக இருந்திருக்கு மானால், கடைசி இடங்களில் தேங்கிப் போய் கிடந்திருக்கும் என்றும், நூலாசிரி யர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பெரியார் வித்திட்ட சமுதாய மாற்றமும், சமூக நீதி தத்துவமும் தொடர்ந்து ஆட்சிகளால் வளர்த் தெடுக்கப்பட்டதுமே தமிழகத்தை முதல் வரிசையில் நிறுத்தியிருக்கிறது. கேரளா வில் பொதுவுடைமை இயக்கங்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தது, அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித் தளமாக அமைந்திருக்கிறது.

முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டிய தமிழ்நாட்டை ஜாதிய – பார்ப்பனிய பழமைவாதம் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஆபத்துகள் தலை தூக்கி நிற்கும் காலத்தில்தான் இதை எதிர்த்து பெரியார் இயக்கங்களும் பொதுவுடைமை இயக்கங்களும் களப் பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகி யிருக்கிறது.

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி வரும் சுயமரியாதை, சமதர்ம பரப்புரை இயக்கத்தின் தேவையையும் அவசி யத்தையும் இப்போது புரிந்து கொள்ள முடியும்.

திராவிட அரசியல் கட்சிகள், ஜாதி ஒழிப்பு பார்ப்பனிய எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு பகுத்தறிவு கருத்துகளில் சமரசம் செய்து கொண்டுவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை.  அவைகளையும் தாண்டி பார்ப்பனியத்தை வேர் பிடிக்க விட முடியாத மண்ணாக தமிழகம் பக்குவப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.

ஏதோ பெரியாரும், திராவிடர் இயக்கமும் தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டதாக பேசக் கிளம்பியிருக்கும் ‘திடீர்’ தலைவர்களும் குருதிக்குள் புகுந்துகொண்டு தமிழர் அடையாளத்தைத் தேடும் ‘ஆராய்ச்சி யாளர்களும்’ அமர்த்தியாசென் போன்ற ஆய்வாளர்களின் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெரியார் இயக்கங்களும், ஜாதி எதிர்ப்பு, பொதுவுடைமை இயக்கங்களும் கொள்கைத் தளங்களில் இணைந்து பயணிக்கும்போது, இந்தத் தடைகளை எதிர்கொண்டு முன்னேறிச் செல்ல முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்!

பெரியார் முழக்கம் 08082013 இதழ்

You may also like...