சிங்களருக்கும் சமநீதி கோரிய தலைவர்
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் 50 ஆவது பிறந்தநாளையொட்டி 2004 ஆம் ஆண்டு ‘ஈழ முரசு’ சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அதில் போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தினேஷ் என்ற போராளி எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
திருகோணமலை மாவட்டத்தில் எமது கட்டுப் பாட்டிலுள்ள மூதூர் பிரதேசத்தினுள் அமைந்த காட்டுப் பகுதியினுள் அயல் எல்லைக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிங்களப் பெண்மணி வழி தவறி வந்து விட்டார். அப்போது அங்கு வைத்து அச்சிங்களப் பெண்மணிக்குத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஒரு தமிழ் வாலிபன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விடுகின்றான். இதனை அச்சிங்களப் பெண்மணி எமது இயக்கத்தின் முகாமிற்கு வந்து முறைப்பாடு செய்தாள். உடனே எமது இயக்கப் போராளிகள் அனைவரும் தேடுதலில் ஈடுபட்டு அந்த வாலிபனை இறுதியாக ஆதாரங்களுடன் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். அத்துடன் அச்சிங்களப் பெண்மணி யும் அவனை அடையாளங் காட்டிவிட்டார். அவ்வாலிபன் எமது இயக்கத்தினுடைய தீவிர உதவியாளனும், அங்கு பெரும்பாலான காட்டுப் பிரதேசங்களுக்கான வழிகாட்டியுமாவான். அவ்வேளை அச்சிங்களப் பெண்மணியானவள் அங்குள்ள தமிழ்ப் பெண்கள் சிலரின் உதவியுடன் அங்கு அமைந்துள்ள சிறிய வைத்தியசாலை ஒன்றிக்கு வைத்திய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள்.
இச்செய்தியை மூதூர் பிரதேசப் பொறுப்பாளர் தேசியத் தலைவர் அவர்களுக்கு விரிவாக அறிவித்து என்ன செய்வதென்று கேட்டார். அத்துடன் அச்சிங்களப் பெண்மணியை வல்லுறவுக்கு உட் படுத்திய வாலிபன், அச்சிங்களப் பெண்மணி யானவள் முன்பு தமிழர்கள் வாழ்ந்த அதே கிராமத்தில் தமிழர்களைத் துரத்தியடித்து விட்டு குடியேற்றப்பட்டவள் என்றும் அதே சிங்களக் குடியேற்றத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் எமது தமிழ்ப் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தியிருக் கின்றார்கள் என்றும், அதனால்தான், தான் அந்தச் சிங்களப் பெண்மணியை வல்லுறவுக்கு உட்படுத்தி யதாக நியாயப்படுத்தியும் தலைவருக்கு அறிவிக்கப் பட்டிருந்தது. அத்துடன் அத்தமிழ் வாலிபன் தமிழீழ விடுதலைப் போரட்டத்திற்குச் செய்த பங்களிப்பு களையும், அவன் இல்லாதுவிட்டால் அங்குள்ள பெரியதொரு காட்டுப் பிரதேசத்திற்கு வழிகாட்டி இல்லை என்பதையும் அந்தப் பொறுப்பாளர் அறிவித்திருந்தார்.
அதற்குத் தேசியத் தலைவர் அவர்கள் உறுதியாக, ‘அனைவருக்கும் ஒரே நீதிதான்’ என்றும், அச்சிங்களப் பெண்மணியை அவரது சொந்தக் கிராமத்திற்கு அனுப்புவதற்கு முன்பு அப்பெண் அறியக்கூடியதாக அவ்விளைஞனுக்கு மரண தண்டனை வழங்கும் படியும் அதன் பின்பு அப்பெண்ணைப் பாதுகாப்பாக அவரது சொந்தக் கிராமத்திற்கு அனுப்பும்படியும் அறிவித்திருந்தார். மறுநாள் தண்டனை நிறைவேற்றப்பட்ட விடயமும், சிங்களப் பெண் பாதுகாப்பாக அவரது கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட விபரமும் பிரதேசப் பொறுப்பாளரால் தேசியத் தலைவர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைப் படித்த தேசியத் தலைவர் அவர்கள் அங்கிருந்த தளபதிகளுக்குக் காட்டிவிட்டு, அனைவருக்கும் ஒரே நீதிதான் என்று உறுதியாகக் கூறினார்.
சமூக விரோதிக்கும், விடுதலைப் போராளிக்குமான இடைவெளி மிக மிகக் குறைவு
சமூகத்தில் விடுதலைப் போராளியும் கொலை செய்கின்றான். கொள்ளையடிக்கின்றான். வேண்டிய வாகனங்கள் மற்றும் உடமைகளைப் பறித்துக் கொள்கின்றான். இதேபோன்ற சமூக விரோதியும் சமூகத்தில் கொலை செய்கின்றான், கொள்ளையடிக் கின்றான். வேண்டிய வாகனங்கள் மற்றும் உடமைகளைப் பறித்துக் கொள்கின்றான். அப்படியானால் விடுதலைப் போராளிகளுக்கும், சமூக விரோதிக்கும் என்ன வேறுபாடு இருக்கின்றது. இருவருமே ஒரே செயலைச் செய்தாலும் இருவரினதும் மனதில் செயற்படத் தூண்டும் எண்ணமொன்று மட்டுமே வேறுபடுகின்றது.
சமூக விரோதி தனது சுய தேவைக்காக அல்லது பொறாமையினால் அல்லது கோபத்தினால் அல்லது மனவேதனையினால் இவற்றை மேற்கொள்கின்றான். விடுதலைப் போராளி தனது தேசத்தின் விடுதலைக்காகச் செய்கின்றான். இவற்றைக் கடமை உணர்வோடு, விடுதலையுணர்வோடு அவன் மேற்கொள்கின்றான். இவற்றை அவன் விரும்பிச் செய்வதில்லை. எனினும் தேசத்தின் விடுதலைக்கு அவசியமானபோது அவற்றைச் செய்கின்றான்.
விடுதலைப் போராளியும் சில சந்தர்ப்பங்களில் சமூக விரோதியாகலாம். அதற்கு உதாரணமாக நான் உங்களுக்கு ஒரு கதையைச் சொல்லுகின்றேன். ‘நீங்கள் பாடசாலையில் படித்தீர்கள். அப்போது உங்களுடன் படித்த சக மாணவன் கல்வியிலும், விளையாட்டிலும் தொடர்ச்சியாகப் போட்டியிடு கின்றான். சில வேளைகளில் நீங்கள் வெல்லுவீர்கள். சில வேளைகளில் அவன் வெல்லுகின்றான். இவ்வாறு போட்டியிட்டுக் கொண்டிருந்த நீங்கள் தமிழீழ விடுதலைப் போரட்ட உணர்வினால் இயக்கத்தில் இணைந்து கொள்ளுகின்றீர்கள். ஆனால் அவனோ தொடர்ந்து கற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி மருத்துவக் கல்லூரிக்குச் செல்கின்றான். மருத்துவரா கின்றான். பணம் சம்பாதித்து சொந்தமாக ஒரு கார் வாங்கி வசதியாக இருப்பதைக் காண்கிறீர்கள்.
நீங்கள் ஒரு நாள் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது வீதியில் அவனது கார் உங்களுக்கு எதிரே வருகின்றது. உடனே உங்களுக்குப் பழைய ஞாபகங்கள் வருகின்றன. இன்றைய உங்களின் நிலையை அவனது நிலையுடன் ஒப்பீட்டுப் பார்த்து பொறாமை உணர்வு ஏற்படுகின்றது. இதன் விளைவால் நீங்களோ அல்லது வேறு விடுதலைப் போராளிகளூடாகவோ, அக்காரினை விடுதலைப் போராட்டத்திற்குத் தேவையெனக் கையகப் படுத்துகின்றீர்கள்.
இச்சம்பவத்தை வெளியிலிருந்து பார்க்கும் மக்களுக்கு ஏன் உங்களின் சக விடுதலைப் போராளிக்குக்கூட சிலவேளை நீங்கள் செய்யும் செயல் சரியாகப்படலாம். ஆனால் நீங்கள் செய்யும் செயல் சமூக விரோதச் செயல் என்பதை உங்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.’ விடுதலைப் போராளிகளாகிய நீங்கள் இவற்றை மனதில் நிறுத்தி விடுதலை உணர்வுடன் உங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு போதும் சமூக விரோதியாகி விடக் கூடாது என்று ஒருமுறை போராளிகள் மத்தியில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய இராணுவப் பிடிக்குள் இருந்தபோது….
மாலதி படையணி தளபதி, கேணல் விதுஷா எனும் யாழினி எழுதியுள்ள கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இது. இந்திய இராணுவத்தின் பிடிக்குள் தமிழ் ஈழம் இருந்த காலகட்டம். எந்த நேரத்திலும் பிரபாகரன் இந்திய இராணுவத்தின் பிடிக்குள் சிக்கி விடும் ஆபத்துகள் சூழ்ந்து நின்றது. பாதுகாப்பற்ற மணலாறு பகுதியில் பிரபாகரன் இருந்தபோது காட்டுக்கு வெளியே இருந்த கேணல் கிட்டு, பிரபாகரன் பாதுகாப்புக் கருதி ஆயுதங்களை தற்காலிகமாக சரணடையச் செய்து விடலாம் என்ற யோசனையை முன்வைத்து கடிதம் ஒன்றை அனுப்பினார். அதை பிரபாகரன் எதிர் கொண்ட வரலாற்றை விளக்குகிறது இக்கட்டுரை.
தலைவர் அவர்கள் அடிக்கடி சொல்கின்ற இன்னுமொரு விடயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ‘இந்தப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளைத்தான் செய்கின்றனர். நானும் அப்படியே. இதுவரை இனத்துக்கான எனது பணி முடிவடையவில்லை. எனது மக்களுக்காகத் தாயகத்தைப் பெற்றுக் கொடுத்த பின்னர்தான் எனது பணியை முழுமையாகச் செய்தேன் என நிறைவடைய முடியும்’ என்றார். இவ்வாறு தனது பணியிலேயே நிறைவடையாத இயல்பு அவருடையது.
இதுவரை காலமும் போராட்டத்தை முழு வீச்சுடன் வழி நடத்துகின்ற தலைவரது நெஞ்சுரம் அளவிட முடியாதது. அந்த உறுதிதான் எமது போராட்டத்தை இன்று உலகம் வியக்கும் வண்ணம் மாற்றியுள்ளது. அக்காலப் பகுதியில் மணலாற்றுக் காட்டில் தலைவரோடு இருந்தபோது நடைபெற்ற ஒரு சம்பவத்தை இங்கு நாம் குறிப்பிடுவது பொருத்தமானது. உணவு, நீர் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலேயே பெரும் நெருக்கடிகளை சந்தித்த நேரம் அது. காட்டினுள் இருந்த எமக்கும் மக்களுக்குமான நேரடித் தொடர்புகள் இந்திய இராணுவத்தால் தடைப்பட் டிருந்த காலம். காடு முழுவதும் எங்கு பார்த்தாலும் இராணுவத்தின் ரோந்து அணிகள். தலைவருக்குக் கூட திட்டங்களை மேற்கொள்வதற்குப் பாது காப்பான இடம் என்று எதுவுமே இல்லாத நேரம். இந்த நிலையைப் புரிந்துகொண்டு காட்டுக்கு வெளியில் இருந்து கேணல் கிட்டு அவர்களால் அனுப்பப்பட்ட தலைவரின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் தொடர்பான செய்தியை எமக்கு தெரிவித்து, ‘எனது உயிருக்காக மறுபடி ஒரு ஆயுத ஒப்படைப்பு நடக்க அனுமதிக்க மாட்டேன். நான் வீரச் சாவு அடைந்தால், இன்னொரு பிரபாகரன் அல்லது பிரபாகரியாவது தோன்றி இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும். நீங்கள் எல்லோரும் இதில் உறுதியான முடிவை எடுக்க வேண்டும். இந்தக் கடினங்களுக்கு ஈடு கொடுத்து போராடும் மனநிலை யாருக்காவது இல்லையெனில் அவர்களைப் பாதுகாப்பாக அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கின்றேன். நான் விலங்குகளைச் சுட்டுச் சாப்பிட்டாவது இந்தப் போராட்டத்தைத் தொடர்வேன்’ என்றார். தலைவர் இவ்வாறு சொல்லும்போது அங்கிருந்த பெண் போராளிகளில் ஒருவரும் இளநிலை அதிகாரியாகக் கூட வளர்ந்திருக்கவில்லை. இந்தச் சம்பவத்தின் மூலம் தலைவர் அவர்களது இலட்சியப் பற்றையும், எம்மீது கொண்ட நம்பிக்கையையும் நேரடியாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கொண்ட கொள்கையில் உறுதியும் விடாமுயற்சியுடன் கூடிய இலட்சியப் பற்றும் தனது நலனையோ உயிரையோ பெரிதாக எண்ணாது நாட்டுக்காக எதையும் செய்வேன் என்ற தலைவரின் உறுதியான நெஞ்சுரமும்தான் இந்திய இராணுவத்தை எமது மண்ணிலிருந்து திருப்பியனுப்பி, சரித்திரத்தில் மகத்தான மாற்றத்தைக் கொண்டு வந்தது.
இத்தகைய அற்புதமான தலைவரின் அடிமன விருப்பு எதுவாக உள்ளது என்பதை எல்லோரும் அறிந்திருக்க வேண்டும். அண்மையில் நடந்த துரோகத்தனமான சம்பவத்தின் பின் ஒருநாள் தலைவர் கதைத்துக் கொண்டிருந்தபோது பின்வரு மாறு தனது மனஉணர்வை வெளிப்படுத்தினார். ‘இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்து வதற்கு சிறந்ததொரு தலைமை கிடைக்குமாயின், தான் இந்த நிலையைவிட்டு சாதாரண ஒரு போராளியாக சண்டையிடும் அணிகளுடன் நிற்கவும், மிதிவண்டியில் சென்று கிராம மக்கள் மத்தியில் வேலை செய்வதும் தான் விருப்பம்’ என தனது மனவிருப்பை வெளிப்படுத்தினார். 1993 இல் காயப்பட்ட போராளிகளின் நலன் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் ‘தமிழீழம் கிடைத்த பின்னர் எனது பணி, விழுப்புண்ணடைந்த போராளிகள் சார்ந்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் சார்ந்ததாகவும் முழுமையாக இருக்கும்’ என்று கூறியதை மேற்கண்ட கூற்று மீள எனக்கு நினைவுபடுத்தியது.
‘எமது போராட்டம் இன்று உலக அரங்கில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறது. இவ்வாறு வளர்ந்த பின்பு எமது மாவீரர்களுடைய, மக்களுடைய, ஈகங்களை மதிக்காமல் எவ்வாறு இத்தகைய பழி பாவங்களை செய்ய முடிகிறது. இவர்களை என்றோ ஒரு நாள் தர்மம் தண்டிக்கும்’ எனத் தலைவர் சொன்னமை, சிறுவயதில் நாம் பிழைகள் விட்டபோது, ‘பாவம் செய்யக் கூடாது’ என்று சொல்லி எம்மை வழிப்படுத்துகின்ற பெற்றோர்களின் மனநிலையை ஒத்திருக்கிறது. எத்தகைய உயர்நிலையில் இருந்தாலும் மனதாலும், செயலாலும், அவர் மிகவும் எளிமையானவர்.
ஓயாத அலைகள் – 01 சமரில் நடைபெற்ற சம்பவம் ஒன்றையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. போரில் இறந்த சிங்கள இராணுவ வீரர்களின் உடலுக்கு எமது போராளிகள் உரிய மரியாதை கொடுக்காமல்விட்டதுடன், சிறீலங்கா தேசியக் கொடியையும் எரித்திருந்தனர். இந்தச் செய்தி தலைவரின் காதுகளுக்கு எட்டியபோது இந்த விட யத்தை அவர் கண்டித்திருந்தார். ஒரு நாட்டின் தேசியக் கொடி என்பது மிகவும் புனிதமானது. எமது தேசத்தின் கொடியை வேறு நாட்டினர் எரித்தால் எமக்கு எத்தகைய கோபம் வருமோ, அதேபோலத்தான் அந்நாட்டு மக்களுக்கும் இருக்கும். அதே போல ஒரு இராணுவ வீரனின் உடலுக்கு உரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும் என்று கூறியதன் மூலம் அவரின் வித்தியாசமான பக்கம் ஒன்றை அறியக் கூடியதாக இருந்தது.
பெரியார் முழக்கம் 28112013 இதழ்