ஆதரவாக… மவுனமாக… பரப்புரையின் தாக்கம்
ஜூலை 24 ஆம் தேதி மயிலாடுதுறையில் தொடங்கிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் ‘சுயமரியாதை சமதர்மப் பரப்புரைப் பயணம்’ தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து, ஜாதி எதிர்ப்பு வாழ்வியல் உரிமை பறிப்பு, நாட்டின் பொருளாதாரச் சுரண்டல்களை பறை இசை, வீதி நாடகங்கள், பாடல்கள், உரை வழியாக மக்களிடம் விளக்கி வருகிறது. வீதி ஓரங்களில் மக்கள் கூடும் பகுதிகளில் கழகத் தோழர்கள் வாகனங்களை நிறுத்தி, பறை இசை எழுப்பியவுடன் மக்கள் கூடுகிறார்கள். பரப்புரை வாகனத்தில் பார்ப்பனியம், ஜாதி-தீண்டாமை வாழ்வியலில் ஊடுருவி, மக்களை பிளவுபடுத்துவதை சித்தரிக்கும் கருத்துப் படங்களையும், உயர்கல்வித் துறையில் மத்திய அரசுத் துறையில் பார்ப்பன மேலாதிக்கத்தை விளக்கும் புள்ளி விவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை பார்க்கிறார்கள். ஜாதியத்தில் ஊறிப் போய் நிற்போர் கருத்துகளை மவுனமாக கேட்கிறார்கள். ஜாதி எதிர்ப்பாளர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள்.
பயணத்தின் நோக்கங்களை விளக்கிடும் துண்டறிக்கைகளை அப்பகுதியிலுள்ள கடைகளில் தோழர்கள் வழங்கி உண்டியல் வழியாக நிதி திரட்டுகிறார்கள். முதலில் பறை இசை ஒலிக்கும். தொடர்ந்து மக்களை வரவேற்கும் ஜாதி ஒழிப்பு, பெண்ணமை ஒழிப்பு கருத்துகள் கொண்ட பாடல்களை தோழர்கள் பாட வீதி நாடகம் தொடங்கும். அதைத் தொடர்ந்து, பயணத்தின் நோக்கங்களை விளக்கி கழகப் பேச்சாளர்கள் ஒருவரோ இருவரோ பேசிட நிகழ்ச்சி முடிவடையும். அருகிலேயே கழகத்தின் வெளியீடுகளும் விற்பனை செய்யப்படும்.
மக்களை ஊர் ஊராக தேடிப் போய், அவர்களிடம் ஜாதி எதிர்ப்பு, பொருளாதார சுரண்டல் கருத்துகளை கழகம் பரப்பி வருகிறது. மாலை நேரங்களில் மட்டும் மேடைகள் அமைக்கப்பட்டு பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னிமலையில் பொதுக் கூட்டம் அனுமதி மறுக்கப்பட்டதால் வீதிக் கூட்டமாக நடத்தப்பட்டது. பொள்ளாச்சியில் கடும் மழை காரணமாக பொதுக் கூட்டம் நடத்த முடியாததால் வீதிக் கூட்டமாக நடத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோருடன் 30க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்கும் இந்த பரப்புரை குழுவின் நோக்கம் செயல்பாடுகளை பல்வேறு இயக்கத்தினரும் பாராட்டி வரவேற்று தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 08082013 இதழ்