காமன்வெல்த் : சில தகவல்கள்
இனப்படுகொலை நடத்திய இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கருத்து அழுத்தம் பெற்றுவரும் நிலையில் ‘காமன்வெல்த்’ பற்றிய சில தகவல்கள்:
- பிரிட்டிஷ் காலனியின் கீழ் இருந்த நாடுகள் உருவாக்கிக் கொண்ட அமைப்பே ‘காமன் வெல்த்’. இதில் உறுப்பு நாடுகள் விரும்பி தாமாகவே இணையலாம். விருப்பமில்லா விட்டால் விலகிக் கொள்ளலாம். 1972 ஆம் ஆண்டு பங்களாதேஷ் நாட்டுக்கு ஏற்பு வழங்கியதை எதிர்த்து பாகிஸ் தான் காமன்வெல்த்திலிருந்து விலகி மீண்டும் 1989 இல் இணைந்தது.
- மனித உரிமை மீறல்கள் மற்றும் திட்டமிட்ட முறைகேடான ஆட்சி நடத்திய குற்றச்சாட்டு களின் கீழ் 2002 ஆம் ஆண்டில் ஜிம்பாவே தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டது. அதற்காக 2003 ஆம் ஆண்டில் அந்த நாடு தன்னை விலக்கிக் கொண்டது. அதேபோல் ஜாம்பியா நாடு 2013 அக்டோபரில் காமன்வெல்த்திலிருந்து விலகிக் கொண்டது.
- காமன்வெல்த்துக்கு உறுப்பு நாடுகளை நீக்கி வைக்கும் உரிமை இல்லை. ஆனால், தீவிரப் பங்கெடுப்பிலிருந்து நாடுகளை ஒதுக்கி வைக்கலாம்.
- அயர்லாந்து – 1932 இல் நடந்த காமன்வெல்த் மாநாட்டிற்குப் பிறகு எந்த மாநாட்டிலும் பங்கேற்காமல் விலகி நின்றது. ஆனாலும், தொடர்ந்து அது காமன்வெல்த் நாடாகவே அங்கீகரிக்கப்பட்டு வந்தது. 1949 ஏப்ரலில் அது சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தியபோது, ‘காமன்வெல்த்’ அமைப்பிலிருந்து நீக்கப்பட்டது. (அயர்லாந்து, பிரிட்டனிலிருந்து விடுவித்துக் கொண்ட குடியரசு; எனவே பிரிட்டன் கட்டுப்பாட்டிலுள்ள காமன்வெல்த் வழமைக்கு மாறாக அயர்லாந்தை நீக்கியது. இப்படி ஒரு நாட்டின் வேண்டுகோள் இல்லாமலே நீக்கப்பட்ட ஒரே நாடு அயர்லாந்து மட்டுமே.)
- 1961 இல் தென்னாப்பிரிக்கா குடியரசானது. அது இன ஒதுக்கல் கொள்கையைப் பின்பற்றியதாலும் அதை பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளும், கனடாவும் எதிர்த்து வந்ததாலும் உறுப்பு நாடாக தொடராமல் தடுக்கப்பட்டது. இனஒதுக்கல் கொள்கை முடிவுக்கு வந்த பிறகு 1994 இல் தென்னாப்பிரிக்கா மீண்டும் இணைந்தது.
- ‘காமன்வெல்த்’ நோக்கம் – கொள்கைகள் 1971 இல் சிங்கப்பூரில் வகுக்கப்பட்டன. உலக சமாதானம்; ஜனநாயக நாடுகளை வளர்த்தெடுத்தல்; தனி மனித சுதந்திரம், சமத்துவம் மற்றும் இனவெறி எதிர்ப்பு, வறுமை, அறியாமை மற்றும் நோய்களுக்கு எதிராக போராடுதல், சுதந்திர வர்த்தகத்தை வளர்த்தல் என்பதே கொள்கைகளாக உருவாக்கப்பட்டன. பிறகு, 1979 இல் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை எதிர்க்கும் ‘லுசாக்கா பிரகடனம்’, 1989இல் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் ‘லங்க்வாய் பிரகடனம்’ ஆகியவை இணைக்கப்பட்டன. அனைத்து கொள்கைகளை யும் ஏற்று 1991 இல் ‘ஹரேரே பிரகடனம்’ வெளியானது. இப்போது காமன்வெல்த் ஏற்றுள்ள முக்கிய கொள்கைப் பிரகடனம் “ஜனநாயகம்; நல்லாட்சி; மனித உரிமைகள்; பாலின சமத்துவம்; உலகமயமாக்கல் பயன்களை சமமாக பகிர்ந்து கொள்ளல்” என்பதேயாகும். ஹரேரே பிரகடனம் இவற்றை உறுதி செய்கிறது.
- அண்மைக்காலமாக ‘காமன்வெல்த்’ அமைப்பு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகிறது. அதன் நோக்கங்கள் பேச்சளவில் உள்ளதே தவிர செயலளவில் இல்லை என்பதே குற்றச்சாட்டு. ‘காமன்வெல்த்’ அதிகாரிகள் மனித உரிமை மீறல்கள் பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கக் கூடாது என்று அமைப்பின் தலைமைச் செய லாளர் ரகசியமாக அறிவுறுத்தியது அம்பலத்துக்கு வந்தது.
- காமன்வெல்த் அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழு, 2011 ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கை – இந்த அமைப்பு அதற்கான முக்கியத்துவத்தை இழந்து நிற்பதாகவும், மனித உரிமைகளை மீறும் நாடுகளை கண்டிக்கக்கூடிய செயற்பாட்டு அமைப்புகள் எதுவும் இல்லை என்றும் குறை கூறியது. 106 ஆலோசனைகளையும் முன் வைத்தது; கட்டாயத் திருமணங்களை தடுக்க வேண்டும் என்றும், பல நாடுகளில் அமுலில் உள்ள ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. மனித உரிமை, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி போன்றவற்றை வலியுறுத்திய அந்த அறிக்கையை காமன்வெல்த் வெளியிடவில்லை. பரிந்துரைகளை பரிசீலிக்கவும் இல்லை. பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் மால்கோப் ரிக்ஃபின்ட், “காமன்வெல்த் கூடிக் களையும் கேளிக்கை விழாவல்ல; மக்களுக்கான அமைப்பு” என்று கடுமையாக விமர்சித்தார்.
- கடைசியாக 2013 மார்ச் மாதம், காமன்வெல்த் புதிய பிரகடனத்தை ராணி எலிசபெத் வெளியிட்டார். இனம், மொழி, நிறம், அரசியல் கொள்கை உள்ளிட்ட எவற்றிலும் காட்டப்படும் எந்த வகையான பாகுபாடுகளையும் காமன்வெல்த் உறுதியாக எதிர்க்கும் என்று அந்த பிரகடனம் கூறுகிறது.
இனத்தின் அடிப்படையில் பாகுபாடு என்ற எல்லைகளைத் தாண்டி, இனப் படுகொலைகளையே நடத்தி முடித்த ராஜபக்சேயின் இலங்கையில் தான் அதற்கு எதிரான கொள்கைகளை அறிவித்துள்ள காமன்வெல்த் மாநாடு இப்போது கூடுகிறது. காமன்வெல்த் கூடிக் களையும் கேளிக்கை விழா என்பது உண்மை தானா?
பெரியார் முழக்கம் 17102013 இதழ்