‘மகாத்மாவும் வருணாச்சிரமமும்’ என்ற தலைப்பில் சென்ற வாரம் எழுதினதிற்கு ஆதாரமான மகாத்மாவின் பிரசங்கக்குறிப்பு
மகாத்மா காந்தி வருணாசிரமத்தைப் பற்றி மைசூரில் பேசியதாக சென்ற வாரம் குடியரசில் குறிப்பிட்ட விஷயத்தின் விபரமாவது.
“…………………….தீண்டாமை என்னும் கொடிய வழக்கம் இந்து சமூகத் திலிருந்து விலகுவதற்கு முன்னால் சுயராஜ்யம் சித்திக்குமென்கின்ற நம்பிக்கை எனக்கில்லை. இந்து மதத்தில் நான் அறிந்த மட்டில் வருணாசிரம தர்மம் ஒரு வருணத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு வருணத்தாரைவிட உயர்ந்தவர்கள் என்று நினைக்க இடமில்லை.
ஒவ்வொரு வருணாத்தாருக்கும் ஒவ்வொரு தருமம் விதிக்கப் பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வருணத் தார் செய்யும் போது அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள். பிராமணனுக்கு சில தர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை அவன் சரிவர நிறை வேற்றும்போது அவன் உயர்ந்தவனாகிறான். ஜனசேவையே பிராமண னுடைய முக்கிய தர்மம். எளியவர்களை பாதுகாப்பது க்ஷத்திரியனுடைய தர்மம். அந்த தர்மத்தை அவன் செய்யும் போது மற்ற எல்லோரிலும் மேம் பட்டவனாகிறான். இம்மாதிரியே இதர வர்ணத்தினர்களும் தத்தம் தர்மங் களை கடமைகளைச் செய்கையில் அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள். ( இந்த இடத்தில் வைசியர், சூத்திரர் என்கிற வார்த்தை மகாத்மாவே சொல்ல வில்லையோ, அல்லது “சுதேசமித்திரன்” பிரசுரிக்கவில்லையோ தெரிய வில்லை. )
இப்படியிருக்கையில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வருகிறது. வருணா சிரம தர்மமானது சமுதாய நலத்தை ரசிப்பதற்காகவே ஏற்பட்டது. மற்றபடி ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை ரசிப்பதற்கு ஏற்பட்டதல்ல.” இந்த வாக்கியங்கள் சுதேசமித்திரன் பத்திரிகையில் காணப்படுகின்றன.
குடி அரசு – குறிப்புரை – 14.08.1927