கழக நிர்வாகக் குழு ஈரோட்டில் கூடியது
தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மண்டல அமைப்புச் செயலாளர்களைக் கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிர்வாகிகள் குழு ஆலோசனைக் கூட்டம் 18.8.2013 அன்று ஈரோட்டில் கூடியது.
சுயமரியாதை சமதர்மப் பரப்புரைப் பயணத்தின் நிறைகுறைகள் குறித்து விரிவாக பரிசீலிக்கப்பட்டது. மாவட்டங்களை மய்யமாக வைத்து கிராமம் கிராமமாக நடத்தவிருக்கும் பரப்புரைக்கான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டிய முழக்கங்கள் பரிசீலிக்கப்பட்டன. எதிர்வரும் செப்டம்பர் 11 முதல் 20 வரை நடக்கும் இந்த கிராமப் பரப்புரை இயக்கம் பழனியில் தொடங்கி திண்டுக்கல்லில் நிறைவடைகிறது.
பரப்புரையில் – ஜாதி-தீண்டாமை எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழக கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒடுக்கப்பட்டோர் வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் உரிமை, தலைதூக்கி வரும் ஜாதி வெறி சக்திகளை முறியடிக்க – சுயஜாதி எதிர்ப்பாளர்களின் ஒருங்கிணைப்பு, பறிபோகும் தமிழக இயற்கை வளங்கள், பன்னாட்டு சுரண்டல் ஆகிய கருத்துகளை முன் வைத்து பரப்புரை நடத்த முடிவு செய்யப்பட்டது. பரப்புரையில் மக்களிடையே முன் வைக்கப்படும் முழக்கங்கள்:
- ஜாதி மறுப்புத் திருமணம் புரிவோருக்கு பாதுகாப்புக்கும் – மிரட்டும் ஜாதி வெறியர்களைத் தடுக்கவும், தண்டிக்கவும் தனிச்சட்டம் வரட்டும்.
- கார்ப்பரேட் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டைப் பெற போராடுவோம்.
- ஜாதி வெறியூட்டிடும் சங்கத் தலைவர்களுக்கு எதிராக அந்தந்த ஜாதிகளில் பிறந்த ஜாதி எதிர்ப்பாளர்கள் வெளியே வந்து கண்டனக் குரல் எழுப்ப வலியுறுத்துவோம்.
- தீண்டாமை வடிவங்களான இரட்டைக் குவளை, தனிச் சுடுகாடு போன்றவற்றை அம்பலப்படுத்தி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்த வைப்போம்!
- உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை இயற்கை வளங்களைச் சூறையாடும் பன்னாட்டு சுரண்டலை முறியடிப்போம்!
- ஜாதிச் சான்றிதழ் வழங்காதே; வகுப்புச் சான்றிதழ் (பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. என்று) வழங்கு!
– என்ற முழக்கங்கள் முன் வைக்கப்படும்.
இந்த செயல் திட்டங்களை முன் வைத்து முடிவெடுக்க 2.9.2013 அன்று சென்னையில் கழகத்தின் தலைமை செயற்குழுவை கூட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
நிர்வாகக் குழுவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, வெளியீட்டுச் செயலாளர் சூலூர் தமிழ்ச் செல்வி, அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், மண்டல அமைப்புச் செயலாளர்கள் ஈரோடு இராம. இங்கோவன், பல்லடம் விஜயன், மேட்டூர் சக்திவேல், நெல்லை குமார், மயிலாடுதுறை இளையராஜா, திண்டுக்கல் இராவணன், தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் திருப்பூர் சிவகாமி மற்றும் ஈரோடு சிவக்குமார், சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் சார்பில் அ.ப. சிவா உள்ளிட்ட 17 தோழர்கள் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 22082013 இதழ்