சென்னையில் செப். 1 இல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “நாத்திகர் விழா”
“சென்னையில் சித்தர்கள், சாமியார்கள் குறி சொல்லும் ஆசாமிகள் யார் யார் என்று காவல்துறை ரகசியமாக கண்காணித்து வருகிறது. இதுபோன்ற நபர்களிடம் பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.”
– இப்படி ஒரு செய்தி ‘தினத்தந்தி’ ஏட்டில் (ஆக.19) வெளி வந்துள்ளது.
சாமியார்கள் – குறி சொல்வோர் – மந்திரவாதிகள் – சோதிடம் பார்ப்போர் என்பவர்களில் ‘போலி’ என்று எவரும் கிடையாது. அனைவருமே மக்களை ஏமாற்றுகிறவர்கள்தான். மக்கள் இந்த மூடத்தனத்தை நம்பாமல் தடுக்க அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பகுத்தறிவுக் கருத்துகளை, அறிவியல் சிந்தனைகளை கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அப்படி அறிவியல் பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடம் பரப்புவது பெரியார் இயக்கங்கள் மட்டும்தான்.
அரசியல் சட்டம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் நிலையிலும் இந்தக் கருத்துகளைப் பரப்புவதற்கு கடும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கிறது.
காவல்துறை அனுமதி மறுக்கிறது. சாமியார்களிடம், குறி சொல்வோரிடம், ஏமாற வேண்டாம் என்று கூறும் காவல்துறை அதே கருத்தை அறிவியல் பார்வையில் மக்களிடம் பகுத்தறிவைத் தூண்டி விட்டு சிந்திக்கச் செய்யும் பரப்புரைகளுக்கு தடை போடுவது நியாயம் தானா? இந்த சூழ்நிலையில் தான் –
சென்னையில் செப்டம்பர் முதல் தேதி திராவிடர் விடுதலைக் கழகம், நாத்திகர் விழாவை நடத்துகிறது. பிற்பகல் 3 மணிக்கு மயிலாப்பூர் அம்பேத்கர் பாலத்திலிருந்து அறிவியல் கருத்துகளை விளக்கும் நிகழ்ச்சிகளோடு பேரணி.
இராயப்பேட்டை வி.எம்.சாலையில் பகுத்தறிவு அறிவியல் கருத்துகளை விளக்கும் வீதி நாடகங்கள்; இசை நிகழ்ச்சி; பறை முழக்கம்!
தீ மிதிப்பது – பக்தியால் அல்ல என்பதை நிரூபிக்கும் தீமிதி நிகழ்ச்சியும் உண்டு.
அறிவியல் – பகுத்தறிவு சொற்பொழிவுகளும் உண்டு. அறிவியல் விளக்கம் பெற – பகுத்தறிவு சிந்தனையை கூர் தீட்டிக் கொள்ள அனைவரையும் அழைக்கிறது.
– சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்
பெரியார் முழக்கம் 22082013 இதழ்