ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் உயர்நீதிமன்ற நீதிபதியா?
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்க பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ள 6 பேர் அடங்கிய முதல் பட்டியலில் சமூகநீதி பின்பற்றப்படவில்லை என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை இல்லை என்றாலும், பல்வேறு சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி சதாசிவம் அவர்களும், இந்தக் கருத்தை ஆதரித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இன்றும் நுழையாத பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் உள்ளனர்.
இந்த நிலையில், தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள 6 பேர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள சமூகத்தினருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட் டுள்ளதோடு, இரண்டு பேர் பார்ப்பனர்கள் இடம் பெற்றுள்ளனர். நீதிபதிகள் நியமனங்களை எதிர்த்து வழக்குகள் தொடருவதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனர் ஒருவரும் விசுவ இந்து பரிஷத் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்று வரும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் ஒருவரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இந்தப் பட்டியலை திரும்பப் பெற வேண்டும் என்று வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நியாயமான சமூக நீதி கோரிக்கையை திராவிடர் விடுதலைக் கழகம் ஆதரிப்பதோடு, தலைமை நீதிபதி தனது முதல் நியமனத்தில் சமூக நீதிப் பார்வையோடு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
பெரியார் முழக்கம் 29082013 இதழ்