பயணத் தொடக்க விழாவில் கொளத்தூர் மணி உரை இடஒதுக்கீட்டின் நோக்கம் ஜாதி ஒழிப்பே!
மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜூலை 24 அன்று சுயமரியாதை சமதர்ம பரப்புரைப் பயணத்தை தொடங்கி வைத்து ஆற்றிய உரை :
இப்படி ஒரு பரப்புரை பயணத்தை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துவது இது முதல் முறை அல்ல, தொடர்ச்சியான பல பரப்புரை பயணங்களை நாம் நடத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இதுவரை நாம் நடத்தியிருக்கிற, நடத்திய பயணங்கள் அனைத்தும் ஜாதி, தீண்டாமைக்கு எதிராக என்ற மையப்புள்ளியில் இருந்து தான் இயங்கி கொண்டு இருந்தது. அதையொட்டிதான் பல்வேறு கருத்துக்களை மக்கள் முன்னால் எடுத்துச் சென்று கொண்டு இருந்தோம். மனுசாஸ்திர எரிப்புப் போராட் டத்தின் வழியாக இப்படி பல்வேறு தளங்களில் விளக்கிக் கொண்டிருக்கிறோம். பார்ப்பனியம் நேரடியாய் இல்லை என்றாலும், அதுதான் கருத்தியலை வழங்கி நியாயப்படுத்தி கொண் டிருக்கிற அமைப்பு என்பதால் அது பார்ப் பனீயமாக இருந்தாலும், பார்ப்பனீயத்தின் அரசியல் வடிவமாக இருக்கிற இந்தியா என்கிற அமைப்பாக இருந்தாலும், இந்த பார்ப்பனீயத்தையும் இந்தியா வையும் இப்போது இயக்கி கொண்டிருக்கிற பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு கொள்ளை அதை இந்தியாவில் இருந்து நடத்தி கொண் டிருக்கிற பார்ப்பனர்கள், இவை எல்லாவற்றையும் நாம் சேர்த்து மக்களிடம் எடுத்து செல்ல வேண்டியதும், அம்பலப்படுத்த வேண்டியதுமான கடமை நமக்கு இருக்கிறது, அந்த அடிப்படையில் தான் இந்த பயணம். இது குறித்த சில செய்திகளை சொல்ல விரும்புகிறேன். அன்பார்ந்த தோழர்களே மதம், என்ன பங்கை ஆற்றிக்கொண்டிருக்கிறது. நாம் அறியாதது அல்ல புரட்சியாளர் அம்பேத்கர் ஒரு முறை அவருடைய ஜாதி ஒழிப்பு சொற்பொழிவில், லாகூரில் ஆற்றிய சொற்பொழிவில் ஒன்றை சொல்வார்கள் ரோமாபுரியில் மன்னராட்சியை வீழ்த்தி ரோமானியர்கள் மக்களாட்சியை கண்டார்கள். இந்த மக்கள் ஆட்சியில் எல்லா இடங்களிலும் உழைக்கும் மக்களுக்கு சமபங்கு வேண்டும் என்று சொன்னார்கள். ஆட்சிப் பொறுப்பில் கான்சலாக இருந்தாலும், உழைக்கும் மக்களில் ஒருவர், பழைய ஆளும் வர்க்கத்தில் ஒருவர் என்பதாக பிலிப்பைன்களும், பெட்ரிஷியன்களும் பிரித்துக் கொண்டார்கள். அங்கிருக்கின்ற நாடாளு மன்றம் என்றாலும் சம எண்ணிக்கையில் என்று சொன்னார்கள். மதத் தலைமை பொறுப்பு குருவான பொறுப்பு என்றாலும் சமம் தான் என்று சொன் னார்கள். ஆனால் ஆட்சித் தலைவரை தேர்ந் தெடுப்பதோடு முடிந்து விடவில்லை, அவர்கள் மனதில் ஆழ ஊன்றியிருந்த ஒரு கருத்தை வைத்துக் கொண்டு அங்கே இருக்கின்ற டெல்பி என்ற ஒரு மலையில் வீற்றிருக்கின்ற தெய்வத்திடம் போய் கருத்துக் கேட்டு அது ஒப்புதல் கொடுத்தால் தான் அந்த ஆட்சித் தலைவர் பொறுப்பை அவர் வகிக்க முடியும் என்று வைத்திருந்தார்கள். யார் ஒருவன் புரட்சிகர கருத்தை வைத்திருக்கிறானோ, யார் ஒருவன் உழைக்கும் மக்களுக்கான ஒரு உயர்வை பேணுவதற்கான கருத்தை வைத்திருக் கிறானோ அவனுக்கு மட்டும் தெய்வம் குறி சொல்லாது. என்ன போராடிப் பெற்றிருந்தாலும், எவ்வளவு விடுதலை உணர்வு அவர்களிடம் இருந்தாலும், கொள்கை கொந்தளிப்பு இருந்தாலும் கூட மதம் என்ற ஒன்றை வைத்து, மத நம்பிக்கை என்ற புள்ளியில் அவர்களை மடக்கிவிட முடியும் என்பதை வரலாறு நமக்கு காட்டியிருக்கிறது என்று புரட்சியாளர் அம்பேத்கர் அந்த சொற்பொழிவில் சொன்னார்.
இன்றும் அதைத்தான் செய்து கொண்டிருக் கிறார்கள். அதைதான் நம்பி தொலைத்து நம் சமுதாயம் நாசமாக போய் கொண்டிருக்கிறது என்பதால் தான் இந்த பார்ப்பனர்களை பற்றி பார்ப்பனர்கள் தங்கள் நிலையில் இறுக்கிப் பிடித்து கொள்வதற்காக நம்மீது இன்னும் திணித்து கொண்டிருக்கிற சிந்தனைகளை பற்றி நாம் பேச வேண்டியவர்களாக இருக்கிறோம். இப்போது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பற்றி பேசுவது என்றாலும் கூட ஜாதிய சமுதாயத்தில் அவன் அமைதியாக உட்கார்ந்து கொண்டு எங்கோ இருந்து கொண்டு யாரையோ இயக்கி – நாங்கள் ஒன்றும் செய்ய வில்லை, அவர்கள் செய்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். ஜாதியை தானாக இயங்கும் ஒரு அமைப்பாக மாற்றியது, (ஆட்டோ பங்சனிங் யூனிட்) என்று சொல்வார்கள் தானாக இயங்கும், எப்போதாவது தொய்வு ஏற்பட்டால் அவன் ஒரு சுற்று சுற்றிவிட்டு அமைதியாக போய் அமர்ந்து கொள்வான். அடுத்தவனை எட்டி உதைக்கின்ற காலைப் பற்றிதான் பேசுவோம், குத்துகின்ற கையை பற்றி பேசுவோம், ஆணையிடுகின்ற மூளையை பற்றி நாம் கவலைபடாதவர்களாக இருந்திருக்கிறோம், என்னை உதைத்துவிட்டான், குத்திவிட்டான், என்று சொல்லுவோமே தவிர அதற்காக கையை வெட்டவேண்டும், காலை வெட்ட வேண்டும் என்று சொல்லுவோமே தவிர கட்டளை வழங்கிய மூளையை நாம் மறந்து விடுகிறோம், அல்லது அவர்கள் மறைத்து விடுகிறார்கள். இப்போதும் ஜாதி என்ற பெயரால் பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் அண்மை காலத்தில் மிக அதிகமாக – இழந்ததை எல்லாவற்றையும் பிடிக்க வேண்டும் என்று கருதியோ என்ன நாசமாய் போன கருத்தோ, ஜாதியத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் எங்களுடைய முழக்கங்களில் ஒன்றாக கூட வைத்திருக்கிறோம். இடஒதுக்கீட்டு உரிமையை ஜாதியை நிலைநிறுத்த பயன் படுத்தும் சுயநல சக்திகளை வீழ்த்தி ஜாதி ஒழிப்பை நோக்கி முன்னெடுக்க வேண்டும் என்று நாங்கள் வைத்திருக்கிறோம். எங்கள் துண்டறிக்கையில் சொல்லுகின்ற செய்தியில் அது ஒன்று, இடஒதுக்கீடு எதற்காக அதை பயன்படுத்து என்று சொல்லிக் கொண்டு ஜாதியை சேர்ப்பது, அதை சேர்த்துக் கொண்டு இவன் தலைவனாவது, சம்பாதிப் பது என்ற போக்கைத் தான் நாம் பார்க் கிறோம். அப்படி இருப்பவர்கள் கூட ஏதாவது தங்கள் ஜாதிய சமுதாயத்திற்கு செய்திருக்கிறார்களா என்று நீங்கள் சற்று யோசித்து பார்க்கவேண்டும். பிற்படுத்தப்பட் டோருக்கான தலைவர்களாக தங்களை காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் சொல்லு கிற கருத்து எல்லாம், இந்த மக்களுக்கு என்ன உரிமையை வாங்கி தந்திருக்கிறது, அவர்கள் உழைப்பு என்ன செய்திருக்கிறது என்பதை மட்டும் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.
27 விழுக்காடு இடஒதுக்கீட்டை மத்திய அரசின் கல்வி நிலையங்களில் ஒன்பது, ஒன்பதாகத்தான் நாங்கள் நடைமுறைபடுத்த போகிறோம் என்று வீரப்பமொய்லி ஒரு அறிக்கை கொடுத்தார். வேலை வாய்ப்பில்
27 விழுக்காடு எப்போது வந்தது. 1990ல் நடைமுறைக்கு வந்துவிட்டது. தீர்ப்பை யெல்லாம் கடந்து 93ல் நடைமுறைபடுத்தப் பட்டுவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு என்ற சட்ட திருத்தம் 1951ல் தமிழ்நாட்டில் பெரியார் முன்னெடுத்து நடத்திய போராட் டம் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீட்டை உறுதி செய்துவிட்டது. ஆனால், 2006ம் ஆண்டில் தான் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு என்பதை சட்டமாகக் கொண்டுவந்தார்கள். அப்படி பெற்றதும் கூட 27 விழுக்காடுதான். மண்டல் குழு அறிக்கையின்படியே பிற்படுத்தப்பட்டவர் களின் எண்ணிக்கை 52 அப்போது அவர் அறிக்கை எழுதும் போது – இப்போது நிறைய பேரை பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டி யலில் சேர்த்துவிட்டார்கள், அவர்கள் எழுதிய போது 52 விழுக்காடு; 52 விழுக் காட்டு மக்களுக்கு 27 விழுக்காடு தான் கொடுத்தார்கள் 55 ஆண்டு காலம் கழித்து அதில்கூட ஆலோசனைக்காக அமைக்கப் பட்ட குழுவின் தலைவராக இருந்த வீரப்ப மொய்லி 27ஐ ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டாம் ஒன்பது, ஒன்பதாக கொடுக்க லாம் மூன்று ஆண்டுக்கு என்று சொன்னார். அதை அம்பலப்படுத்தியதும் மக்களிடம் எடுத்துச் சொன்னதும் அந்த ஆணைகளை எரித்து எதிர்ப்பை பதிவு செய்ததும் நாங்கள் தான். பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை பாதிக்கப்படுகிறபோது போராடிய நாங்கள் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பிற் படுத்தப்பட்டோர் நடத்துகிற தாக்குதல் களுக்கு எதிராகவும் பேசுகிறோம். இப்போது பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் தங்களை மிக உயர்வாக – சத்திரியர், வைசியர் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிற இந்த வேளையில் நாம் சிலவற்றை சொல்லவேண்டும். இதற்கு முன்பேசிய தோழர்கள் கூட சொன்னார்கள்.
இதே நாகப்பட்டிணத்தில் தான் தந்தை பெரியார் அவர்கள் 1931ம் ஆண்டு வந்தபோது பேசிய பேச்சில் இறுதியாகச் சொன்னார். பறையன் பட்டம் போகாமல் உங்கள் சூத்திரன் பட்டம் போய்விடும் என்று கருது வீர்களேயானால் நீங்கள் வடிகட்டிய முட் டாள்கள் ஆவீர்கள் என்று சொன்னார்கள். 31இல் சொன்னது நம் மூளையில் இன்னும் ஏறாமலே இருக்கிறது. ஆனால் இப்போது நாம் பார்க்கிறோம். சென்னையில் ஐஐடி இருக்கிறது மத்திய அரசின் கல்வி நிறுவனம் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு எப்போதோ வந்துவிட்டது. மத்திய அரசில் 2006 தான் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு வந்திருக் கிறது. ஆனால் இப்போது பிற்படுத்தப்பட்டோர் நிலை என்ன என்றால் 462 பேரில் 7 பேர்தான் பிற்படுத் தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அதுவும், உதவி பேராசிரியர்களாகதான் இருக்கிறார்கள். பேராசிரி யராக யாரும் கிடையாது, அசோசியேட் புரபசராக யாரும் கிடையாது, துணை பேராசிரியராக, உதவி பேராசிரியர்களாகத் தான் இருக்கிறார்கள். ஆனால், பிற்படுத்தப்பட்டோர் 7 என்றால் தாழ்த்தப்பட்டோர் 10 பேர் இருக்கிறார்கள், பழங்குடி மக்கள் ஒருவர், பெரிய ஜாதிகாரன் ஏழுபேர். இதுதான் இவனுடைய பெரிய ஜாதி இன்னொன்றை யும் சொல்ல வேண்டும். நான் எங்களது பயணத்தில் கூட வண்டியில்கூட போட்டு வைத்திருக்கிறோம். தாழ்த்தப்பட்டோர் எவ்வளவு பேர் மத்திய அரசினுடைய பணியில் இருக்கிறார்கள் பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று, தாழ்த்தப்பட்டோரை பொறுத்தவரை மத்திய அரசின் பணிகளில் அவர்கள் இருப்பது என்பது ‘ஏ’ பிரிவில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்றால், 11.5 சதவீதம் பேர் இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடி மக்கள் 4.8 சதவீதம் பேர் ஏறக்குறைய 5 சதவீதம் பேர் இருக்கிறார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் 6.9 தான் இருக்கிறார்கள் பழங்குடிகளும் தாழ்த்தப்பட்ட வர்களும் சேர்த்து 16 விழுக்காடு இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் 7 விழுக்காட்டிற்கு எட்டி பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதே போல ‘பி’ பிரிவுகளில் தாழ்த்தப்பட்டோரும், பழங்குடிகளும் சேர்த்து 20.9 விழுக்காடு இடங்களில் இருக்கிறார்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் 7 விழுக்காடு இடங்களில்தான் இருக்கிறார்கள். ‘சி’ பிரிவுகளில் 24.1 விழுக்காடு பழங்குடி மக்களும், தாழ்த்தப்பட்டவர்களும் சேர்ந்து இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் 15 விழுக்காடு தான் இருக்கிறார்கள். எண்ணிக்கையில் சமுதாயத்தில் பாதி 52 ஆனால் இவர் எண்ணிக்கை தாழ்த்தப்பட்ட வர்கள் எண்ணிக்கையில் பாதி தான் இருக்கிறது. ஆக, இந்த ஜாதி சங்க தலைவர் எல்லாம் வேலை செய்ய வேண்டிய இடம் எது, அங்கே போய் கேளு – இங்கே எங்கேயாவது ஜாதி சங்கத் தலைவர்கள் வருவார்களே யானால், எங்களை மத்திய அரசில் இவ்வளவு கேவல மாய் விட்டு விட்டு அதை பற்றி பேசாமல் இங்கே ஏன் வந்து பிரச்சனை செய்கிறாய் என்று நாம் கேட்க வேண்டும்.
ஜாதி சங்கத் தலைவர்கள் ஏதோ ஜாதி பூரா அவருக்கு பின்னால் இருப்பதாக பேசிக் கொண்டிருக் கிறார்கள்; அவர்கள் நினைத்துக் கொண்டு இருக் கிறார்கள். ஒவ்வொரு ஜாதி சங்கத் தலைவரும் பேசுகிற போது எங்களுக்குப் பின்னால் எங்கள் ஜாதி எதிர்க் கிறது என்று சொல்லுகிறார்கள். அவர்களுக்குத் தெரியாது அவர்கள் ஜாதிக்காரர்கள் எல்லா கட்சி யிலும் தான் இருக்கிறார்கள், ஏதோ இவர்கள் அமைப்பில் மட்டும் இருப்பதாக கருதிக் கொண்டு பேசுகிறார்கள். அந்த அந்த ஜாதிகளில் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் ஜாதி எதிர்ப்பு சிந்தனை உள்ளவர்கள் இல்லையா? இருக்கிறார்கள் – அமைதியாக இருக்கிறார்கள். ஒரு கோர சம்பவம் நடைபெறுகிறது என்றால் ஒரு இனப்படுகொலை நடக்கிறது என்றாலும் சரி, ஒரு குற்றம் நடக்கிறது என்றாலும் சரி, அது குற்றவாளியினுடைய குற்ற எண்ணத்தில் மட்டும் அல்ல, நியாயவாதியினுடைய அமைதியிலும்தான் அது நடக்கிறது. குற்றம் செய்பவன் குற்றம் செய்கிற எண்ணத்தோடு துணிச்சலாக வருகிறான். தவறு என்ற சொன்ன ஒருவன் அமைதியாக இருக்கிறான், அதனால் தான் நடக்கிறது. ஆக குற்றவாளிக்கு என்ன அதில் பங்கு உண்டோ அதே பங்கு அமைதியாக இருக்கிற நியாயவாதிக்கும் உண்டு. எனவே இந்த வேளையில் நாங்கள் உங்களிடம் வைக்கிற வேண்டுகோள் உங்களுக்கு ஜாதியத்திற்கு எதிரான சிந்தனை இருக்குமேயானால் ஜாதிய நடவடிக்கை களுக்கு எதிரான போக்கு உங்களுடைய மனதிலே இருக்குமேயானால் அதை துணிச்சலாக வெளிப் படுத்துங்கள். அந்த அந்த ஜாதி சங்க தலைவர்களிட மாவது சொல்லுங்கள் – ஜாதிக்கெல்லாம் நீ என்ன ஏகபிரதிநிதியா எங்களுக்கு பிரதிநிதி நீ அல்ல. நாங்கள் உங்களுக்கு எதிரான கருத்து உள்ளவர்கள் நாங்களும் இவ்வளவு பேர் இருக்கிறோம், இனிமேல் நீ எங்கள் பிரதிநிதி என்று பேசாதே, தனியாக உன் பேரை சொல்லி பேசிக் கொள். எங்கள் ஜாதியின் பெயரால் பேசாதே என்றாவது சொல்வதற்கு நாம் துணிய வில்லை என்றால் அந்த ஜாதிய படுகொலைகளில் நமக்கும் பங்கு உண்டு என்றுதான் அர்த்தம்.
சமூக நீதித் துறையிலே
இந்த வேளையில் வேறு சில செய்திகளையும் சொல்ல வேண்டும். தோழர்களே இதற்கு ஒரு அமைப்பு மத்திய அரசிலே வைத்திருக்கிறார்கள். சோசியல் ஜஸ்ட்டீஸ் அண்டு எம்பவர்மெண்ட் அப்படி என்று ஒரு துறை அமைச்சர் இருக்கிறார். சமூக நீதிக்கான அமைச்சர், அமைச்சுத் துறை ஒன்று இருக்கிறது. சமூக நீதி வழங்க வேண்டிய துறையில் என்ன சமூக நீதி வழங்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதிலே குருப் ‘ஏ’ சர்வீஸ்ல மொத்தம் 69 இடங்கள் இருக்கிறது. அதில் பிற்படுத்தப்பட்டவர் ஒருவர் தான் இருக்கிறார், அப்ப 1.5 சதவீதம் கூட இல்லை. தாழ்த்தப்பட்ட வர்கள் 7.2 சதவீதம் பேர் இருக்கிறார்கள் 5 பேர் இருக் கிறார்கள், பழங்குடிகள் நான்குபேர் இருக்கிறார்கள், அதேபோல 176 பேர் இருக்கிற பி-பிரிவில் தாழ்த்தப்பட்டவர்கள் 12 பேர், பழங்குடிகள் 8 பேர் ஆக மொத்தம் 30 பேர் இருக்கிறார்கள். பெரிய ஜாதிக்காரன் பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லாம் 13 பேர்தான் இருக்கிறார்கள். அதே போலதான் ‘சி’ பிரிவில் 169 பேரில் 43 பேர் பழங்குடிகளும் தாழ்த்தப் பட்டவர்களும் சேர்ந்து இருக்கிறார்கள். பிற்படுத்தப் பட்டவர்கள் 6 விழுக்காடு தான் இருக்கிறார்கள். 11 பேர்தான் இருக்கிறார்கள். ஆக எல்லா இடங்களிலும் கீழ் ஜாதியாக மத்திய அரசில் – எல்லாவற்றையும் ஆட்டி வைக்கிற அரசில் – கீழ் ஜாதியாக இருக்கிற பிற்படுத்தப்பட்டவர்கள் தான் நம்மூரில் வந்து பெரிய ஜாதி என்று பேசிக் கொண்டிருக்கிறார். பெரிய ஜாதி என்று பேசினால் என் ஜாதிக்காரன் உரிமையை அங்கே வாங்கி கொடு என்று நாம கேட்க வேண்டாமா அதைத்தான் கேட்க தவறுகிறோம்.
பெரியார் ஒருமுறை நாகப்பட்டிணம் கூட்டத்தில் பேசுகிறபோது தான் அவர் சொன்னார், நம்மை சூத்திரன் என்கிறான், நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். அவர்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்று மகிழ்ச்சியடைகிறீர்கள். சூத்திரன் என்றால் பொருள் என்ன என்று தெரியுமா? என்று கேட்டார். என்னை யாராவது சூத்திரன் என்பதைவிட பறையன் என்று சொன்னால் ஏத்துக்குவேன். பள்ளன் என்று சொன்னால் ஒத்துக்குவேன். அதாவது அவன் வச்சிருக்கிற இசைக்கருவியை வைத்து பேர் வந்திருக்க கூடும்; வசிக்கிற பள்ளமான இடத்திற்கு தகுந்தாற்போல் பேர் வைத்திருக்க கூடும்; அவற்றுக்கு ஒரு காரணம் இருக்கிறது. உனக்கு என்னடா காரணம் இருக்கிறது தேவடியாள் மகன் என்று உன்னை சொல்வதற்கு என்ன காரணம் இருக்கிறது? எது கீழ் ஜாதி? என்று பெரியார் கேட்டார். இந்த சூத்திர இழிவு என்பதில் அவன் மகிழ்ச்சியடைவான். ஏன் என்றால் நமக்கு மகாத்மா என்று ஒருவர் இருந்தார். இந்த நாட்டின் கேடுகளுக்கு முக்கால்வாசி காரணமாக இருந்த அந்த மனிதர், ஒருமுறை சொன்னார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோயிலுக் குள்ளே நுழையவேண்டும் என்ற உரிமையைக் கொடுக்கலாம். இந்த பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு தூரம் போகலாமோ அவ்வளவு தூரம் கொடுக்கலாம் என்று. அவ்வளவுதான் அவர் சொன்ன உரிமை. சரி, அவர் அடுத்த ஸ்டெப் ஏதாவது போகலாம் என்பதற்காக சொன்னாரா அதெல்லாம் கிடையாது. நீங்க ரெண்டு பேரும் அங்க போய் நின்னுக்குங்க, கருவறைக்குள்ளே போக முடியாது. அவர் கேட்ட உரிமை அவ்வளவுதான். அனைத்து ஜாதி அர்ச்சகரைப் பற்றி பேசுகிறோம். உரிமை வேண்டும் என்பதைப் பற்றி பேசுகிறோம். நீண்ட நாளாக அங்கே என்ன நடக்கிறது என்று தோழர் மாவட்ட தலைவர் மகாலிங்கம் அழகாக சொன்னார். தேவநாதன் செய்தது எல்லாம் சொன்னார். என்ன சொல்லணும் கடவுள் நம்பிக்கை இருந்தால்தான் பூஜை உண்டு, தி.க.காரன் எல்லாம் வரமுடியாது, தி.வி.க.காரன் வரமுடியாது, பெரியார் தி.க.காரன் வரமுடியாது சொல்கிறாய் நீ. சரி விட்டுவிடு. நாங்க எல்லாம் போகவில்லை எங்களுக்கு அந்த வேலை வேண்டாம் – கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கு நீ அர்ச்சகர் வேலை கொடுக்கலாம். கடவுள் நம்பிக்கை இருந்தால் போதாது அந்த ஆகம விதிகளில் வழிபாட்டு முறைகளில் உரிய பயிற்சிவேணும் என்று சொல்லு – நியாயம், பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அவனுக்கு எல்லாம் தெரியுது, இல்லை இல்லை அவன் சரியா பண்ணல அரைகுறையாக தான் படித்தார் என்று சொன்னால் அவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லனும், இந்த அர்ச்சகர் கோயில் உரிமையை பற்றியெல்லாம் ஒருத்தர் வந்து விசாரிப்பதற்கு அதை பற்றி கருத்து சொல்வதற்கு ஒரு குழுவை போட்டார்கள். சி.பி.ராமசாமி ஐயர் தான் தலைவர். அவர் ஒரு அறிக்கை கொடுத்தார். இந்து மத அறக்கட்டளையை பற்றி விசாரிக்க மத்திய அரசு 1960ம் ஆண்டு நியமித்தது ஒரு குழுவை அதனுடைய தலைவராக இருந்தவர் 62ல் அறிக்கை கொடுத்தார். நாங்கள் தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது ஏராளமான கோயில்களுக்கு நேரடியாக நாங்களே போய் பார்க்க எங்களுக்கு நிரம்ப வாய்ப்பு கிடைத்தது. அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று, கல்வி அறிவற்ற தற்குறிகளாக இருக்கின்றனர், அல்லது அரைகுறையாக படித்தவர்களாக இருக்கின்றனர் இது அவர் கொடுத்த அறிக்கை. அவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் ஏதோ சிற்சில விதிவிலக்குகளும் உள்ளன. விதிவிலக்காகத் தான் பார்ப்பனர் ஒழுங்காக இருக்கிறார்களாம், இந்த விதி விலக்குகள் வடக்கே விட தெற்கே தான் அதிகம் என்கிறார். கொஞ்சம் ஒழுங்கானவன் இங்கே இருக்கிறான் என்று அவர் சொல்கிறார். அவருக்கு தெரிந்தது. ஏனென்றால் அவர் இந்த ஊரு பார்ப்பான் இல்லையா, ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும், உச்சாடனமும் பதியத் தக்கதாக இல்லை. அவன் சொல்வதெல்லாம் மந்திரம் மாதிரியே தெரியவில்லை தப்பும், தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த இந்த மந்திரங்களின் சிறப்பையோ அல்லது பொருளையே அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. தெய்வத்தின் கருணையை பெறுவதற்காக கோயிலுக்கு வரும் பக்தர் இடத்திலும், வழிபடுவோர் இடத்திலும் பக்தியும் மரியாதையும் அடங்கிய உணர்ச்சியை ஊட்டக்கூடிய நிலையில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்பதுதான் வெளிப்படை – இது ஐயர் எழுதிய அறிக்கை.
இப்படிப்பட்ட அர்ச்சகர்கள் எல்லாம் இருக்கான் நம்ம போனால் கெட்டு போய்விடும் என்கிறான். இவன் எல்லாம் போனான் என்றால் வழக்கத்திற்கு மாறாகவும், பழக்கவழக்கங்கள் கெட்டுவிடும், இன்றைக்கு வரைக்கும் வழக்காடி கொண்டிருக்கிறார்கள். முதலில் சட்டம் போட்டார்கள். சட்டத்திற்கு எதிராக தீர்ப்பு வந்த பின்னால் அதற்காக பயிற்சி நடத்தினார்கள். பயிற்சி முடிந்தது. வழக்கு நிலுவையில் இருக்கிறது. கடந்த 7, 8 மாதங்களாக தமிழ்நாடு அரசு நாங்கள் எங்களுக்குள் சமாதானமாக போகிறோம் என்று வழக்கு நடத்தாமல் வைத்துக் கொண்டிருக்கிறது. நடத்தியிருந்தால் ஏதாவது ஒரு தீர்ப்பு எங்களுக்கு எதிராக கூட வரட்டும், எழுச்சியாவது இங்கு வரும், போராட்டமாவது இங்கு வரும். ஆனால் இவர்கள் நடத்தவிடாமல் தடுத்துக் கொண்டே இருக் கிறார்கள். நாங்கள் சமாதானமாக போய்விட்டோம். பேசிக் கொண்டு இருக்கிறோம். விரைவில் எங்கள் முடிவை சொல்லுவோம் என்று சொல்லி தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
பெரியார் தான் கேட்டார். வடக்கே போகிறான், காசிக்கு போறான், போனவுடனே காசி விஸ்வநாதனை கட்டிப் பிடித்துக் கொண்டே கும்பிடுகிறாரான். பெரியார் சொல்வார், அடுத்து வந்தவர் வந்தால் இவனை எழுப்பி விட்டு கட்டிப் பிடித்து கொள்வா ராம், ஏன்டா காசி விஸ்வநாதர் அங்கேயே இருக்கார் அங்க இருந்தா தொடுவதற்கு விடுகிறான், இங்க ஏன்டா தொட விடமாட்டேன் என்கிறாய் என்று கேட்டார், தமிழ்நாட்டிற்கு வந்தால் மட்டும் எப்படி தீட்டு வந்துவிடுகிறது. பெரியார் சொல்வார், பெரிய, பெரிய கோயில்களில் போவான், அங்கபோய் தொட்டு கும்பிடுகிறான், நேராக பூவை போட்டுவிட்டு வருகிறான், தண்ணீர் ஊற்றுகிறான், தொட்டு கும்பிடுகிறான், இங்கே மட்டும் ஏன் தீட்டு. ஒரே சாமிதானே இந்தியா முழுக்க இருக்கிறது, இந்து மதத்திற்கு எல்லாம் ஒரே சாமிதானே ஒரே விதிதானே இருக்கும் ஏன் அங்கே மட்டும் அப்படி, இங்கே மட்டும் இப்படி என்று கேட்டார். நம்மை ஏமாற்றியது தென்னிந்தியாவில் மட்டும். அதிலும், பழைய சென்னை மாகாணத்தில் மட்டும் தான் இதை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த உரிமையைப் பற்றி பேசுவதும், இப்போது தேவையாக இருக்கிறது. அதை எல்லாவற்றையும் பற்றி பேச வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். இடஒதுக்கீடு என்று பேசுகிறபோது, தனியார் துறையை பற்றி சொன்னார்கள், அரசு துறை இல்லாமல் போகிறது.
தனியார் துறையாக மாறுகிறபோது, தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும் என்பதைப் பற்றி நாம் அழுத்தமாக பேச வேண்டிய தேவை இருக்கிறது. எங்க நாட்டில் எங்க அரசு கொடுக்கும் இலவச நிலத்தை வாங்கி எங்களிடம் மின்சார கட்டணத்தில், சலுகை வாங்கி எல்லாம் நடத்திக் கிட்டு ஏன் எங்களுடைய இடஒதுக்கீடு இல்லை என்று நாம் கேட்பதில்லை. ஒரு நூற்றாண்டு கணக்காக நடத்திய தொழிலாளர் பேராட்டம் பல உரிமை களை பெற்றுத் தந்தது. மெல்ல மெல்ல அதைப் பெற்றார்கள். சாதாரணமாக சிறப்பு பொருளாதாரம் என்றால் அவ்வளவுதான். எங்களுடைய பொதுச் செயலாளர் அவர்கள் அழகாக எழுதினார், இதெல்லாம் சதுர்வேதி மங்கலங்களை போல அந்த காலத்தில் வைத்திருந்தார்கள். பாருங்கள், அங்கே எல்லாம் அரசின் சட்டங்கள் செல்லாது, இறையிலியில் எதுவும் செல்லாது என்பது போன்ற சிறப்பு பொருளாதார மண்டலம் புதிதாக வந்திருக்கின்றன. அவை பிரம்ம தேயங்கள் என்று எழுதினார். அதைபோல எந்த சட்டமும் செல்லாது என்கிறார்கள். (தொடரும்)
பெரியார் முழக்கம் 22082013 இதழ்