மதங்களுக்கு சவால் விடும் அறிவியல்
கடவுள், மதங்கள் காலத்துக்கு பொருந்தி வராதவை என்று பேராசிரியர் வசந்த் நடராசன் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தைப் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம். பார்ப்பனர்கள் பழமைவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது அக்கட்டுரை. அதே ‘இந்து’ ஏட்டில் பல மறுப்புக் கட்டுரைகள் வெளி வந்தன.
அதில், பேராசிரியர் நடராசனின் கடவுள், மத மறுப்பு கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஜிரேந்திர சர்மா என்ற ஆய்வாளர், ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மதம் குறித்து அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது அவரது கட்டுரை. கட்டுரை சுருக்கம் இதுதான்:
“மதத்துக்கும் அறிவியலுக்குமான முரண்பாடுகள் வெடித்து வருகின்றன. இதில் மதம் தொடர்பாக முன்வைக்கப்பட்டு வந்த கருத்துகள் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறுகின்றன. நவீன வாழ்க்கையின் தத்துவங்கள் இரண்டு. ஒன்று சமத்துவம்; மற்றொன்று சுதந்திரம். இரண்டுமே மதத்துக்கு எதிரானவைதான் சமூக மாற்றத்தை மதப் பழமைவாதிகளால் ஏற்க முடியவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் கிறிஸ் தவ மதம் மாற்றங்களை எதிர்த்தது. இப்போது கணினி யுகத்தில் இஸ் லாம் மாற்றங்களை எதிர்க்கிறது. ஜாதி, மதம், பால், இனம், வாழும் நாடு, அல்லது மதம் போன்ற மனிதப் பிரிவுகளில் தனித்துவமான குருதி அடையாளம் எதுவும் கிடையாது. ஜனநாயகம், சமத்துவம் என்ற கொள்கைகள் ‘தங்களுக்கான தனியான அடையாளம்’ என்ற மதக் கோட்பாட்டை தகர்த்துவிட்டன. எந்த ஒரு மதமும் அதன் புனித நூலும் அனைத்து மக்களும் சமமானவர்கள் என்ற கருத்தை முன்வைக்கவில்லை. உண்மையில் ஒவ் வொரு மதமும் அந்த மதத்தைப் பின்பற்றுபவர் களுக்காக மட்டுமே – சொர்க்கத்தையும் ஆன்மிக விடுதலையையும் மோட்சத்தையும் பேசுகிறது. மனித சமூகம் அத்தனையும் உள்ளடக்கி அவர்களுக்கான சிவில் உரிமைகளைப் பேசக்கூடிய ஒரு மதம்கூட இல்லை. அதே போல் பாகுபாடுகள் இல்லாத ஒரு சமூக அமைப்பைக்கூறும் ஒரு மதம் கூட உலகத்தில் கிடையாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கொலை செய்யக் கூடாது என்று கூறும் மதமோ, ஒரு பெண்ணை பாலுறவு வன்முறைக்கு உட்படுத்தக் கூடாது; கல்லால் அடித்து சாகடிக்கக் கூடாது என்று கூறுகிற மதமோ கிடையாது.
பெண்களையும், பலவீனமானவர்களையும் சமஉரிமையோடு மாண்போடு நடத்தும் மனித நேயம், எந்த மதவாதிகளிடமும் இல்லை. நீ ஏழையாகவோ தீண்டத்தகாதவனாகவோ, பெண்ணாகவோ பிறந்தால் அது கடந்த ஜென்மத்தில் செய்த பாவம் என்று நியாயப்படுத்துகிறது, இந்து மத நம்பிக்கை. சட்டம் தடை செய்தாலும் ‘சதி’யைப் போற்று கிறவர்களும், ஜாதி பஞ்சாயத்து நடத்துகிறவர்களும் இந்து தீவிரவாதிகளாக இருக்கிறார்கள். தொண்டு செய்ய வந்த ஆஸ் திரேலிய மருத்துவரை குழந்தை களோடு கொளுத்தியது இந்து தீவிரவாதம்தானே! இந்த கிரிமினல் குற்றங்களை எந்த இந்துப் புனிதத் தலவரும் கண்டிக்கவில்லை. இஸ் லாமிய ‘ஜிகாத்’ ஆதரவற்ற பெண்களை கல்லால் அடித்துக் கொலை செய்கிறது. வங்க தேசத்தில் பெண்களையும் அதன் அதிபர் முஜிபுர் ரஹ்மான் குடும்பத்தையும் கோரமாகக் கொலை செய்தது இஸ் லாமிய மதவாதம் தான். தஸ் லீமா நசிரின் இஸ் லாமியக் கொள்கைகளை விமர்சித்ததற்காக அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதும் அதே மதவாதம்தான். ஆப்கானிஸ் தானில் முதல் பெண் போலீஸ் அதிகாரியாக வந்தவர் மலாலாய் கக்கார்; 40 வயதான அந்தப் பெண், 6 குழந்தைகளுக்குத் தாய். முஸ் லீம்கள் பெரும் பான்மையாக வாழும் ஆப்கானிஸ் தானில் பெண்கள் குழந்தைகள் மீது இழைக்கப்படும் குற்றங்களை அவர் ஆய்வு செய்தார் என்பதற்காக தாலிபான் தீவிரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றார்கள். அரசும் மதமும் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை எந்த மதமும் ஏற்கவில்லை. மேற்குலத்தில் போப்பின் செல்வாக்கு கொடிகட்டி பறந்த போது கிறிஸ் தவ உலகம், இந்தப் பிரச்சினையை கடுமையாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சமூகத்தை மறுகட்டமைப்புக்கு உள்ளாக்கி வரும் அறிவியலின் சவாலை மதத்தின் அடிப்படையிலான அரசியலால் எதிர்கொள்ளவே முடியாது அவர்கள் நிச்சயம் தோற்பார்கள்” – என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.
பெரியார் முழக்கம் 30102013 இதழ்