புனே முடங்கியது

தபேல்கர் வீரமரணத்தைத் தொடர்ந்து, புனேயில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைமை பீடம் செயல்படும் பார்ப்பனக் கோட்டையான புனேயில் தபோல்கருக்கு இரங்கல் தெரிவித்து முழு அடைப்பு வெற்றி பெற்றது. அரசுப் பேருந்து ஓடியதைத் தவிர, புனே நகரமே முடங்கிப் போய், பகுத்தறிவாளருக்கு வீரவணக்கம் செலுத்தியது.

பார்ப்பனர் எதிர்ப்பு

1972இல் சோஷலிஸ்ட் தலைவர் பாபா ஆதவ், கிராமங்களில் பொதுக் கிணறுகளில் தலித் மக்கள் தண்ணீர் எடுப்பதைத் தடுக்கும் ஜாதி வெறிக்கு எதிராக ‘ஒரு கிராமம், ஒரு கிணறு’ இயக்கத்தைத் தொடங்கியது. அதில் தபோல்கர் தீவிரமாகப் பங்கேற்றதைத் தொடர்ந்து பார்ப்பனர்கள், உயர்சாதியினர், மதவெறி சக்திகள் கலவரத்தில் இறங்கினர். அதற்கு எதிர்வினையாக மகாராஷ்டிரா முழுதும் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள் வீறு பெற்றன. இயக்கத்தில் முதல் நபராக களமிறங்கிய தபோல்கர், சதாரா மாவட்டத்தில் ‘இரட்டைக் கிணறு’ தீண்டாமைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். ‘அம்பேத்கர் நடத்திய மகர் குளத்தில் நீர் எடுக்கும் போராட்டமே இதற்கு உந்து சக்தியாக இருந்தது’ என்று அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சமூகப் பணியாளர் சுரேஷ் கிர்புக்கர், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் உயரிய கவுரவ விருதான ‘மகாராஷ்டிரா பூஷன்’ விருதை தபோல்கருக்கு வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று கம்ப்யூட்டர் விஞ்ஞானி விஜய் பச்தர், மராட்டிய முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரின் உன்னதமான தியாகம் வீண் போகக் கூடாது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திலும் சட்டம் வரவேண்டும்

மராட்டிய மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதைப் போல் தமிழ்நாட்டிலும் தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என்று சென்னை கணித விஞ்ஞான நிறுவனத்தின் பேராசிரியர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர். கணித விஞ்ஞானிகள் இரமேஷ் அனிஷ் ஷெட்டி, ஏ.பி.பெல்லியப்பா, மதுரா சிறிபாசு, டி.ஆர். கோவிந்தராஜன், பி. சங்கரன், பாலா. சதிபாலன், சுந்தர் உள்ளிட்ட 22 கணித பேராசிரியர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தபோல்கர் கொலைக் குற்றவாளிகளைக் கண்டறிவதில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பகுத்தறிவுப் பிரச்சாரத்தால் தங்கள் மத உணர்வு புண் படுவதாகக் கருதுவோர் அதை கருத்துகளாக வெளிப்படுத்த வேண்டும். மதத் தீவிரவாதம் ஆயுதம் தூக்குவதைக் கண்டிக்க முன்வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

திமிர் அறிக்கை

கொலையில் சந்தேகப்படும் ‘சனாதன சங்கம்’ என்ற பார்ப்பன அமைப்பின் தலைவர் அபய்வர்த்தக் என்பவர், இந்தக் கொலையில் தங்களுக்கு தொடர்பில்லை என்று மறுக்கிறார். அத்துடன் அவர் எந்தக் கடவுளுக்கு எதிராக செயல்பட்டாரோ அதே கடவுள், அவருக்கு நல்ல சாவை கொடுத்து விட்டார். இப்படி உடனடியாக சாவது என்பது கடவுளின் செயலே என்று கோவா மாநிலம் பனாஜியி லிருந்து திமிரோடு அவர் அறிக்கை விடுத் துள்ளார்.

 

 

மதவெறி துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பகுத்தறிவு போராளி

டாக்டர் தபோல்கருக்கு வீரவணக்கம்!

மக்களிடம் மூடநம்பிக்கையை எதிர்த்து, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வந்த பகுத்தறிவுப் போராளி, சமுதாய சிந்தனையாளர் நரேந்திர தபோல்கர் (65) மதவெறியின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகி வீரமரணமடைந்தார். ஆக. 20 ஆம் தேதி செவ்வாய் கிழமை புனேயில் ஓம் கரேஷ்வர் பாலத்தில் காலை நடைப்பயிற்சி மேற் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் அவரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தினர். இந்தியாவில் பகுத்தறிவுவாதி ஒருவர், துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியான முதல் சம்பவம் இதுவேயாகும். அருகே, ஓம் கரேஷ்வர் கோயில் உள்ளது. அந்தக் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் காமிராவில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி யுள்ளது என்றாலும், படப்பதிவு தெளிவாக இல்லை என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

வீரமரணமடைந்த தபோல்கர், தனது மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு, ‘மகாராஷ்டிரா ஆந்திரஷ்ரதா நிர்மூலன் சமீதி’ என்ற அமைப்பை உருவாக்கி, 1989 ஆம் ஆண்டு முதல் மக்களிடையே மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவு பிரச்சாரம் செய்து வந்தார். சாமியார்கள் மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மகாராஷ்டிர மாநிலம் முழுதும் அவர் நடத்திய பகுத்தறிவுப் பிரச்சாரத்தை சகித்துக் கொள்ள முடியாத, ‘சனாதன் பிரபாத்’, ‘இந்து ஜனசக்ருதி சமிதி’ போன்ற மதவெறி அமைப்புகள் அவருக்கு கொலைவெறி மிரட்டல்களை விடுத்து வந்தன. அவர் நடத்திய கூட்டங்களிலும் கலவரம் செய்து வந்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட நாளன்று பிற்பகல் அவர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். மகாராஷ்டி ராவில் வினாயக சதுர்த்திக்கு தயாரிக்கும் வினாயகர் சிலைகள் சுற்றுச் சூழலை பாதிக்கும் ரசாயனங் களில் தயாரிக்கக் கூடாது என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம், அது!

தபோல்கர் நேரடியாக கடவுள், மத எதிர்ப்புப் பரப்புரை செய்யவில்லை. கடவுள், மூடநம்பிக்கை யின் பெயரால் நடக்கும் சுரண்டல் மோசடி களையே எதிர்த்து வந்தார். அவருக்கு மனைவியும், ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். அவ்வப் போது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பிற்போக்கு சக்திகளிடமிருந்து கொலை மிரட்டல் வந்து கொண்டே இருந்தது. ஆனால், தனக்கு போலீஸ் பாதுகாப்புக் கேட்க அவர் மறுத்து விட்டார். ‘அறியாமையை எதிர்த்து நான் நடத்தும் போராட்டத்துக்கு ஆயுதங்கள் தேவை இல்லை’ என்று கூறினார்.

கிராமங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் அவரது பகுத்தறிவு பரப்புரையின் தாக்கத்தால் வலிமையான ஆதரவுத் தளம் உருவானது. பார்வையற்றவர்களுக்கு தனது அற்புத சக்தியால் பார்வை உண்டாக்க முடியும் என்று ஏமாற்றி வந்த ஒரு மனிதருக்கு நேரில் தன்னுடன் விவாதிக்க தபோல்கர் சவால் விடுத்தார். அதுதான் அவர் இறங்கிய முதல் களப் பணி. ‘கடவுள் அவதாரம்’ என்று அழைத்துக் கொண்ட அந்த மோசடிப் பேர்வழி ஏராளமான ஆதரவாளர்களுடன் கிராமத்துக்கு திரண்டு வந்தார். ஆனால், ‘கடவுள் அவதாரத்தின்’ மோசடியை தபோல்கர் அம்பலப் படுத்தினார். மூடநம்பிக்கையை பரப்பி வந்த நிர்மலா தேவி, மற்றும் ஆன்மிகப் போர்வையில் வலம் வந்த நரேந்திர மகராஜ் போன்றவர்களுடன் நேருக்கு நேர்  மோதி அம்பலப்படுத்தினார்.

மூடநம்பிக்கையை மட்டுமல்லாது, ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பெண்கள் உரிமை களுக்கும்  அவர் போராடினார். அகமதாபாத் நகரில் ஷானி ஷிங்னப்பூர் கோயிலில் பெண்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. 2000 ஆம் ஆண்டில் பெண்கள் கோயில் நுழைவுக்காக பெருமளவில் மக்களைத் திரட்டிப் போராடினார். பா.ஜ.க., சிவசேனா போன்ற மதவெறி சக்திகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பெண்கள் கோயில் நுழைவுக்கு உரிமையைப் பெற்றார். அவர் நடத்திய பத்திரிகை யாளர்கள் சந்திப்பில் கலகம் செய்வதையே மத வெறி பிற்போக்கு சக்திகள் வழக்கமாகக் கொண் டிருந்தன.

சுட்டுக் கொல்லப்படுவதற்கு முதல் நாள் ‘சகியாத்ரி’ என்ற தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் ‘ஜாதி பஞ்சாயத்துகளை’ தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். ஜாதிக்கு வெளியே காதல் திருமணம் செய்ய விரும்பிய ஒரு பெண்ணை, அந்தத் தந்தையே கொலை செய்துவிடவேண்டும் என்று ஜாதி பஞ்சாயத்து உத்தரவிட கும்கர்க்கார் என்ற அந்த தந்தையே நாசிக்கில் மகளை கொலை செய்து விட்டான். இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விவாதத்தில் பேசிய தபோல்கர், ஜாதி மறுப்புத் திருமணத்தை ஆதரித்ததோடு, ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவாக தாம் அண்மையில் நடத்திய மாநாடு குறித்தும் கருத்துகளைப் பதிவு செய்தார்.

அவரது ‘சமிதி’க்கு மகாராஷ்டிரா, கோவா மற்றும் கருநாடகத்தில் 200 கிளைகள் செயல் பட்டுக் கொண்டிருந்தன. சோஷலிச தலைவர் டாக்டர் பாபா ஆதவ் தலைமையையேற்று நடத்திய ‘ஒரு கிராமம்; ஒரு கிணறு’ என்ற இயக்கத்தில் பங்கேற்றது முதல் அவரது பொது வாழ்க்கைத் தொடர்ந்தது. ‘சாதனா’ என்ற இதழையும் அவர் நடத்தினார். மக்களை பகுத்தறிவாளர்களாக்க எவரும் செய்ய முன் வராத தொண்டை செய்து, அதற்காக உயிரை அர்ப்பணித்த பகுத்தறிவுப் போராளிக்கு கழகம் வீரவணக்கம் செய்கிறது.  ட

பெரியார் முழக்கம் 29082013 இதழ்

You may also like...