தலையங்கம்: கமலேஷ் சர்மா நடத்தும் காமன்வெல்த் மாநாடு

கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்று, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைப் பேச வேண்டுமே தவிர, அதைப் புறக்கணிப்பது சரியாகாது என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு இலங்கை அரசு, தனக்குத் தானே நியமித்துக் கொண்ட ‘கற்ற பாடம்; சமாதானப்படுத்தல்’ என்ற விசாரணை ஆணையம் – ஆண்டுகள் ஓடியும் எந்த விசாரணையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. 13 ஆவது சட்டத்திருத்தத்தில் மாகாண கவுன்சில்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலஉரிமை மற்றும் காவல்துறையை அமைத்துக் கொள்ளும் உரிமைகளையும் நீதிமன்றம் வழியாக இலங்கை அரசு பறித்துக் கொண்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் முறியடிக்கப்பட்டுவிட்டது. சிங்களர்களின் இன வெறியை திருப்திப்படுத்துவதே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஆட்சியிடம் இனியும் பேசுவதற்கு என்ன இருக்கிறது?

வடக்கு மாகாணத்தின் முதல்வராக தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட விக்னேசுவரன், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று கூறும்போது, தமிழகத்தில் மட்டும் ஈழ ஆதரவாளர்கள் எதிர்ப்பது ஏன் என்ற மற்றொரு கேள்வி எழுப்பப்படுகிறது. முதல்வர் விக்னேசுவரன் கருத்து, இதில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதே உண்மை. முதல்வராக தேர்வு பெற்ற அன்று அவர் அளித்த பேட்டியில், ‘இந்தியா காமன்வெல்த்தைப் புறக்கணித்து, எதிர்ப்பைக் காட்டுவதற்கும், பங்கேற்று எதிர்ப்பைக் காட்டுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதால், எதை மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்தியாவே முடிவு செய்ய வேண்டும்’ என்றே கூறினார்.

இலங்கை அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நடந்த தேர்தலில் பங்கேற்று, இலங்கைக் குடிமகன் என்ற நிலையில் உள்ள ஒரு முதல்வர் பதவி ஏற்ற நாளிலேயே இலங்கை அரசை தூக்கி எறிந்து பேசிட முடியாது. சர்வதேச சமூகமும் இந்தியாவும் முன்மொழிந்த கருத்தை ஏற்று, தமிழ் தேசியக் கூட்டணி தேர்தலில் பங்கேற்று, மக்கள் வாக்குகளைப் பெற்று, ஈழத் தமிழ் மக்களின் சட்ட அதிகாரம் படைத்த பிரதிநிதிகளாக சர்வதேச சமூகத்தின் முன் நிற்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நியாயமான அரசியல் தீர்வுகளை வாழ்வுரிமைகளை வலியுறுத்தும்போது அவற்றுக்கு இலங்கை அரசு எந்த அளவுக்கு முகம் கொடுக்கப் போகிறது என்பது தான் இப்போது அர்த்தம் பொதிந்த  கேள்வி. அரசியல் தீர்வுக்கு தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், இராஜ பக்சேயின் இனவெறி அரசு வாக்குறுதியை நிறைவேற்றுமா என்ற கேள்விக்கான விடையிலிருந்துதான் ஈழத் தமிழர் பிரச்சினை அடுத்தக் கட்டம் நோக்கி நகரப் போகிறது. இந்தப் புரிதலோடு முதல்வர் விக்னேசுவரன் முன்வைக்கும் கருத்துகளைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, அவரது வார்த்தைகளுக்கு மட்டும் அர்த்தம் தேடிக் கெண்டிருப்பதில் பயனில்லை.

இந்த மாநாட்டுக்குப் பிறகு, ரத்தக்கறை படிந்த இராஜபக்சே, காமன்வெல்த் நாடுகளின் தலைவராக இரண்டு ஆண்டுகளுக்கு முடிசூட்டிக் கொள்ளப் போகிறார். இதன் மூலம் போர்க் குற்றம், மனித உரிமை மீறல் விசாரணைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற உள்நோக்கத்தோடு காய்கள் நகர்த்தப்படுகின்றன.

காமன்வெல்த் மாநாட்டின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா என்ற இந்தியாவைச் சார்ந்த பார்ப்பனர். 2011 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் மாநாட்டில், அடுத்த மாநாட்டை கொழும்பில் நடத்த ஆஸ் திரேலியா, கனடா நாடுகள் எதிர்த்தபோது, இந்த பார்ப்பன அதிகாரிதான் கொழும்பில் நடத்துவதில் உறுதியாக இருந்து அதற்கான பூர்வாங்கப் பணிகளையும் மேற்கொண்டார். இந்த முயற்சியில் இந்திய ஆட்சியின் கரங்களும் மறைவாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். இராஜபக்சேயின் போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்களை மறைக்கும் அறிக்கைகளை இந்த சர்மா தயாரித்தார். அது மட்டுமல்ல; இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஷிரானி பண்டார நாயகாவின் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து, பதவியிலிருந்து நீக்கிய ராஜபக்சேயின் ‘நீதித் துறை பயங்கர வாதத்தை’யும் சர்வதேச கண்டனப் பார்வையிலிருந்து தப்பிக்க வைத்தவரும், இந்த சர்மா தான். மாகாண கவுன்சிலுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிராக ராஜபக்சே மேற்கொண்ட நடவடிக்கையை (சர்வ அதிகாரத்துடன் தமிழர் பகுதியில்  தனது தம்பி கோத்தபயே ராஜபக்சேயை பதவியில் அமர்த்தும் முயற்சி) – அந்த நீதிபதி சட்ட விரோதமானது என்று தள்ளுபடி செய்ததே  நீதிபதி செய்த குற்றம். இது குறித்து கமலேஷ் சர்மா, இரண்டு சட்ட நிபுணர்களை நியமித்து கருத்துக் கேட்டார். அந்த நிபுணர்களின் அறிக்கை – ராஜபக்சேவுக்கு எதிராகவே இருந்ததால், சர்மா அந்த அறிக்கையை வெளியிடாமல் மறைத்ததோடு காமன்வெல்த் நாட்டின் உறுப்பினர்கள் கேட்டதற்குப் பிறகும் வழங்க முன்வரவில்லை.

காமன்வெல்த் அமைப்பு 1991 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஹராரே பிரகடனத்தின்படி ‘ஜனநாயகம் நல்லாட்சி முறை மற்றும் மனித உரிமைகளைப் பின்பற்றாத நாடுகளை தற்காலிகமாக நீக்கி வைத்திருக்கிறது. அதற்கான உரிமையும் அதற்கு உண்டு. ஒப்பீட்டளவில் இலங்கையை விட மிகச் சிறிய குற்றங்களைச் செய்த ஜிம்பாவ்வே, பிஜி நாடுகள், தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளன. 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத், ஜனநாயகம் மனித உரிமைகளை காமன்வெல்த் அமைப்பின் கொள்கையாக உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு நேர் எதிரான ஆட்சிதான் இலங்கையில் நடக்கிறது என்பதை அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை நேரில்  சென்று பார்வையிட்டு, அய்.நா. மனித உரிமைக் குழுவுக்கு அறிக்கையும் அளித்துள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் சர்வதேசம் உருவாக்கிக் கொண்ட நெறிமுறைகள், கோட்பாடுகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டு, கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்தும் கமலேஷ் சர்மா, இராஜபக்சேயின் அடிமை போல செயல்படுகிறார் என்று கனடா நாட்டின் பிரதமர் கூறியிருப்பதை சுட்டிக் காட்ட வேண்டும். அதிகாரங்களின் மய்யங்களில் அக்டோபஸ் களாக இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கமும் அதற்கு ஒத்திசைவாக கரம்கோர்த்து நிற்கும் இந்திய ஆட்சியாளர்களையும் தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்.

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கப் போகிறதா? அல்லது தனது பிரதிநிதிகளை மட்டும் அனுப்பி தமிழர்களிடம் ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றப் போகிறதா?

இந்தக் கேள்விகளில் தமிழர்களின் உணர்வுகளும் இணைந்தே இருக்கிறது.

பெரியார் முழக்கம் 23102013 இதழ்

You may also like...