தலையங்கம் ஜாதியும்-ஜாதிப் பேரணிகளும்!

அலகாபாத் உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள் நடத்தும் ஜாதிப் பேரணிகளுக்கு தடை விதித்துள்ளது. பார்ப்பன  ஆதிக்க ஜாதிகள் பேரணி நடத்துவதும், தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோர் பேரணி நடத்துவதும் வேறு வேறானது. முன்னது ஜாதி ஆதிக்கப் பேரணி; பின்னது உரிமைகளுக்கான பேரணி.

எப்படி ஏழ்மை ஒழிப்பு என்பது ஏழைகளின் ஒழிப்பாகிவிடக் கூடாதோ, அதேபோல் ஜாதி ஒழிப்பு என்பதும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை ஒழிப்பாகிவிடக் கூடாது. உ.பி.யில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பார்ப்பனர்களுக்காக மாவட்டந்தோறும் மாநாடுகளை நடத்தி இறுதியில் மாநில மாநாட்டை லக்னோவில் நடத்தியுள்ளது. பார்ப்பனர்கள் தங்களின் ‘ஜாதித் திமிர்’ அடையாளங்களோடு விபூதி, நாமம், பூணூல் கோலங்களோடு பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டு மாநாட்டுக்கு திரண்டதாக செய்திகள் கூறுகின்றன.  மாநாட்டில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் 21 நாடாளு மன்றத் தொகுதிகளுக்கான பார்ப்பன வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவுக்கு இவ்வளவு அதிக எண்ணிக்கையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

சமாஜ்வாடிக் கட்சியைச் சார்ந்த இராம்கோபால் யாதவ் தொடர்ந்த பொது நலன் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக அளித்த தீர்ப்பு அரசியல் கட்சிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது உண்மை. ஜாதியை தேர்தல் சந்தர்ப்பவாத நலனுக்காக அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் ஆணைய விதிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, உயர்த்திப் பிடித்து விடுகின்றன. எனவே அரசியல் கட்சிக்கு இப்படி ஒரு கடிவாளம் தேவை என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். அதே நேரத்தில் உரிமைக்காகவும் ஜாதிய அடிமைத்தனத்தையும் எதிர்த்து நிற்கும் தாழ்த்தப்பட்ட மிகவும் பின் தங்கிய சமூகப் பிரிவினரின் உரிமைகளை இத்துடன் இணைத்துப் பார்க்கக் கூடாது.

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, சமாஜ்வாடிக் கட்சிக்குள் ஜாதி வாரியாக அமைத்திருந்த 14 பிரிவுகளை உடனடியாகக் கலைத்து அக்கட்சி அறிவித்திருக்கிறது. அதில் பார்ப்பனப் பிரிவும் ஒன்று. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, இனி, ஜாதிப் பேரணிகளை நடத்துவதற்கு பதிலாக சகோதரத்துவ மக்கள் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இவையெல்லாம் வரவேற்க வேண்டிய மாற்றங்களாகும்.

ஜாதி-மதங்களைக் கடந்து அனைத்து ஜாதி-மதப் பிரிவினரையும் ஒரு குடையின் கீழே இணைத்து வைப்பதுதான் அரசியல் கட்சியாக இருக்க முடியும். ஆனால், அதற்கு மாறாக, அரசியல் கட்சிகளே ஜாதி மதப் பிளவுகளை அடையாளங்களாக பூசிக் கொண்டு நிற்பது ‘சமத்துவம்’ என்ற உண்மையான ஜனநாயக அடையாளத்துக்கு நேர் எதிரானதாகும். வேட்பாளர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள்கூட எண்ணிக்கையில் அதிகம் உள்ள ஜாதி ஆதிக்கவாதிகளுக்குத்தான் கூடுதலாக கிடைக்கிறது. பார்ப்பனர் எண்ணிக்கையில் மைனாரிட்டிகளாக இருந்தாலும் அவர்களின் சமுதாய, அரசியல், ஊடக செல்வாக்கும் – அதன் ஆதிக்கமும் ஏனைய பிரிவினரை, தங்களிடம் மண்டியிடச் செய்து வருகிறது. இதில் உண்மையிலேயே ஜாதி ஒழிப்பு நடைமுறையில் எதார்த்தமாக்கப்பட வேண்டுமானால், இப்படி சமுதாய அரசியல் செல்வாக்கோடு கொடிகட்டிப் பறக்கும் பார்ப்பனிய ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமாக்கப்பட்டு அவர்களிடம் குவிந்துள்ள சமுதாய அரசியல் அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டும். இதற்குத்தான் பார்ப்பனிய மேலாண்மையை உயர்த்தும், இந்துமதம், சடங்குகள், வழிபாட்டு உரிமைகள், ஜாதியமைப்புகளையும் எதிர்த்த பெரியார், அதேபோழ்து ஜாதிய சமநிலைக்கும், சமூக உரிமைகளுக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஒதுக்கீட்டு உரிமைகளுக்கும் போராடினார். ஜாதி ஒழிப்பு என்பது மேற்குறிப்பிட்ட இரண்டு பிரச்சினைகளையும் தீவிரமாக்குவதில்தான் அடங்கி யிருக்கிறது என்பதை உணர வேண்டும்.

ஜாதி பேரணிகளை தடை செய்யும்போது இந்து மத அடிப்படை யில் இயங்கும் அமைப்புகளையும் தடை செய்ய வேண்டாமா என்ற நியாயமான கேள்வியை மாயாவதி எழுப்பியுள்ளார். அரசியல் சட்டம் வழங்கியுள்ள மத உரிமையை அரசியலுக்குப் பயன்படுத்துவது எப்படி சரியாகும்? ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் மதப் போர்வையில் அரசியல் நடத்துவது சமூகத்தைப் பிளவுபடுத்துவது மட்டுமல்ல; ஜாதிய அமைப்புக்கும் உரமூட்டி வளர்ப்பதாகும். எனவே ஜாதியத்தின் வேர் மதம் என்றாகிவிட்ட நிலையில் மதத்தின் அரசியலையும் தடைப்படுத்தியாக வேண்டும்.

அதே நேரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளும் சட்டங்களும் இந்த சமூகப் பிரச்னைக்கு நிலையான தீர்வைக் கண்டுவிட முடியாது. மக்கள் மன்றத்தில் ஜாதி மதத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான இயக்கம் நடத்தப்பட்டு, மக்கள் அதன் நியாயங்களை உணரச் செய்ய வேண்டும். ஜாதி-மதமற்ற வாழ்க்கைக்கான பொருளியல் அடித்தளங்களை உருவாக்கும் திட்டங்களை ஆட்சி முன்வைக்கப்பட வேண்டிய அவசியமும் இருக்கிறது.

புத்தர், பூலே, பெரியார், அம்பேத்கரின் பார்ப்பனிய ஜாதி ஒழிப்பு சிந்தனைகளை மக்கள் மன்றத்தில் வேரூன்றச் செய்து, இதற்கு எதிரான ஆதிக்க சக்திகள் நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடும் போதுதான் உண்மையான ஜாதியற்ற சமூகத்தைப் படைக்க முடியும்.

பெரியார் முழக்கம் 18072013 இதழ்

You may also like...