பார்ப்பனர் எச்சில் இலையும் ‘புண்ணிய’மானது!
பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலை மீது ‘சூத்திரர்கள்’ உருண்டு வழிபாடு செய்தால், நோய் தீர்ந்து, புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை , இப்போதும் கருநாடகத்தில் தொடருகிறது. மங்களூர் அருகே உள்ள குக்கே சுப்ரமணியசாமி கோயிலில் ஆண்டுதோறும் ‘மடே° நானா’ என்ற பெயரில் நடக்கும் இழிவை எதிர்த்து பிற்படுத்தப்பட்ட ‘இந்து’ மடாதிபதிகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அவமானத்தை தலைகுனிய வைக்கும் இழிவை நிறுத்தக்கோரி மங்களூர் துணை ஆளுநர் அலுவலகம் எதிரில் கடந்த சனிக்கிழமை டிசம்பர் 7 ஆம் தேதி ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடந்தது. கருநாடகாவைச் சார்ந்த வேதிக் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு, பார்ப்பன இழிவுக்கெதிராக நடத்திய இந்தப் போராட்டத்தில், சித்தே°வர மடாதிபதி பசவராஜா தேவாரூ, மைசூர் பேட்டாட புரா மடாதிபதி சிரச்ரேட்டி சிவாச்சார்ய சுவாமி, கருநாடகா சமூகநலத் துறை அமைச்சர் எச். ஆஞ்சநேயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கண்டித்துப் பேசினர்.
கடந்த பல ஆண்டுகளாகவே இதை எதிர்த்து இயக்கங்கள் நடந்து வருகினற்ன. ஆனாலும், பார்ப்பன அடிமையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள், பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலையில் உருண்டு, ‘அங்கப் பிரச்சனம்’ செய்து தோல் வியாதிகளைப் பற்றி கவலைப்படாமல் அதை ‘புண்ணியமாக’க் கருதி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து எதிர்த்துவரும் சிவராமு என்பவரை கடந்த ஆண்டு ஆர்.எ°.எ°. பார்ப்பனர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். மாநில அரசு இதைத் தடை செய்யாமல், பலத்த போலீ° பாதுகாப்பு தந்து வருகிறது. கருநாடக முதல்வர் பகுத்தறிவாளர் அவராவது இந்த பார்ப்பன இழிவுச் சடங்குக்கு தடை போடுவாரா? மாநில சமூக நலத்துறை அமைச்சர் பட்டினிப் போராட்டத்தில் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தாலும் சட்டத்தினால் இதைத் தடுக்க முடியாது என்றும் மக்களிடம் மனமாற்றம் வேண்டும் என்றும் பேசியுள்ளார். பார்ப்பனர் இழிவை நியாயப்படுத்தும் ஒரு சடங்கை தடுக்க ஆட்சியே அஞ்சுகிறது என்பதையே இது உணர்த்துகிறது.
பெரியார் முழக்கம் இதழ் 19122013