‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தலையங்கம் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்
‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு எழுதியுள்ள தலையங்கத்தின் தமிழாக்கம்:
பகுத்தறிவு கொள்கைகளுக்காக மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கம் நடத்திய நரேந்திர தபோல்கர், மதத் தீவிரவாதி களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அடுத்த இரண்டு வாரங் களுக்குள்ளேயே அசாம் மாநிலத்தில் கோச்ராஜ்கர் மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமத்தில் அக்கிராம மக்கள் பேய், பில்லி சூன்யம் வைத்ததாக சந்தேகித்து இரண்டு பேரை கொலை செய்து விட்டனர். தபோல்கர் சுட்டுக் கொல்லப் பட்டதால், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வரும் கட்டா யத்துக்கு மகாராஷ்டிர அரசு உள்ளானது. அதுபோலவே அசாம் முதல்வர் தருண் கோகோயும் பேய்-பில்லி சூன்யத்தை குற்றமாக்கும் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக உறுதியளித்துள்ளார்.
ஆனாலும், இதுபோன்ற குற்றம் அசாம் மாநிலத்தில் மட்டும் நிகழவில்லை. சமு தாயத்தில் பரவியுள்ள இந்த மூடநம்பிக்கை நோயை ஒழிக்க, மாநில அரசுகளுடன் ஆலோசித்து மத்திய அரசே, ஒரு மாதிரி சட்டத்தை தயாரிக்க வேண்டும். ‘பேய் பில்லி சூன்யம்’ வைத்தவர்கள் என்று முத்திரை குத்தி, 2008 ஆம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளில் 17 மாநிலங்களில் 768 பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மனநிலை பாதிப்புற்ற அல்லது உடல் வளர்ச்சி குன்றியவர்களை அறியாமையில் மூழ்கியுள்ள கிராம மக்கள், ‘பில்லி சூன்யம்’ வைத்து அழிக்கப் பார்க்கிறார்கள் என்ற சந்தேகத்தில் இத்தகைய கொலைக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களேகூட கிராம மக்களுடன் சேர்த்து சதி செய்து குடும்ப உறுப்பினர் களை கொலை செய்து விடுகிறார்கள். ஹார்மோன் மாற்றம், உளவியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வழமைக்கு மாறாக நடந்து கொள்ளும் பெண்களை குடும்ப உறுப்பினர்களே ‘பேய்-பில்லி சூன்யக்காரர்களாக’ சித்தரித்து விடு கிறார்கள் டெல்லியில் உள்ள சமூக ஆய்வு மய்யம் இந்த உண்மைகளை வெளிப் படுத்தியுள்ளது.
சில மாநிலங்களில் ‘பேய்-பில்லி சூன்யம்’ என்ற நம்பிக்கைகள் சட்ட பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளன என்றாலும் கூட, அந்தச் சட்டங்களை அமுல்படுத்த முடியவில்லை. காரணம் மக்களிடையே காலம் காலமாக ஊறிப் போயுள்ள நம்பிக்கைகள் பழமையான சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் தான். எந்த ஒரு பெண் மீதும் ‘பேய்-பில்லி சூன்யக்காரி’ என்று முத்திரைக் குத்துவதை தண்டனைக்குரிய குற்றம் என்று ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் இருக்கிறது. ஆனால், அது காகித அளவிலே முடங்கிவிட்டது. 2001 ஆம் ஆண்டிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பில்லி சூன்யம் தடைச் சட்டம் அமுலில் உள்ளது. ஆனால், சட்டம் குற்றங்களைக் குறைப்பதில் தோல்வி அடைந்துவிட்டது.
கடந்த ஆண்டு, ஒரிசா உயர்நீதி மன்றமும், பில்லி சூன்யத்தைக் குற்ற மாக்கும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தியது. இந்த நிலையில் மத்திய அரசே இப்படி ஒரு சட்டம் கொண்டு வரவேண்டிய அவசியமிருக்கிறது. அப்படி சட்டம் கொண்டு வந்தால் மட்டும் போதாது. தபோல்கர் விரும்பியதைப் போல இந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம் மக்களி டம் நடத்தப்பட வேண்டும். அதற்கு ஆட்சியும் ஆதரவு காட்ட வேண்டும். அப்போது தான் எட்டாம் நூற்றாண்டு களில் தொடங்கிய இந்த மூடப் பழக்கத் திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!
– ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தலையங்கம் (செப். 6, 2013)
பெரியார் முழக்கம் 12092013 இதழ்