வினாக்கள்… விடைகள்…

சில நேரங்களில் நாம் தவறு செய்கிறோம்; சில நேரங்களில் நீதிமன்றங்களும் தவறு செய்கின்றன. தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பதவி பறிபோகும் என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தவறை, இப்போது நாம் சரி செய்கிறோம்.   – சட்ட அமைச்சர் கபில்சிபல்

இப்போது நீங்கள் செய்த தவறை ராகுல் காந்தி சரி செய்துள்ளார். ராகுல் செய்த தவறுக்காக சோனியா, மன்மோகனை சரி செய்து வருகிறார். அட போங்கப்பா, நீங்களும் உங்க தத்துவமும்!

முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் காந்தி சிலைக்கு மரியாதை  செலுத்த வரும் பொது மக்களை தடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.  – செய்தி

காந்தி என்பவரும் ஒரு முக்கிய பிரமுகர் தான் என்பதை காவல்துறைக்கு புரியும்படி நன்றாக எடுத்துச் சொல்லி யிருந்தால் இந்தத் தவறு நடந்திருக்காது. பரவாயில்லை, விடுங்கள்.

ஒரு மாத காலத்துக்குள் இந்தியாவிலிருந்து சுமார் 1350 தகவல்களை அமெரிக்கா திருடியுள்ளது.          – செய்தி

இந்தத் தகவலையும் தகவல் உரிமை ஆணையம் தான், தெரிவித்துள்ளதா?

காஷ்மீர் மாநிலத்தில் – அமைதி, மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுவதற்காகவும் மக்கள் தீவிரவாதி களிடமிருந்து விலகியிருப்பதற்காகவும் அமைச்சர் களுக்கு இராணுவம் பணம் தருகிறது.   – இராணுவ தளபதி வி.கே.சிங்

இதுகூட நல்லா இருக்கே. இனி, இராணுவத்துக்கு நிதி ஒதுக்காம நேரடியா, ‘அமைதி’க்கும், ‘நல்லிணக்கத் துக்கும்’ பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிடுங்க!

இந்த ஆண்டில் நடந்த மதக் கலவரங்களில் இறந்தவர் களில் 66 பேர் முஸ்லீம்கள்; 41 பேர் இந்துக்கள்.  – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

மதம் இறந்து போயிருந்தால், பாவம் இந்த மனிதர்கள் உயிருடன் இருந்திருப்பார்கள்.

எனது மனைவிக்குப் பயந்து புகை பிடிக்கும் பழக்கத்தை 6 ஆண்டுகளாக நிறுத்தி விட்டேன்.    – ஒபாமா

திருமணம் நடந்த காலத்திலேயே இந்த ‘பயம்’ வந்திருக்க லாமே, சார்?

செப்.28, ‘உலக வெறி நாய்க்கடி தினம்’, சென்னை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.  – செய்தி

வெறி நாய்க்கடியை பிறகு பார்க்கலாம். முதலில் இந்த கொசுக்கடிக்கு ஏதாவது உலக விழிப்புணர்வு நடத்துங்கள்! இந்த கொசுக்கடியை தாங்க முடியல்லே நாராயணா!

குடும்ப அமைப்பின் அச்சாணியாக இருப்பதுதான் திருமணம். எனவே திருமணம் இரண்டு நபர்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல.   – மருத்துவர் இராமதாசு

நியாயம் தான்! திருமணம் செய்து கொள்ளும் இரண்டு நபர்களுமே குடும்பம் நடத்தத்தான் விரும்புறாங்க! அந்த அச்சாணிய நீங்க ஏன் கழட்டிவிட துடிக்குறிங்க, டாக்டர்?

தேர்தலில் போட்டியிட குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு தர வேண்டும்.   – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இதெல்லாம் நியாயமில்லை. இந்த தமிழ்ச் சமூகமே தனது குடும்பமாகக் கருதுவோர், என்ன செய்வதாம்?

சாமியார்கள், பாலியல் குற்றங்கள் செய்வதைக் கண்டித்து உ.பி.யில் ஒரு சாமியார், தனது ஆண் உறுப்பை வெட்டி எறிந்தார்.  – செய்தி

இப்படியும் ஒரு ‘நேர்த்திக் கடன்’ இருக்குதோ, ‘சாமி’!

தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்ப வில்லையானால் வாக்குப் பதிவு எந்திரத்தில் எதிர்ப்பு ஓட்டை பதிவு செய்ய தனி ‘பட்டன்’ அமைக்க வேண்டும். – உச்சநீதிமன்றத் தீர்ப்பு

வாக்காளர்களுக்கு அமோக வெற்றி!

பெரியார் முழக்கம் 03102013 இதழ்

You may also like...