தலையங்கம் வடக்கு மாகாண தேர்தல் முடிவுகள்

25ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்தில் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்று மாகாண நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டணி. ஓய்வு பெற்ற இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி சி.வி. விக்னேசுவரன் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். ராஜபக்சேயின் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 7 இடங்களையும் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றி யுள்ளன.

இது இலங்கையை ஆளும் ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக தமிழர்கள் வழங்கிய தீர்ப்பு என்பதில் இரண்டு வித கருத்துகளுக்கு இடமில்லை; போருக்குப் பிறகு ராஜபக்சே தமிழர் பகுதியில் மேற்கொண்ட ‘புனரமைப்பு’ நட வடிக்கைகளை ஊதிப் பெருக்கியும் அரசு செயல்பாடுகளால் தமிழர்கள் ராஜபக்சே ஆட்சியின் மீது கொண்டிருந்த வெறுப்பு குறைந்துவிட்டது என்றும் திட்டமிட்டு சில பார்ப்பன ஏடுகள் பரப்பிய கருத்துகள் உண்மையல்ல என்பதையும் இத்தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த மாற்றம் தமிழர் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கொண்டு வரப் போவதும் இல்லை என்பதும் மாகாண கவுன்சிலின் அதிகாரங்கள் முழுமையாக பறிக்கப்பட்ட நிலையில் இலங்கை அரசின் பிரதிநிதியான ஆளுநர் கண்காணிப்பின் கீழ் தான் மாகாண ஆட்சி செயல்பட வேண்டும் என்பதும் உண்மை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் – தமிழ் ஈழ விடுதலைக்காக இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கியப் போராட்டம் நடத்தியபோது தமிழ் ஈழத்தையும் விடுதலைப்புலிகள் போராட்டத்தையும் நாம் முழுமையாக ஆதரித்தோம். இந்தியா உள்ளிட்ட சர்வதேச சூழ்ச்சிகளால் அந்தப் போராட்டம் முறியடிக்கப்பட்டது.

ஆயுதப் போராட்டத்தின் நோக்கமே அரசியல் இலக்கை விரைவுபடுத்துவது தான். ஆயுதப் போராட்டம் மவுனித்த நிலையில் போராட்டக் களம் அரசியலை மய்யமாகக் கொண்டே இயக்க வேண்டிய நிலை உருவானது. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் அரசியல் களம் நோக்கி ஈழத் தமிழர் பிரச்சினையை கொண்டுச் செல்லும் களப்பணி களிலேயே இறங்கியுள்ளனர்.

இப்போது வடக்கு மாகாணத்தில் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி, தமிழர்களுக்காக பேசக் கூடிய அதிகாரத்தையும் உரிமையையும் பெற்று நிற்கிறது. தமிழ் ஈழம் என்ற கோரிக்கையோடு இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் கட்சிகள் இயங்குவதற்கு அந்நாட்டில் தடை போடப்பட்டுள்ள நிலையில் ‘ஒன்றுபட்ட இலங்கை’ என்ற கோட்பாட்டை ஏற்றுத்தான் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனாலும் தந்தை செல்வா காலத்திலேயிருந்து அங்கு நடைபெற்ற தேர்தல்களில் தமிழர்களின் வாக்குரிமையை தமிழ் ஈழம் என்ற இலக்கை நோக்கியே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதன் நீட்சியாகவே இந்த தேர்தல் முடிவுகளையும் நாம் பார்க்க வேண்டும்.

இப்போது மக்களுக்கான புனர்வாழ்வுத் திட்டங்கள், அரசியல் உரிமைகள் என்ற இரண்டு பிரச்சினைகள் புதிய ஆட்சியின் முன் சவாலாக எழுந்து நிற்கின்றன. இதில் எந்தப் பிரச்சினைக்கு முன்னுரிமை என்ற கேள்விக்கே இடமில்லை. மக்கள் வாழ்வுரிமைத் திட்டங்களை முன்னெடுக்கும்போதே ஆட்சியின் அதிகாரமற்ற நிலையும் இணைந்தே நிற்கும். ராஜபக்சே ஆட்சி எத்தகைய நேர்மையோடு மக்கள் வழங்கிய தீர்ப்பை மதித்து செயல்படப் போகிறது என்பதையும் சர்வதேச சமூகம் இனி கவனிக்கவே செய்யும்.

ராஜபக்சேயின் நேரடி இராணுவ அடக்குமுறையில் தவித்த மக்களுக்கு, அதற்கு மாற்றாக ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி வந்திருக்கும் நிலையில் ஒரு ஆட்சிக்கான அதிகார உரிமையோடு ஈழ மக்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு போகும் ஒரு நல்ல வாய்ப்பாகவே இந்த மாற்றத்தை நாம் பார்க்கிறோம்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் தமிழகம் வாழும் தமிழர்களும் தமிழ் ஈழ மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுகளை முன்னெடுப்பதற்கு அங்கே அமைந்துள்ள தமிழர் ஆட்சி எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சவால்களுமே அடிப்படையாக அமையும். இந்த எதார்த்தங்களை கவனத்தில் கொண்டு ஈழத் தமிழர் அரசியல் விடுதலைக்கான செயல்பாடுகளை வகுத்துக் கொள்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும். ராஜபக்சே ஆட்சியானாலும், அல்லது வேறு எந்த சிங்களர் கட்சி ஆட்சியானாலும் அது தமிழர்களின் உரிமைகளை ஒரு போதும் அங்கீகரிக்கப் போவது இல்லை என்ற நிலையில் சர்வதேச சமூகத்தின் முன் இந்த ஒடுக்குமுறை ஆட்சியாளர்களை அடையாளம் காட்டுவதற்காக வலிமையான அரசியல் ஆயுதமாக ஈழத் தமிழர்கள் தங்கள் வாக்குரிமை வழியாக ஆட்சி நிர்வாக அமைப்பு ஒன்றை வழங்கியுள்ளார்கள் என்ற பார்வையோடு புதிய ஆட்சியை நாம் வரவேற்போம்!

பெரியார் முழக்கம் 26092013 இதழ்

You may also like...