பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க கோயில் தங்கத்தைப் பயன்படுத்துக! செப்.13 இல் கழகம் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

திவாலாகிக் கொண்டிருக்கும் இந்தியாவின் பொருளாதார சீர்கேடுகளைக் கண்டித்தும் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி யும் திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டங்களை செப்.13 ஆம் தேதி நடத்துகிறது. இது குறித்து கழகம் வெளி யிட்டுள்ள அறிக்கை:

நோயைப் பரப்பியவர்களே, இப்போது நோய்க்கு சிகிச்சை தேடுகிறார்கள்!

உலகமயமாக்கல் – புதிய பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டு வந்தது யார்? நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச நாடுகளின் நிலைக்கு உயர்த்தப் போகிறோம் என்று ‘டமாரம்’ அடித்தது யார்? காங்கிரஸ் ஆட்சிதான். ஆமாம்; ஆமாம்; நாங்களும் அதைத்தான் ஆதரிக்கிறோம் என்று பின் தொடர்ந்ததும் பா.ஜ.க. ஆட்சிதான்!

என்ன நடந்தது?

  • உள்நாட்டு தொழில் வளர்ச்சி முடங்கியது.
  • விவசாயம் நசிந்துப் போனது.
  • பெட்ரோல், டீசல் விலை – வாரந்தோறும் ராக்கெட் வேகத்தில் எகிறுகிறது.
  • அரசுத் துறை நிறுவனங்கள் நலிந்தன. அடி மாட்டு விலைக்கு பங்குகள் விற்கப்படுகின்றன.
  • மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவச் சேவைகளை ஆட்சியாளர்கள் கை விட்டனர்; தனியார் சுரண்டலுக்கு வழி விட்டனர்.
  • உலக வங்கியும் – சர்வதேச நிதியமும் கட்டளை போடுகின்றன; மக்கள் வாக்குகளைப் பெற்ற ஆட்சியாளர்கள் ‘சலாம்’ போடுகிறார்கள்.

மக்களுக்கான வாழ்வுரிமைகளுக்கு நெருக்கடி; பனியா-பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டுகின்றன; இதற்குப் பின்னணியாக ஆட்சியாளர்களின் ‘மூளை’யாக இயங்கும் சக்திகள் எவை?

நீண்டகால பாரம்பரியம் கொண்ட டாட்டா நிறுவனத்தின் அதிபர் ரத்தன் டாட்டா குட்டை உடைக்கிறார்.

“அரசு பல பொருளாதாரக் கொள்கைகளை அறிவிக்கிறது. அந்தக் கொள்கைகளை தனியார் நிறுவனத்தினர் தங்கள் சுயநலனுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள்; அல்லது அந்தக் கொள்கை களையே நடைமுறைக்கு வராமல் தடுத்து விடுகிறார்கள். இந்தச் சக்திகளின் பிடிகளில் சிக்கிக் கொண்டுவிட்ட அரசு, தான் அறிவித்த கொள்கைகளையே பின் வாங்கிக் கொள்கிறது. இதுவே பிரச்சனைக்குக் காரணம்.” – ரத்தன் டாட்டா (‘தினமணி’-29.8.2013)

அரசின் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவது யார்? அதிகார வர்க்கம் தான்! இந்த அதிகாரக் கும்பல் பன்னாட்டு நிறுவனங்களுக்காக கொள்கைகளை மடைமாற்றி விடுகிறது என்றும் – அந்த அதிகார சக்திகளின் பிடியில் ஆட்சியும் சிக்கிக் கொண்டிருக்கிறது என்றும் டாட்டா கூறுகிறார்.

இந்த அதிகாரச் சக்திகள் யார்? ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் – பங்கு முதலீட்டு வாரியத் தலைவர்கள் – பொருளாதார ஆலோசனை வழங்கும் அதிகாரிகள் – நிதித் துறை ஆலோசகர்கள் – சர்வதேச நிதி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகள் –  இப்படி நாட்டின் அதிகார மையங் களில் ஆதிக்கம் செய்துவரும் பார்ப்பன அதிகார வர்க்கம் தான்! இந்தப் பார்ப்பன அதிகார சக்திகள் தான் இப்போதும்கூட நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு டீசல் விலையை மிக அதிகமாக உயர்த்த வேண்டுமென்று ஆலோசனை கூறுகிறார்கள்; அந்நிய முதலீடுகளை அதிகரிக்க எதையாவது செய்தாக வேண்டும் என்கிறார்கள்.

கடந்த 9 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்த வரிச் சலுகை ரூ.30 லட்சம் கோடி; இப்போது ரூபாய் மதிப்புச் சரிகிறது; அந்நியச் செலாவணி என்ற அமெரிக்க டாலர் கையிருப்பு ரூ.29,000 கோடி மட்டும்தான்; அடுத்த ஆண்டு மார்ச் மாதம் – திருப்பித்தர வேண்டிய வெளிநாட்டுக் கடன் ரூ.17,200 கோடி போன்றவற்றை திருப்பி தந்துவிட்டால் மிஞ்சப் போவது ரூ.11,800 கோடி மட்டுமே; எப்படி பெட்ரோலியப் பொருட்களை, தங்கத்தை, மருந்துப் பொருள்களை இறக்குமதிச் செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

‘கடவுள்’ முதலாளிகளான திருப்பதி ஏழுமலையான், திருவனந்தபுரம் பத்மநாபசாமி, மும்பை சித்தி விநாயகன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கம் சுமார் 30,000 டன் என்று மதிப்பிடப்படுகிறது. திருப்பதியில் மட்டும் 1000 டன். இது இந்தியாவில் நடப்பு ஆண்டில் இறக்குமதியாக உள்ள தங்கத்தைவிட இரண்டு மடங்காகும்.

உலகிலேயே தங்கம் கையிருப்பு அதிகம் உள்ள நாடு அமெரிக்கா; அங்கே தங்கம் முழுதும் அரசுக் காப்பகத்தில்தான் இருக்கிறது. அதனால்தான் டாலர் தங்கமாகக் கருதப்படுகிறது. இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா. ரிசர்வ் வங்கியில் இருப்பதைவிட கோயில்களில் அதிகம் முடங்கிக் கிடக்கிறது; முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ரிசர்வ் வங்கிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் அது நாட்டின் பொருளாதாரக் கையிருப்பாக மாற்றப்படும். நெருக்கடியிலிருந்து – தற்காலிகமாக மீள முடியும்.

பக்தர்கள் காணிக்கையாக்கிய தங்கத்தை நாட்டுக்குப் பயன்படுத்துவதில் என்ன தவறு? குறைந்தபட்சம் அரசுக் ‘கடன் பத்திரம்’ எழுதித் தந்தாவது இந்தத் தங்கத்தை திருப்பித் தரும் கடனாக எடுத்துக் கொள்ள ஏன் முன்வரக் கூடாது?

இதைச் சொன்னால் தெய்வக் குற்றம் என்று பார்ப்பனர்கள் அலறுகிறார்கள்; தேச விரோதம் அனுமதிக்க முடியாது என்கிறார் சுப்பிரமணிய சாமி; கோயில் தங்கத்தை எடுத்தால் போராடுவோம் என்கிறார் விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா; இந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று மாநிலங்களவையில் கொக்கரிக்கிறார் பா.ஜ.க. வெங்கையா நாயுடு; இந்து விரோதம் என்கிறார் இராமகோபாலன்.

நாட்டின் பொருளாதாரத்தை அழிவுப் பாதைக்கு இழுத்துச் சென்ற ‘பிறவி முதலாளி’ களான பார்ப்பனர்கள், இப்போது இந்தச் சீர் கேட்டைச் சரி செய்ய, ‘கல் முதலாளி’ கடவுளிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பயன்படுத்தலாம் என்றால் கை வைக்காதே என்று மிரட்டுகிறார்கள்.

கல் முதலாளிகளான கடவுள் – கோயில்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பிறவி முதலாளி களான பார்ப்பனர்கள் – இந்திய பன்னாட்டு முதலாளிகளுக்கு நாட்டை அடகு வைத்து மக்களை வாட்டி வதைக்கும் – பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசே! கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பொருளாதார நெருக்கடியி லிருந்து மீட்பதற்குப் பயன்படுத்து! பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் சலுகைகளை நிறுத்து! உள்நாட்டு தொழில் உற்பத்தியைப் பெருக்கு!  – என்ற கோரிக்கைகளை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

பெரியார் முழக்கம் 12092013 இதழ்

You may also like...