வினாக்கள்… விடைகள்…
‘வினாயகன்’ சிலை பால் குடிப்பதாக புரளி. கோயில்களில் பக்தர்கள் கூட்டம். – செய்தி
பால் குடித்த வினாயகன், சிறுநீர் கழித்தானா?
தீண்டாமையில்லாத கிராமமாக பொள்ளாச்சி வட்டத்திலுள்ள சிங்கா நல்லூரை தமிழக அரசு தேர்வு செய்து பரிசு வழங்குகிறது. – செய்தி
எப்படியோ தீண்டாமை இல்லாத ஒரு கிராமத்தை அரும்பாடுபட்டு கண்டு பிடித்து விட்டீர்களே! மகத்தான சாதனை போங்க!
மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கு எல்லாம் சட்டங்களைக் கொண்டு வர முடியாது. – ‘துக்ளக்’ சோ
அப்போ, மூடநம்பிக்கைகளைப் பாது காப்பதற்கு சட்டம் கொண்டு வரலாமா?
மயிலாடுதுறை – மயூரநாதசாமி கோயில் கோபுரத்தில் தங்கக் கலசம் திருட்டு; போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப் பட்டது. – செய்தி
கவனம்! மோப்ப நாய் மாமிசம் சாப்பிடாத ‘சைவ’மாகவும், ‘அக்மார்க்’ இந்துவாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அறநிலையத் துறை அனுமதிக்காது.
வினாயகன் சிலை வைப்பதில் தகராறு; கோவையில் சிவசேனை நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய விசுவ இந்து பரிஷத்தினர் 8 பேர் கைது. – செய்தி
வினாயகனே! தேர்தல் நெருங்கி வரும் காலத்தில் இந்துக்கள் ஒற்றுமை சீர் குலைவதற்கு நீயே காரணமாக இருக்கலாமா?
தமிழக அரசின் அடக்குமுறைக்கு எதிராக தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். – மருத்துவர் ராமதாசு அழைப்பு
அழைப்பு அனைத்து கட்சியிலும் உள்ள வன்னியர்களுக்கு மட்டுமா? அல்லது அனைவருக்குமா?
திருச்சியில் மோடி பங்கேற்கும் மாநாட்டுக்கு டெல்லியிலிருந்து குண்டு துளைக்காத கார், குண்டு துளைக்காத மேடை திருச்சிக்குக் கொண்டு வரப்படுகிறது. – செய்தி
அயோத்தியிலிருந்து ரதம் ஏதும் வரல்லியா?
சென்னையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயந்திரரின் 79 ஆவது ஜெயந்தி விழாவில் பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் விருது வழங்கி கவுரவிக்கப் பட்டனர். – ‘தினமணி’ படத்துடன் செய்தி
இந்த விருதுக்கு ‘உயர்குடி ஒழுக்க சீலர்’ என்று பெயர் சூட்டினால் பொறுத்தமாக இருக்குமே!
பெரியார் முழக்கம் 26092013 இதழ்