அதுவானாலும் கிடைக்கட்டும்

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் பார்ப்பனருக்கு ஒரு “வஜ்ஜிரக் கோடாரி”. அதாவது தைரியமாய் யாரையும் வைவார். அப்படி வையவும் அவருக்கு சில சௌகரியமுண்டு. என்ன வென்றால் ……….. “சத்தியமூர்த்தி வைவதையெல்லாம் பொருட்படுத்துவதானால் உலகில் மனிதனுக்கு வேறு வேலை செய்ய நேரமே கிடைக்காது” என்று வசவு கேட்போர் ஒவ்வொரு வரும் நினைக்கும்படியாகவும், “சத்தியமூர்த்தி வைவதையெல்லாம் பொருட் படுத்தலாமா” என்று ஊரார் வையப்பட்டவரை கேட்கும்படியானதுமான ஒரு சௌகரியம் ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு உண்டு. இதனால் இன்னும் வைய முடியுமானால் ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வாய்வலித்தால் மாத்திரம் வசவுத்தடை ஏற்படுமேயொழிய மற்றவர்களால் தடை ஏற்படுத்த முடியவே முடியாது. இந்த வசவைப் பார்த்து ஆனந்தப்படும் பாக்கியம் நமது பார்ப் பனர்களுக்கு யிருப்பதால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியவர்கள் ஒரு வஜ்ஜிரக் கோடாரி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐயோ பாவம்! “அவ்வஜ் ஜிரக் கோடாரிக்கு” அவரால் வேலை வாங்கிக் கொண்ட சுயராஜ்ஜியக் கட்சியார் சட்டசபைத் தலைவர் ஸ்தானம் கொடுக்க மறுத்து விட்டார்கள். தொலைந்து போகட்டும் அதுதான் பார்ப்பனர் என்கிற காரணத்திற்காக கொடுக்கவில்லை என்று சிலரும் சத்தியமூர்த்தி சட்டசபைத் தலைவரானால் சட்டசபை மெம்பரை ராஜிநாமா கொடுத்து விடுவதாக மிரட்டியதால் கொடுக் கப்படவில்லையென்று சிலரும் (சில சர்க்கார் உத்தியோக மெம்பர்கள் கூட மிரட்டினார்களாம்) சிலர் தங்களுக்குக் கொடுக்காவிட்டால் கட்சியைவிட்டு வெளியேறி விடுவதாகப் பயமுறுத்தியதால் கொடுக்கப்படவில்லை என்று சிலரும் முன்னாலேயே மந்திரி வேலை கொடுப்பதாய் வாக்களித்ததால் மந்திரி வேலை ஒப்புக்கொள்ளாததால் அதற்கு பதிலாக 5500ரூ. இல்லா விட்டாலும் 2000 ரூபாயாவது வேண்டாமா என்று தலைவர் வேலையாவது கொடுக்க வேண்டுமே என்று ஏக தலைவர் நாணயத்தைக் காப்பாற்ற பார்த்தாலும் கிடைக்காமல் போய்விட்ட தென்றும் சிலர் சொல்லிக் கொள் வதால் ஏதாவதொன்றினாலோ எல்லாவற்றினாலோ கிடைக்காமல் போயிருக் கலாம். அதுதான் போகட்டும் என்றாலும் கட்சித் தலைவர் பதவியாவது கிடைக்க வேண்டாமோ என்று பார்த்தால் அதற்கும் ‘பார்ப்பனர் கூடாது’ என்று சிலர் சொன்னதாலும் “சத்தியமூர்த்தி கட்சித் தலைவரா அப்படியானால்
எனக்கு கட்சியும் வேண்டாம் சுயராஜ்யம் கூட வேண்டாம்” என்று சிலர் சொன்னதாலும் “எனக்கும் வேண்டாம், சத்தியமூர்த்திக்கும் வேண்டாம், வேறு யாருக்குக் கொடுத்தாலும் சரி” என்று சிலர் சொன்னதாலும் ஆந்திரா, தமிழ்நாடு என்கிற நாட்டு வாதத்தாலும் ஏக தலைவரான ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய் யங்காருக்கே ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு தலைவர் பட்டங்கட்டுவதில் பயம் ஏற்பட்டதாலும் அதாவது வேறு கட்சியார் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை ஏமாற்றி விட்டால் பிறகு தம்முடைய ‘ஏக தலைவர்’ ஸ்திதிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்ததாலும் இன்னும் பல அய்யங்கார் பார்ப்பனர்களின் போட்டியிலும் கிடைக்காமல் போய்விட்டது. ஆகவே இந்த கோபத்தின் பலனாய் கட்சி உபதலைவர் பதவியைக் கூட காலால் உதைத்துத் தள்ளி விட்டார். கடைசியாக ஊர் ஜனங்கள் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை வெறும் சத்தியமூர்த்தி என்று எண்ணவும் கூப்பிடவும் ஏற்பட்டதால் இப்போது கோபம் – தெளிந்தவுடன் ஏதாவது இருக்கட்டும் என்கிற ஞானோதயமாகி ஏக தலைவரை உபதலைவர் பட்டமானாலும் இருக்கட்டும் என்று கேட்டுக் கொண்டதால் ஏக தலைவரும் “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி” என்பது போல் பாவம் ஒரு நாயுடுவைப் பிடித்து ஏமாற்றி அவரிடம் ராஜினாமா வாங்கிவிட்டார். இந்தப் பட்டத்தை சீக்கிரத்தில் ஸ்ரீமான் சத்திய மூர்த்திக்கு சூட்டி விடுவார். ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்களும் அதுவா னாலும் கிடைக்கட்டும் என்கிற ஆசையின் பேரில் தலையை நீட்டிக்கொண்டி ருக்கிறார். வகுப்புவாதம் ஒழிந்த தன்மையும் உத்தியோக ஆசை வெறுத்த தன்மையும் அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டை உடைய தன்மையும் எவ்வளவு தூரம் சுயராஜ்யக் கட்சியில் துலங்குகிறது என்பதை இதிலிருந்தே எல்லோ ரும் அறிந்து கொள்ளலாம். “ஆத்மஸ்துதி, பரநிந்தை, திரவிய அபேiக்ஷ ஆகிய மூன்று துர்க் குணங்களையும் வெறுத்து நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நான்கு கலைக்கியானம் தெரிந்த ஞானபண்டிதனான எனக்கும் இரண்டணா ஒன்றும் தெரியாத இந்த தற்குறிக்கும் இரண்ட ணாவா?” என்று ஒரு சாஸ்திரி கேட்டது போல் இருக்கிறது.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 23.01.1927

You may also like...

Leave a Reply