யாருக்கு புத்திவந்தது?
சில பார்ப்பனப் பத்திரிகைகளும் அவற்றை குருவாகக் கொண்ட சில பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் பார்ப்பனரல்லாத கட்சிக்கு இப்பொழுது தான் புத்திவந்து கதரைத் தங்கள் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகின்றதுகள். இதுகளுக்கு உண்மையில் புத்தி இருந்தால் சுயராஜ்ஜியக் கட்சி காங்கிரசுக்கு இப்பொழுது தான் கொஞ்சம் புத்தி வந்தது என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் கதரைக் கட்டாயமாக உடுத்த வேண்டும் என்று முன்னெல்லாம் மகாத்மா கதறின காலத்தில் முடியாது. பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்காக மாத்திரம் ஓட்டு கேட்கும் போது கட்டிக் கொள்வோம் என்று சொன்ன யோக்கியர்கள் மதுரை மகாநாட்டில் கதரைப் பார்ப்பனரல்லாதார் கட்சியார் ஏற்றுக் கொண்டதும் இனி பார்ப்பனரல்லாதார் எல்லாரும் கதர் கட்டி விடுவார்களே என்கிற பயம் தோன்றி நாமும் அதன் பெருமை அடையலாம் என்கிற ஆத்திரத்தின் பேரில் இவ்விடத்திலிருந்து சில பார்ப்பனர்களின் தந்திகள் அஸ்ஸாம் காங்கிரசுக்குப் போனதும் உடனே காங்கிரசிலும் கதர் ஒப்புக் கொள்ளப்பட்டதாக வேஷம் போட நமது பார்ப் பனர்கள் ஒரு தீர் மானம் செய்து விட்டார்கள். இதிலிருந்து யாருக்கு புதிதாய் தந்திரபுத்தி வந்தது? காங்கிரஸ் பார்ப்பனருக்கா? பார்ப்பனரல்லாதாருக்கா? என்பதை நடுநிலைமையிலிருந்து யோசித்துப்பார்க்கவும்.
குடி அரசு – கட்டுரை – 16.01.1927