மதுரைத் தீர்மானங்கள்
மதுரைத் தீர்மானத்தைப்பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர் களும் என்னதான் பரிகாசமாகவும், அலட்சியமாகவும் பேசினாலும் பார்ப்பன ரல்லாதாரின் சுயமரியாதை, விடுதலை, செல்வநிலை ஆகிய எல்லாவற்றினது மார்க்கங்களும் அம்மதுரைத் தீர்மானங்களிலேயே அடங்கிக் கிடக்கின்றன என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதை முதலியவை மாத்திரமல்லாமல் நமது நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் சுயமரியாதையும், விடுதலையும், செல்வமும் அத்தீர்மானங்களிலேயே அடங்கிக் கிடக்கின்றன. அவை மாத்திரமல்லாமல் நமது அரசியல் முறையில் கட்டுண்டு அனுபவித்து வரும் கொடுமைகளுக்கும் நிவர்த்தி மார்க்கம் அவற்றிலேயே அடங்கியிருக்கின் றன. அன்றியும் நாம் நம் நாட்டு மக்கள் என்றே சொல்லிக் கொள்ளும் பார்ப்ப னர்களால் மிதிக்கப்பட்டு அனுபவித்து வரும் இழிதகைமைகளிலிருந்து மீளும் நெறியும் அவற்றிலேயே அடங்கிக் கிடக்கின்றது. இன்னமும் இவை போன்ற மக்களின் நாட்டின் கோடிக்கணக்கான கொடுமைகள் என்னும் வறுமை முதலிய வியாதிகளுக்கும் ‘சஞ்சீவி’ என்று சொல்லத்தக்கதேதான் நமது
காந்தியடிகள் இந்தியாவின் எல்லாக் குறைகளும் நீங்குவதற்காக கண்டுபிடித்த “பர்டோலி தீர்மான”மாக்கும் நமது மதுரை மகாநாட்டின் தீர்மா னங்கள்! ஆதலால் அதை நிறைவேற்றுவதில் கவலை கொள்ளுதல்தான் மக்கள் சுயமரியாதைக்கும், விடுதலைக்கும், செல்வத்திற்கும் தொண்டு செய்வ தாகும்.
தீண்டாமை
தீண்டாமையை ஒழித்துவிட்டால் சுயமரியாதையின் எதிரிகளான நமது பார்ப்பனருக்கு நமது நாட்டில் இடமுண்டா? அவர்கள் “பூசுரராக” நமது நாட்டில் வாழ முடியுமா? தீண்டாமை, உயர்வு தாழ்வு என்கிற தத்துவம் ஒன்றி னாலல்லது நமது பார்ப்பனர்களுக்கு இந்நாட்டில் வேறு எதனாலாவது யோக்கியதை இருக்கிறதா? உலகத்திலுள்ள இழிவுகளெல்லாம் ஓருருவ மெடுத்தாற் போற் றோன்றும் ஒரு வகுப்பார் ஆதிக்கத்திலிருக்கக் காரணம், இந்த உயர்வு – தாழ்வு என்கிற போலித் தத்துவமல்லாமல் வேறென்ன? “அரசியலிலோ”, “ஆன்மார்த்தத்திலோ” பார்ப்பனர்களின் வாழ்க்கையில் எவ்வித இழிகுணம் அவர்களிடமில்லையென்று சொல்லமுடியும்? எவ்வித மான உயர்குணம் அச் சமூகத்தாரிடத்தில் இருப்பதாகச் சொல்ல முடியும்? உண்மையில் சுருதிப்படி அவர்களுடைய உரிமையான தொழிலையே பிச்சையெடுப்பது என்பதாக ஏற்படுத்திக்கொண்டார்கள். அதற்கு மேன்மை கற்பித்துக்கொண்டு மானாபிமானமின்றி பணம் சம்பாதிக்க வழி செய்து கொண்டார்கள். உண்மையில், இந்த அடிமைத்தன்மையானதும், பிறரை ஏய்ப்பதால் மாத்திரம் வாழத்தக்கதுமான தொழிற்றுறைகளில் அநுபோகம் பெற்று வெகு சமர்த்தர்களாகி விட்டார்கள். அவர்களுடைய நாகரீகங்களோ சொல்லத் தேவையில்லை. சிறு குழந்தைகளைக் கல்யாணஞ் செய்து கொள் வார்கள். பதின்மூன்று வயதிலேயே பிள்ளை பெறும்படி செய்துவிடுவார்கள். அது தாலியறுத்துவிட்டால் தலை மொட்டையடித்து குரூரப்படுத்தி விடுவார் கள். தயவு, தாட்சண்ணியம், அன்பு என்கிற குணங்கள் பூதக் கண்ணாடி வைத்துத் தேடினாலும் கிடைக்காது. மற்றொருவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்தால் தங்கள் வீட்டிலுள்ள தண்ணீரெல்லாம் தோஷமாகி விடும் என்கிற கொள்கையுடைய கருணையாளர்கள். இன்னும் எத்தனையோ குற்றமுள்ளவர்களாயிருப்பதோடு இக்குற்றங்களை மற்றவர்களுக்குள்ளும் புகுத்துவதே தங்கள் ‘உலக சேவை’ யென்று நினைப்பவர்கள். இப்படிப் பட்டவர்கள் இன்று ஆதிக்கம் பெற்றிருப்பதன் காரணம் தீண்டாமை – உயர்வு – தாழ்வு என்கிற தந்திரங் களால்தானே அல்லாமல் வேறு என்ன? ஆதலால், இத்தந்திர சாதனங்கள் ஒழிக்கப்பட்டால் அன்றே மக்களுக்கு ‘சுயமரியாதை’ உதயமாகிவிடும். இதன் பயனாய் ‘பிராமணர்’, ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ என்ப வர்கள் ஒழிவதோடு மக்களெல்லாரும் சகோதரர்களாகவும் காணப்படு வார்கள்.
கதர்
அதுபோலவே ‘கதரும்’ நமது நாட்டு மக்களைப் பிடித்த வறுமையை அடியோடு ஓட்டி உண்மையான விடுதலையையும், மனச்சாட்சியையும் அளிக்கும். ‘கதர்த்திட்டம்’ என்பது வெறும் கதரையே முதன்மையாய் கொண்டதல்ல. நாட்டின் விடுதலைக்கு பெரும் விரோதியான வறுமையை வேரோடு அழிப்பதற்காதாரமானவை எவையென்றால் கைத்தொழிலும் அதன் மூலம் கிடைக்கும் பொருள் வருவாயுமேயாகும். இதுகாலை, அவ்விஷயத்தில் நமது நாட்டின் நிலைமையென்ன? நாளுக்கு நாள் நம் நாட்டுக் கைத்தொழில்கள் அருகிக்கொண்டே வருகின்றன. நம் நாட்டு மக்களில் பார்ப்பனர் நீங்கிய மற்றையோர் 100க்கு 99 பேர் கைத்தொழில் மூலமே வாழ்ந்து வந்தவர்கள். பழங்கால வாழ்வில் நாட்டின் செல்வமானது விவசாயம், கைத்தொழிலாகிய ரூபமாயிருந்ததேயன்றி பணம், காசு, வீடு முதலிய சொத்துக்கள் ரூபமா யிருந்ததில்லை. இப்பொழுது அச்செல்வமான கைத்தொழில் அடியோடு ஒழிந்துவிட்டது. விவசாயமும் கூட வாழ்விற்காக வென்றல்லாமல் பணத்திற்காகவென்றாகிவிட்டது. இதன் மூலம் நம்நாட்டின் இயற்கைக்கு விரோதமான நிலையேற்பட்டதால் நமது நாட்டையே வறுமை முற்றுகை போட்டுக்கொண்டு விட்டது. முதலாவது கைத்தொழில்கள் எவ் வழிகளில் அருகிவிட்டன வென்பதைக் கவனித்துப் பாருங்கள்!
நம்நாட்டு மக்களின் கைத்தொழில் பஞ்சு அறைத்தல் (பஞ்சில் கொட்டை பிரித்தல்) நூல் நூற்றல், நெய்தல், சாயம் போடுதல், பூ வேலை செய்தல், துணி தைத்தல், உலோகங்களின் மூலம் விளக்கு, பாத்திரம் வகையறா செய்தல், ஆகாரப் பொருள் சுத்தம் செய்தல், அதாவது நெல் குத்து தல், மாவறைத்தல், கொல் தச்சு வேலை, மாட்டுவண்டி, குதிரை வண்டி செய் தல், லாடம் அடித்தல், இவற்றை ஓட்டுதல், இந்த மாடு, குதிரைகளுக்கு புல் பிடுங்கிக் கொண்டு வந்து போடுதல், குதிரை தேய்த்தல், மக்களுக்கு வைத் தியம் மருந்து செய்தல், மருந்து விற்றல் முதலிய அநேக காரியங்களில் மக் கள் ஈடுபட்டு யாவரும் தொழில் செய்து பிழைத்து வர முடிந்தது. உதார ணமாக ஆகாரத்தை எடுத்துக் கொள்ளுவோம். ஒரு வேளை 1-க்கு 500 பேர் சாப்பிடக்கூடிய ஒரு மூட்டை அரிசிக்கு கையால் குத்துவதானால் 2 மூட்டை நெல் குத்துவதன் மூலம் 4 பெண்கள் குத்தவும் நான்கு முக்கால் – மூன்று பட்டணம் படி அரிசி போகவும் செய்வதால் குறைந்தது அதில் 10 பேருக்குச் சாப்பாடு கிடைக்கும். இரண்டாவதாக உடையை எடுத்துக்கொள்ளுவோம்.
500 பேருக்கு 500 ஜதை வேஷ்டி என்பதாக குறைத்து வைத்துக் கொண்டாலும் ஜதை ஒன்றுக்கு 6 மாதத்துக்கு 180 நாள்களுக்கு வருவதாய் வைத்துக்கொள்ளுவோம். இது கதராயிருந்தால் 1 ஜதை வேஷ்டி 2 ராத்தல் பஞ்சு வீதம் 500 ஜனங்களுக்கு 1000 ராத்தல் பஞ்சு ஆகும். இப்பஞ்சை பருத்தியிலிருந்து பஞ்சு வேறாக கொட்டை வேறாகப் பிரிக்க அதாவது 2 பாரம் பஞ்சுக்கு அறை கூலி 20 ரூபாய் கிடைக்கும். இது கை மணையால் அறைக்கப்பட்டால் இந்த 20 ரூபாயுக்கு 200 பேர் ஒரு வேளை அரிசி சாதமாக நன்றாய் சாப்பிடலாம். இந்த பஞ்சை 1,000 ராத்தல் நூலாக நூற்பதில் ராத்தல் ஒன்றுக்கு ஐந்து அணா வீதம் 312 – 8-0 ரூபாய் கூலி கிடைக்கும். இந்த ரூபாயைக் கொண்டும் ஒரு நாளைக்கு 3125 பேர் நல்ல அரிசி சாதம் சாப்பிடலாம். இந்த 1,000 ராத்தல் நூலைக் கொண்டு 500 பேருக்குச் சராசரி 2000 கஜம் துணி வேஷ்டி நெய்வதில் கஜத்துக்கு 0- 2-6 வீதம் 2,000, 0-2-6 அணாவாகிய 312 – 8-0 ரூபாய் நெசவு கூலி கிடைக்கும். இதன் மூலமும் குறைந்தது 3125 பேர் நல்ல அரிசி சாதம் சாப்பிடக்கூடும். இவர்களில் பெண்களாயிருந்து சேலை கட்டல் சாயம் போடல் சட்டைக்கும் ரவுக்கைக்கும் முதலியவைகளில் அதிகமாகும் துணிகள் இதுகளுக்காக 4ல் 1 பாகம் அதிகப்படுத்தலாம். இந்த வகையில் 1500 பேருக்கு குறையாமல் தினம் சாப்பாடு கிடைக்கும். ஆகவே 500 பேர்களின் துணிக்கு ஏற்படும் கூலியில் மாத்திரம் 8000 பேருக்குச் சாப்பாடு கிடைக்கும். இதை 6 மாதமாகிய 180 ல் வகுத்தால் சராசரி தினம் 45 ஆகும். அதாவது ஆகாரத்திற்காக நெல் குத்துவதில் 100 -க்கு 2 பேர் வீதமும் துணிக்கட்டுவதில் தினம் 100 -க்கு 9 பேர் வீதமும் சாப்பிடக்கூடிய கூலி கிடைக்கும். ஆக இவ்விரண்டு காரியங் களை மாத்திரம் யந்திரத்தினாலல்லாமல் மக்களைக் கொண்டே கைத்தொழில் மூலமாக செய்விப்பதில் 100-க்கு 11 பேர் நல்ல சாப்பாடாக சாப்பிடத் தகுந்த மாதிரியும் 100-க்கு 20 பேர் கஞ்சியாகக் குடிக்கக் கூடிய மாதிரியும் வேலை கிடைக்கிறது என்றால் மற்றபடி நாம் மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு வேலை மற்றும் நம் நாட்டு வேலைகளைப் பற்றி சரிவரக் கணக்குப் போட்டு பார்ப்பதானால் ஏறக்குறைய 100 -க்கு 100 பேர் சாப்பிடக் கூடிய அளவு கூலி கிடைக்க வேண்டிய தொழில்கள் இருந்து வந்தன. இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து வருகின்றன. கண்ணாடி சாமான், பாத்திர பண்டங்கள் முதலியவைகளினால் எவ்வளவு தொழில்கள் கெட்டு மக்கள் ஜீவனம் செய்ய முடியாமல் போய்விட்டது.
ஆகவே, யந்திரங்களாலும், வெளிநாட்டிலிருந்து சாமான்கள் தருவிப் பதனாலுமே நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வறுமையால் அவஸ்தைப் பட்டு மனச்சாட்சி, மானம், கற்பு, ஒழுக்கம் முதலியவைகள் இழக்க நேரிட்டி ருக்கின்றதேயல்லாமல் சட்ட சபையில் தோற்றதும் கவர்னர், நிர்வாக சபை மெம்பர், மந்திரி, ஐகோர்ட் ஜட்ஜு முதலிய வேலைகள் கிடைக்காமல் போவ தினாலும் அல்லவென்பது உண்மையான தேசாபிமானமுள்ளவர்களுக்கு விளங்காமற்போகாது.
ஆகவே, கூடியவரையிலாவது ஏழைகளைக் காப்பாற்றி தரித்தி ரத்தை ஓட்டுவதுதான் கதரின் ரகஸியமேயொழிய முரட்டுத்துணி உடுத்துவது என்ற வேஷக் கொள்கையல்ல.
மதுவிலக்கு
அதுபோலவே, மதுபான விஷயமும் நமது நாட்டின் அடிமைத்தனத் திற்கும், அந்நிய ஆட்சியின் வளர்ச்சிக்கும் ஆதாரமாயிருக்கிறது. மது பானத்தினால் தான் நமது ஏழை மக்கள் அதாவது கொஞ்ச நஞ்சம் மீதியுள்ள தொழிலாளிகள் வேலை செய்து, கூலி பெற்றாலும் பட்டினி கிடக்கவும் மது வெறியினாலேற்படும் நஷ்டத்தால் பெருங்குடித்தனங்கள் அழியவும் அதனா லுண்டாகும் விவகாரங்களாலேயே பார்ப்பனர்கள் உத்தியோகம், லஞ்சம் முதலிய வழிகளில் நமது பொருளைக் கொள்ளை கொள்ளவும், இன்னும் எத்தனையோ வகைகளில் கஷ்ட நஷ்டப் படவும் ஏற்படுகிறது.
ஆகவே, மதுரைத் தீர்மான நிறைவேற்றத்தால் நமது நாட்டில் 100-க்கு 90 பேர்களுக்கு மேலாயிருக்கும் பார்ப்பனரல்லாதார்களுக்கே முக்கிய குறை களான சுயமரியாதையற்றிருத்தல், மனச்சாட்சியின்றியிருத்தல், பட்டினி கிடத்தல் முதலிய எல்லாக் குறைகளும் நீங்கி அவர்களுக்கே எல்லா வழிகளி லும் மிகுதியும் அனுகூலமாக இருப்பதால் இத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டியது நம்முடைய கடமையாயிருக்கிறது. இத்திட்டங்களை காங்கிர சிலிருந்து மெல்ல மெல்ல வெளியாக்க வேண்டிய அவசியமும் இத்திட் டத்தை நடத்தக் காங்கிரஸைக் கட்டிக்கொண்டிருந்த மகாத்மாவை காங்கிரசை விட்டு வெளியாக்கச் சூழ்ச்சி செய்ய வேண்டிய அவசியமும் நமது பார்ப்ப னருக்கு ஏற்பட்டதும் இந்தக் காரணங்களால்தான். சுருக்கமாகச் சொல்வதா னால் இத்திட்டங்களால் பார்ப்பனரல்லாதாருக்கே அனுகூலமும் பார்ப்பனர் களுக்குப் பெருத்த ஆபத்தும்தான். ஆதலால், பார்ப்பனரல்லாதார் விஷயத் தில் உண்மையான கவலையுள்ளவர்களும் சுயமரியாதையில் லட்சியமுள்ள வர்களும் ஏழை மக்களிடத்திலும், தொழிலாளிகளிடத்திலும் கருணையுள்ள வர்களும் செய்ய வேண்டிய முக்கியமான வேலை மதுரை மகாநாட்டுத் தீர்மானங்களை நடத்திக்கொடுப்பதேயாகும் என்று மறுபடியும் சொல்லு வோம்.
மற்றபடி, அர்த்தமில்லாத வார்த்தைகளான ‘சுயராஜ்யம்’, ‘உரிமை’, ‘தேசீயம்’, ‘சர்க்காருக்கு முட்டுக்கட்டை போடுதல்’ ‘சிங்கத்தின் குகையில் போய் அதன் வாயைப் பிளத்தல்’, ‘பூரண சுயராஜ்யம்’ முதலிய அரசியல் பரிபாஷைப் பெயர்களைச் சொல்லிக் கொண்டு திரியும் வேலைகளை பார்ப்ப னரைப் போலவே நம்மிலும் உள்ள சில வயிற்றுச்சோற்று தேசபக்தர்களுக்கு விட்டு விடலாம். பார்ப்பனரல்லாதாருக்குப் பார்ப்பனர் கோரும் “பார்ப்பன ஆதிக்க சுயராஜ்யம்” ஒரு சிறிதும் தேவையில்லை. அதில் எந்தப் பார்ப்பன ரல்லாதார் கலந்து கொள்வதும் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு துரோகமே யாகும். பார்ப்பனரல்லாதாருக்கு வேண்டியதெல்லாம் மகாத்மா கோரும்படி யான நிர்மாணத்திட்டத்தை நிறைவேற்றுதல் என்னும் சுயராஜ்யம்தான். அது தான் மதுரைத் தீர்மானம்! அதுதான் மதுரைத் தீர்மானம்!! அது தான் மதுரைத் தீர்மானம்!!!
குடி அரசு – தலையங்கம் – 23.01.1927